Translate

கசப்பை மதுரமாக்கும் இயேசு, உங்கள் அருகில் ..!!!

       இஸ்ரவேல் ஜனங்கள் கானானை நோக்கி பயணம் செய்தபோது ஒரு துரவைக் கண்டனர். யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை; கர்த்தரையும் நோக்கி பார்க்கவில்லை; குதுகலத்துடன் நீரை அருந்தத் துவங்கினர். ஆனால் அந்த தண்ணீர் மிகவும் கசப்பாக இருந்தது. நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது உண்டு. நாம் நல்லது என்று எண்ணித் துவங்கிய காரியங்கள் சிலநேரங்களில் தீயதாகவும் சமாதானத்தை தரும் என்று செய்தவை நம் அமைதியைக் குலைப்பதாகவும் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று நம்பி துவங்கியவை அதை அதலபாதாளத்துக்கு தள்ளிவிடுவதாகவும் காணப்படக்கூடும். நாம் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அது கர்த்தருக்கு பிரியமாக இருக்குமா? வேதத்தின் அடிப்படையில் அது சரிதானா!? என ஆராயவேண்டும். வேதம் சொல்லுகிறது. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். (சங் 37:5)

    அவர்கள் அறியாமையினால் அதை செய்தபோதிலும், அன்புமிக்க தேவன் அந்த துரவின் அருகிலேயே அதன் கசப்பை மதுரமாக்கும் மரத்தை வைத்திருந்தார். அவர்கள் கர்த்தரை நோக்கிப்பார்த்தபோது; அவரது ஆலோசனையின்படி அந்தமரத்தை தண்ணீரில் போட்டபோது; தண்ணீர் மதுரமாக மாறியது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எல்லா பிரச்சினைக்கும் காரணமாக இருப்பது நீங்கள் ஆலோசனையின்றியோ உணர்ச்சிவசப்பட்டோ செய்த செயல்களாக இருக்கலாம்.! அவற்றில் பலவற்றின் தீர்வுக்கு மாற்றுவழி என்ற ஒன்றே இல்லாமல் இருக்கலாம்.!   கலங்கவேண்டாம்..!!  உங்கள் வாழ்க்கையில் எத்தனை கசப்பு வந்தாலும் பாசத்தோடு அந்த கசப்பை மதுரமாக்கக்கூடிய ஒரு மரம் உங்கள் அருகில் உண்டு. உங்களை வேதனையில் ஆழ்த்தும் மாரா குடும்ப வாழ்க்கையா? தொழிலா? கடன் பிரச்சினையா? கல்வியா? எதுவாக இருப்பினும் கசப்பை மதுரமாக்கும் இயேசு உங்கள் அருகில் உண்டு. இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குகிறதும் இல்லை தூங்குகிறதும் இல்லை.

    கர்த்தரின் சமுகத்தில் உங்களை தாழ்த்துங்கள். அவரிடம் மன்றாடுங்கள். மாராவின் கசப்பை மாற்றிய தேவன் உங்கள் வாழ்கையில் நீங்கள் அனுபவிக்கும் கசப்பை நீங்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை மாற்றவல்லவர். நீங்கள் அவரை தேடிச்செல்ல தேவையில்லை. இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன் (வெளி 3:20) சகோதரனே.! சகோதரியே.! இன்றே உங்கள் இருதயத்தின் கதவுகள் திறக்கப்படட்டும். அவர் உங்கள் கசப்புகளை மதுரமாக மாற்றுவார். உங்களை வேதனைப்படுத்திய அதே சூழ்நிலையை உங்களை சந்தோஷப்படுத்தும் சூழ்நிலையாக மற்ற இயேசு கிறிஸ்துவால் கூடும். சர்வ வல்லமையுள்ளவரை உங்கள் வாழ்க்கையில் அனுமதியுங்கள்; உங்கள் தோல்விகள் வெற்றிகளாக மாறும்.

சிந்தனைக்கு:-
... இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும்  நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். (எபி 3:7-8)

குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள்.!

    குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.  அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார். என்று சங்கீதம் 45 : 10 சொல்லுகிறது. தேவனுக்கும் மனிதனுக்குமான உறவை வேதம் பலவிதமான உவமைகளின் மூலமாக விளக்குகிறது. உதாரணமாக தாய்க்கும் பிள்ளைக்குமான உறவாகவும்; மேய்ப்பனுக்கும் ஆட்டுக்குமான உறவாகவும்; கோழிக்கும் அதன் குஞ்சுக்கும் இடையேயான உறவாகவும் என இந்த பட்டியல் நீளுகிறது. இந்த வசனம் ராஜா மற்றும் ராஜாவுக்கு நியமிக்கப்பட்ட கன்னிகைக்கும் இடையான உறவாக நம்மை உவமித்து உயிருள்ள திருச்சபையும் தேவன் வசிக்கும் ஆலயமுமாகிய நமக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறது.

    மனிதன் பாவம் செய்வதினால் பாவியாவதில்லை அவன் பாவியாக பிறப்பதினால் பாவம் செய்கிறான். சங்கீதக்காரன் சொல்லுகிறான் இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.(சங் 51:5) ... நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். (எபே 2:3) பாவம் செய்வது மனித சுபாவம்.

    தேவன் நம்மை இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு (2பேது 1:4) அழைத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு பரிசுத்தமாக்கப்படும்போது, தேவன் வெறுக்கிற நம்மில் புரையோடிப்போயிருக்கும் பாவ சுபவாவங்கள் நம்மைவிட்டு முற்றிலும் நீக்கப்படுகிறது. கர்த்தர் விரும்புகிற நற்குணங்கள் நம்மிலிருந்து புறப்படும்போது நாம் முற்றிலும்  கர்த்தருக்கு சொந்தமானவர்களாக மாறுகிறோம்.நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க  நியமித்தபடியால்... (2கொரி 11:2) என அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்.

    சகோதரனே.! சகோதரியே.! உறவினர்களையும் வீட்டையும் மறப்பது எவ்வளவு கடினமோ பாவ சுபாவத்தை நம்மைவிட்டு அகற்றுவதும் அவ்வளவு கடினமான காரியமாகும். ஆனால் அற்பணிப்பு உணர்வுடனும் தேவபலத்துடனும் அதை செய்யும்போது நாம் தேவனுக்குரியவர்களாக தேவனுடைய உடைமையாக மாறுகிறோம். திருமணமான பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எப்படி ஒரு கணவனுடைய பிரச்சினையோ அதுபோல நீங்களும் நானும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவனுடைய பிரச்சினைகளாகிறது. வேதம் சொல்லுகிறது. உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். (சக 2:8)

சிந்தனைக்கு:-
  • அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். (சங் 91:14)
  • இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் (மத் 21:4)


ஸ்திரீயே.! நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே.!

    விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சென்னார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத்தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். (யோவா 8:3-11)

    ஆபிரகாமின் குமாரத்தியான ஸ்திரி; தேவனிடத்திலிருந்து வாக்குத்தத்தங்களை பெற்ற சந்ததி; ஏதோ காரணங்களினால் பாவத்தில் வீழ்ந்துவிட்டது. இன்று அவள் மேசேயின் கட்டளைப்படி கல்லெறிந்து கொல்லப்படவேண்டியவளாக நின்று கொண்டிருக்கிறாள். மோசேயைவிட பெரியவரான, நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவிடம் வந்தபோது; அவருடைய இரக்கம் அவள்மீது பிரகாசித்தபோது; அவளை குற்றம்சுமத்தியவர்கள் கொலைசெய்ய காத்திருந்தவர்கள் யாவரும் பின்வாங்கி சென்றுவிட்டனர். அவள் மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாள். 
 
    சகோதரனே.! சகோதரியே.! கொலைக்கு நியமிக்கப்பட்ட பாவியான ஸ்திரீயை விடுவித்த அதே இயேசு பாவத்தின் பிடியிலிருந்து; பாவ பழக்கவழக்களிலிருந்து; மரணக்கட்டுகளிலிருந்து; மரணபயத்திலிருந்து; வியாதியின் கொடூரத்திலிருந்து; உன்னை நெருக்கிக்கொண்டிருக்கும் சகலவிதமான போராட்டங்களிலிருந்து உன்னை விடுவிக்க வல்லவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஆனால் பாவியான ஸ்திரிக்கு இயேசு கிறிஸ்து கொடுத்த அன்புக் கட்டளை ஒன்று உண்டு இனிப் பாவஞ்செய்யாதே என்பதே அது. அல்லேலூயா.!

சிந்தனைக்கு:-
  • கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். (சங் 102:19)
  • ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவா 8:36)

கிபியோனியருக்காக நியாயம் செய்த கர்த்தர்..!

    தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான். கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார். (2சாமு 21:1) *யார் இந்த கிபியோனியர்? இவர்களை கொன்றுபோட்டதற்காக ஏன் பஞ்சம் வரவேண்டும்?*  அதுவும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட இஸ்ரவேலின்மீது.!!!

    இஸ்ரவேல் ஜனங்கள் அணியணியாக எகிப்திலிருந்து புறப்பட்டு கானானை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, கர்த்தர் அவர்களிடம் கனான் மற்றும் அதற்கு அருகாமையிலுள்ள மக்களிடம் எவ்வித உடன்படிக்கையும் செய்யவேண்டாம் என்று எச்சரித்திருந்தார். கானானுக்கு அருகாமையில் உள்ள கிபியோனின் குடிகள் இதை கேள்விப்பட்டபோது அவர்கள் பயப்பட்டதினால்  தங்களை வெகு தொலைவில் வசிக்கும் ஜனங்களாகக் காண்பித்து இஸ்ரவேலர்களிடம் உடன்படிக்கை செய்யும்படி சென்றனர். இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரிடம்  ஆலோசனை கேட்காமல் அவர்களோடு உடன்படிக்கை செய்தனர் (யோசு 9:4)     இந்த சம்பவங்கள் நடந்து வெகுகாலத்திற்குபின்பு பிறந்து வளர்ந்த சவுல் ராஜாவானபோது அந்த உடன்படிக்கைக்கு மாறாக அவர்களில் சிலரை கொன்றுபோட்டான்.
 
    அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு மாறாக, வலிமையற்ற; செல்வாக்கற்ற; எளிய ஜனங்களின் இரத்தம் அவர்கள் தேசத்தில் சிந்தப்பட்டது. மிகப்பொரிய தீர்க்கதரிசியான பிலேயாமால் கூட சபிக்கமுடியாத இஸ்ரவேல் ஜனங்களின்மீது அற்பமான சிறுபான்மையினராக வசித்துவந்த சிலரிடம் செய்த உடன்படிக்கையை மீறிய காரணத்தினால் தேவன் பஞ்சத்தை வருவித்தார். தவீதின்காலத்தில் அவன் அந்த கிபியோனியரை சந்தித்து அவர்கள் குறையை நீக்கிய பின்புதான் தேவன் தேசத்திற்காக செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டு மழையைப் பொழிந்தருளினார்.

    சகோதரனே.! சகோதரியே.! கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதி ஒடுக்கப்படுபவர்களின் இனத்தையோ மொழியையோ மதத்தையோ அவர் பார்ப்பதில்லை. யாரோ சில ஏழைமக்களுக்காக தன்னுடைய சுதந்திரம் என்று உரிமைபாராட்டிய இஸ்ரவேலர்களிடமே நியாயம்கேட்ட கர்த்தர். தன் குமாரனுடைய இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்ட உனக்காகவும் எனக்காகவும் நியாயம் செய்வது அதிக நிச்சயமல்லவா?  வேதம் சொல்லுகிறது அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.(சங் 91:14)

சிந்தனைக்கு:-
  •     ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (சங் 12:5) 
  • ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார். (நீதி 22:22-23)
  •     துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான். (எசே 33:19)

சுபாவங்கள் & பழக்கவழக்கங்களில் மறுரூபம்..!

    வழிகாட்டியின் துணையுடன்  ஒரு மலையேற்றக் குழு உயரமான மலை சிகரம் ஒன்றை அடையும் படி பயணம் மேற்கொண்டது அவர்களில் சாகசம் புரிவதில் மிகுந்த ஆர்வமும் துடுக்குத் தனமும் மிகுந்த இளைஞன் ஒருவன் இருந்தான். மற்றவர்களை விட வேகமாக மலை உச்சியை அடைய வேண்டும்; பார்ப்பவர்கள் மிரளும் அளவுக்கு சவாலான புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என பல தனிப்பட்ட செயல் திட்டங்களுடனும் புகைப்படகருவி மற்றும் ருசித்து சாப்பிட பல விதமான தின்பண்டங்களுடனும் குழுவுடன் இணைந்து பயணம் புறப்பட்டான். அதை கண்டவழிகாட்டி அவனை எச்சரித்தார் தேவையற்ற எடை மற்றும் வேகமான நடை எளிதில் சோர்வடையச் செய்யும்; தேவையற்ற உணவுகள் உபாதைகளை உண்டாக்கும்; குழுவுடன் சேர்ந்து பயணிப்பதே பாதுகாப்பானதும் இனிமையானதுமாகும் என்றெல்லாம் ஆலோசனை வழங்கினார். ஆயினும் அவன் தனது முடிவில் உறுதியhக  நின்றபடியால் மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் அமைதி காத்தார்.

    அவர்களது பயணம் இனிதே துவங்கியது . அந்த துடுக்குத் தனம் மிக்க இளைஞன் குழுவினரைவிட வேகவேகமாக முன்னேறினான்; சற்று தொலைவு சென்றவுடன் வழிகாட்டி சொன்னவற்றின் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்தது. ஆசையாசையாய் கெண்டுவந்த பலவற்றை வழியில் வீசிவிட்டு மேற்கொண்டு செல்ல ஆரம்பித்தான். எனினும் சேர்வடைந்தவனாய் மேற்கொண்டு செல்லமுடியாதவாறு ஓர் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான். தன்தவறை உணர்ந்தவனாக அவ்வழியே வந்த பழைய குழுவினருடன் மீண்டுமாக இணைந்துகொண்டான். 

    பவுல் அப்போஸ்தலன் இவ்வாறு கூறுகின்றார்  நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். (பிலி 3:10-11) சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலி 3:13), சங்கீதம் பின்வருமாறு கூறுகிறது, "வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே." (சங் 119:9)

    சகோதரனே.! சகோதரியே.! நம்முடைய கானான் பயணத்தை சீர்ருலைக்கும் சுபாவங்கள் பழக்கவழக்கங்களை அகற்றுவோம் நம் முன்மாதிரியும் நம்முடைய கர்த்தரும் நம்முடைய இரடசகருமாகிய இயேசு கிறிஸ்து காட்டிய பாதையில் நடப்போம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிகாண்போம்.

     சிந்தனைக்கு:-
  •   குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். (சங் 2:12)


வாக்குமாறாத தேவன்.

    இஸ்ரவேல் தேசத்தில் ராஜாவைவிட செல்வாக்குமிக்க நபரான சாமுவேல் தீர்க்கதரிசி; பெத்லகேம் என்ற சிறிய ஊரில் வாழ்ந்துவந்த வயதான மனிதனான ஈசாயின் வீட்டுக்கு வந்து; பலசாலிகளான, ராணுவவீரர்களான மூத்த சகோதரர்கள் 7-பேரையும் விட்டுவிட்டு; எங்கோ ஒரு வனந்தரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த, குடும்பத்தினரால்கூட கிட்டத்தட்ட மறக்கப்பட்டுபோன; இளைய குமாரனான தாவீதை தேடிப்பிடித்து வரவழைத்து ராஜாவாக அபிஷேகம்பண்ணினார். (1சாமு 16:11) பின்பு சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

    அபிஷேகம்பண்ணப்பட்ட தாவீதுக்கு கிடைத்த மரியாதை என்ன?. சற்றும் தாமதிக்காமல், எந்த வனந்திரத்திலிருந்து சமுவேலின் கட்டாயத்தினால் வரவழைக்கப்பட்டானோ, அதே வனாந்திரத்துக்கு விட்டுவந்த ஆடுகளை மேய்கும்படியாக அவனது தந்தையால் அனுப்பப்பட்டார். (1சாமு 16:16) சகோதரனே.! சகோதரியே.! உன்னை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். உன்னைக்கொண்டு அவர் செய்ய நினைத்ததை யார் தடுத்தாலும் உன்னைக்கொண்டே செய்துமுடிக்க வல்லவர். தாவீதின் வாழ்கையிலும்; அதுதான் நடந்தது.

    ராஜாவாயிருந்த சவுலுக்கு சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனுடைய உதவி தேவைப்பட்டது. சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத்தேடி, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான். அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.

    அந்த செய்தியை கேட்டவுடன்: எந்த ஈசாய் தாவீதை வனந்திரத்துக்கு அனுப்பினானோ அதே ஈசாய்.! அவனை வெகுதீவிமாய் அழைப்பித்து அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதையின்மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான். தாவீது சவுல் ராஜாவின் அரண்மனையை அடைந்தான். படிப்படியாக கர்த்தர் அவனை பயிற்றுவித்து இஸ்ரவேலின் வரலாற்றில் தவிற்க்கவியலாத மாபெரும் மன்னனாக மாற்றினார். வேதம் சொல்லுகிறது நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை. (ஆதி 28:15)


அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள்..!

    இயேசு கிறிஸ்து பிசாசுகளைத் துரத்துவதைக் கண்ட வேதபாரகர்கள்; அவர் எவ்வாறு பிசாசுகளைத் துரத்துகிறார் என்பதைக்குறித்து சில கருத்துக்களைக் கூறினர். அவர்களுக்கு பதிலளிக்கும்விதமாகவும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்க தாகத்தோடு வந்திருக்கும் தேவஜனங்களுக்கும் நிழல்போல் அவரை பின்தொடரும் சீடர்களுக்கும் எளிதில் புரியும்படியாகவும் உவமை வடிவில் பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான். (மாற் 3:27) என்பதாக இயேசு கூறினார்.

    அதன் அர்த்தமாவது *ஒருவன் பலவானாகிய பிசாசின் பிடியிலிருப்பவர்களை விடுவிக்கவேண்டுமென்றால் அவன் அந்த பலவானாகிய பிசாசை ஜெயித்தவனாக காணப்படவேண்டும். அவ்வாறு ஜெயித்தவனாக காணப்படும்போது அவன் பிசாசினால் அடிமைப்படுத்தப்பட்டு பிசாசின் உடைமைகளாக மாறிவிட்டவர்களை அவனது ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பவனாக மாறலாம்.* பல வியாதியஸ்தர்களிடமிருந்த பிசாசுகளை இயேசு கிறிஸ்து துரத்தியபோது  அந்த பிசாசினால் அவர்களுக்கு வந்த வியாதி அவர்களை விட்டு நீங்கியது. (மாற் 9:25)

    *பாவமற்ற பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து நமக்கு ஓர் சிறந்த மாதிரியை காண்பித்த நம் அருள்நாதர் பிசாசை எப்படி வெற்றிகொண்டார் தெரியுமா?* மத்தேயு 4:3-17 வரையான வசனங்களை வாசிக்கும்போது. பிசாசின் சோதனையை தேவனுடைய வசனத்தால்/ தேவனுடைய வசனத்தை கைக்கொண்டதால் ஜெயித்தார் என அறியமுடிகிறது. அப்போஸ்தலனாகிய யோவான் ...வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன்...  வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். (1யோவா 2:13-14) என தனது நிருபத்தில் கூறுகிறார்.

    *சகோதரனே.! சகோதரியே.! பிசாசை ஜெயிக்கவேண்டுமென்றால் வேதவசனத்தை கடைபிடிப்பவர்களாக அதன்மூலமாக ஆவியில் பலம் வாய்ந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.* நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். (யோவா 15:7)

சிந்தனைக்கு:-
  • விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள் (மாற் 16:17)
  • வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத் 10:8)

வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும்.!

    உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். (லேவி 19:2) என்று கட்டளையிட்ட பரிசுத்தமுள்ளவரும் பரிசுத்தத்தை விரும்புகிறவருமான நம்முடைய தேவனாகிய கர்த்தர் பல காரியங்களை தாம் வெறுப்பதாக கூறியுள்ளார். அவற்றில் ஒன்றைக்குறித்து சற்று தியானிக்கலாம். நீதிமொழிகள் 20:10 சொல்லுகிறது வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். நிச்சயமாகவே கர்த்தர் அநீதியான காரியங்களை வெறுக்கிறார். வியாபாரம் செய்கிற சகோதரர்கள் கர்த்தரிடத்திலிருந்து இரக்கத்தையும் தயவையும் தேவ ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள அவர்கள் நேர்மையானவர்களாக இருக்கவேண்டியது அவசியம். கர்த்தர் அவர்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.
    வியாபாரம் செய்யாதவர்களாகிய நாம் வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துவது உண்டோ.!?. ஆம்...! எப்போது எவ்வாறு பயன்படுத்துகிறோம், சில உதாரணங்ளை ஆராய்வோம்.
  • நாம் செய்யும் தவறுகளை ஒழுங்கீனங்களை நியாயப்படுத்துபவர்களாவும் சம தவறை செய்யும் மற்றவர்களை கண்டிப்பதிலும்; திருத்தமுயல்வதிலும்; அவமதிப்பதிலும்; அதி நீதிமான்களாக காணப்படும்போதும் வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துகிறவர்களாகிறோம்.
  • பொறுப்பான பதவியிலிருக்கும்போது நமக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் இன மத மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டும்போது வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துகிறவர்களாகிறோம்.
  • ஒன்றுக்கு அதிகமான குழந்தைகளிருக்கும்போது ஒரு குழந்தையை அதிகமாகவும் மற்றொரு குழந்தையை குறைவாகவும் நேசிக்கும்போது வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துகிறவர்களாகிறோம்.
  • தன் தாயை அதிகமாகவும் கணவனின் தாயை குறைவாகவும் நேசிக்கும்போது வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துகிறவர்களாகிறோம்.
  • தன்மகளை அதிகமாகவும் உற்றர் உறவினர்களை சொந்தபந்தங்களைவிட்டு தன் மகனின் மனைவியாக வந்த மகளை குறைவாகவும் நேசிக்கும்போது வெவ்வேறான நிறைகல்லையும், வெவ்வேறான மரக்காலையும் பயன்படுத்துகிறவர்களாகிறோம்.
    சகோதரனே.! சகோதரியே.! நாம் பரிசுத்தமுள்ளவர்களாக காணப்படும்படிக்கு பரிசுத்தக்குறைச்சலான தேவன் வெறுக்கிற காரியங்களை நம்மைவிட்டு நம்மைவிட்டு அகற்றவேண்டும்.. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. (எபி 12:14) என வேதம் சொல்லுகிறது. நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் தேவனுடைய பிள்ளைகளாக மாற்றப்பட்டுவிட்ட நாம் நித்திய ரஜ்ஜியத்தை சதந்தரித்துக்கொள்ள அவருடைய குணநலன்களை பிரதிபலிக்கவேண்டியது மிகவும் அவசியம் .
சிந்தனைக்கு:-
  • அவர் பாரபட்சமில்லாமல் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்." (மத் 5:45) 
  • ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத் 5:48) 
  • பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம். (நீதி 21:3)
  • முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான். (நீதி 28:21)

எசேக்கியாவுக்காக யுத்தம் செய்த கர்த்தர்..!

    இஸ்ரவேல்(யூதா) தேசத்தை தாவீதின் வம்சத்தை சேர்ந்த ஆகாசின் குமாரனான எசேக்கியா என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் கர்த்தரிடத்தில் பற்றுள்ளவனாக மோசேக்கு கர்த்தர் கொடுத்த கட்டளைகளை கைக்கொண்டு வாழ்ந்தான். அவன் யூதா தேசத்திலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை துரத்தினான். அன்னிய மன்னனான அசீரிய மன்னனுக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தினான். சிறிதுகாலத்துக்குப் பின்பு அசீரிய மன்னன் படையெடுத்து வருவதை அறிந்து கப்பத்தை செலுத்தினான். ஆயினும் படை ரப்சாக்கே என்னும் பிரதிநிதியின் தலைமையில் எருசலேமை அடைந்தது. அவன் எருசலேமின் அலங்கத்தின்மேல் ஏறிநின்று மன்னனையும் இஸ்ரவேலின் தேவனையும் நிந்தித்தான். எசேக்கியாவோ கர்த்தரை நோக்கிப்பார்த்தான். கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக அவர்களிடம் அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படவேண்டாம். இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்றார் (2இரா 19:6) சற்றும் தாமதமில்லாமல் ரப்சாக்கே என்னும் மனிதன் ஒரு செய்தியை கேள்விப்பட்டு திரும்பிச்சென்றாலும் கடிதங்களுடன் தனது தூதூவர்களை அனுப்பினான். எசேக்கியாவோ மீண்டும் கர்த்தரை நோக்கிப்பார்த்தான்.

    சகோதரனே.! சகோதரியே.! நம்முடைய வாழ்கையிலும் சில பிரச்சினைகளுக்கு முடிவேயில்லையா என நாம் அங்கலாய்ப்பது உண்டு. அது ஒருவேளை வியாதியாக இருக்கலாம்; குடும்பபிரச்சினையாக இருக்கலாம்; சத்துருக்களிடமிருந்து வரும் பிச்சினையாக இருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் ஒருபிரச்சினையாக இருக்கலாம். வேதம் சொல்லுகிறது நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (எபே 6:11-12) இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களுக்கு ஒரு தனிப்பட்ட மனிதன் எதிரியே அல்ல. ஒரு நபர் நமக்கு எதிராக அநியாயமான காரியத்ததை துணிந்து செய்கிறார் என்றால் அதற்கு பின்னால் நம்மை நம்மை மனச்சோர்வுக்குள்ளாக்கி விசுவாசத்தை விட்டு விலகச்செய்வதற்காக கிரியை செய்யும் ஏதேனும் ஒரு மேலே குறிப்பிட்ட பொல்லாத ஆவி காணப்படும். சுவிஷேஷத்தின் அடிப்படையில் துன்பப்படுத்துபவர்களுக்கு எதிராக கூட்டம் சேர்க்கவோ போராட்டம் நடத்தவோ தாக்குதல் நடத்தவோ வேதம் நம்மை அனுமதிக்கவில்லை மாறாக எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் ...வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள் என்று கூறுகிறது. (எபே 6:18)

    எசேக்கியா மன்னன் தனக்கு உதவிசெய்யும்படி மனிதர்களிடம் ஆதரவு கேட்காமல் கர்த்தரிடம் உதவிக்காக மன்றாடினான். அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள். அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான். அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான். (2இரா 19:35-37)

சிந்தனைக்கு:-
  • நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (பிலி 4:6-7)
  • ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்., பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். (ரோம 12:17-18)

பரலோக பயணமும் பயமும்

    பரமகானானை நோக்கி பயணம்செய்யும் நமக்கு வேதம் தரும் எச்சரிப்பு ஒன்று உண்டு. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (வெளி 21:8) என்பதே அது. அவிசுவாசத்தின் நிமித்தமாக வரும் பயம் கர்த்தர் நமக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருப்பவற்றை நாம் காணக்கூடாதபடி நம்முடைய கண்களை மறைத்துவிடுகிறது அவற்றை அடையமுடியாதபடி நம்மை தடுத்துவிடுகிறது.

    பயத்தை நம்மைவிட்டு நீக்குவதற்கு என்ன வழி.? வேதம் சொல்லுகிறது அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. (1யோவா 4:18) தேவனிடமிருந்து வரும் முழுமையான அல்லது பூரணமான அன்பு நம்மை நிரப்பினால் மட்டுமே வியாதியை மரணத்தை மறுமையை எதிர்காலத்தை குறித்த பயங்களை போன்ற சகலவிதமான பயங்களையும் நிரந்தரமாக நம்மைவிட்டு நீக்கமுடியும்.

   *சகோதரனே.! சகோதரியே.! இத்தனை ஆண்டுகளாக நம்மை ஆட்கொண்டிருக்கும் பயங்கள் சில நிமிடங்களுக்குள் நம்மைவிட்டு நீங்குவது சாத்தியமா என நீங்கள் யோசிக்கக்கூடும்.* இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குபின்பு எருசலேமில் அறைவீட்டுக்குள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருந்த சீடர்கள் பரிசுத்தஆவி அருளப்பட்டபோது பூரணமான தேவ அன்பினால் நிறைந்தவர்களாகளானார்கள் அப்பொழுதே சகலவிதமான பயங்களும் அவர்களைவிட்டு நீங்கியது* அவர்கள் தைரியம் அடைந்தவர்களாக அந்நேரமே அதே எருசலேமிலே சில வாரங்களுக்குமுன்பதாக தேசதுரோக குற்றம்சாட்டப்பட்டு சிலுவையிலறையப்பட்ட அதே இயேசுவைக்குறித்து பிரங்கித்தனர். அவர்களை எதிர்த்தவர்கள் கூட ஆச்சரியப்பட்டு மனமாற்றத்தை அடைந்தனர். 

சிந்தனைக்கு:-

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். (மாற் 9:23)

மோசேயின் விசுவாசம்..!

    ஆபிரகாமின் சந்ததிகளான இஸ்ரவேலர்கள் 400 ஆண்டுகள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக வசித்தனர். குறிப்பிட்ட காலம் வந்தபோது கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நினைத்தருளினார். ஓரேப் என்னும் கன்மலையில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த மேசேயிடம்     முட்செடியில் பற்றியெரிந்த அக்கினியின் நடுவிலிருந்து பேசி அவனை எகிப்துக்கு சென்று தம்முடைய மக்களை விடுவிக்கும்படி பணித்தார். அவன் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தவனாக அவருடைய சத்தத்துக்கு கீழ்படிந்து எகிப்துக்கு கடந்துசென்றான் எந்த ஆயுதங்களின் துணையுமின்றி அடிமைகளாக இருந்த ஆறுலட்சம் ஜனங்களை விடுவித்தவனாக திரும்பிவந்தான்.

    *எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் எகிப்துக்கு சென்றான் தெரியுமா?*
மேசே 40 ஆண்டுகள் எகிப்திய இளவரசனாக வாழ்ந்தவன்; எகிப்திய இராணுவம்; பயிற்சிபெற்ற போர்வீரர்கள்; இருப்புரதங்கள்; குதிரை வீரர்கள்; ஆயுதங்களின் எண்ணிக்கை; அரசனுக்கு ஆலோசனை வழங்கும் ஞானிகள்; உறுதுணையாக இருக்கும் மந்திரவாதிகள்; இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவனை கொலை செய்ய தேடின பார்வோன். *சூழ்நிலைகள் எதுவுமே அவனுக்கு சாதகமாக இல்லை. ஆனாலும் அவன் கர்த்தருடைய வார்த்தையை நம்பியவனாக ஓரே ஒரு கோலுடன் ஒரு மாபெரும் பேரரசை எதிர்க்க புறப்பட்டான்; வெற்றியும் பெற்றான்.* வேதம் சொல்லுகிறது "விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்"... (லூக் 1:45)

சிந்தனைக்கு:-
...கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். (1சாமு 15:22

ஆதரவற்றவர்களின் வல்லமைமிகுந்த மீட்பர்...!

    அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். என்று நீதிமொழிகள் 23:11 சொல்லுகிறது. முந்தய வசனத்தை வாசிக்கும்போது திக்கற்ற பிள்ளைகளுக்காக வழக்காடுவார் என அறியமுடிகிறது. திக்கற்றபிள்ளைகள் என்பதற்கு ஆதரவற்றவர்கள்; அநாதைகள்; பெற்றோரில்லாதவர்கள் என்று பொருள். அவர்களுக்கு எதிராக யாரேனும் எழும்பி அவர்கள் பொருட்களை உடமைகளை அபகரித்துக்கொண்டால் நியாயமாக கிடைக்கவேண்டியதை தடுத்தால் தமதாக்கிக்கொண்டால் அவர்கள் சார்பில் நின்று பேசவோ நியாயம் கேட்கவோ யாருமே காணப்படுவதில்லை. ஆனால் வேதம் சொல்லுகிறது அவர்களுடைய மீட்பர் வல்லமையுள்ளவர்.

    இந்த வசனம் அநியாயமாக ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் அவர்களை ஒடுக்குபவர்களுக்கோ எச்சரிப்பின் சத்தமாகவும் இருக்கிறது. கர்த்தருக்கு மதவேறுபாடு இல்லை; ஜாதி வேறுபாடு இல்லை; இனவேறுபாடு இல்லை. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி (சங் 7:11) அநியாயமாக ஒடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சார்பாக வழக்காடுபவராக காணப்படுகிறார்.

    நாமும்கூட சில நேரங்களில் ஆதரவற்ற சூழ்நிலைகளின் வழியாக கடந்து செல்லக்கூடும். அதிகாரம் மிக்க நபர்கள் நம்மீது குற்றம் சுமத்தும்போது அது தவறான குற்றச்சாட்டு என்று தெரிந்தாலும்கூட யாரும் நமக்காக பேசுவதில்லை. செல்வாக்குமிக்கவர்கள் செய்யும் அநியாயத்தைகூட ஆதரிப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் பாதிக்கப்படுபவர்களின் நிலையை சற்றும் சிந்திப்பதில்லை *சகோதரனே.! சகோதரியே.! நீங்கள் ஒடுக்கப்படும் நிலையில் இருப்பவர்களா.!? நீங்கள் யாருமற்ற அநாதை என்று எண்ணி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். சர்வ வல்லமையுள்ள தேவன் நேரடியாக வந்து உங்களுக்காக வழக்காடும் அளவுக்கு நீங்கள் செல்வாக்குமிக்கவர்கள். நீங்கள் அற்புதத்தை காண்பீர்கள்.* அநியாயமாக மற்றவர்களை துன்பப்படுத்துபவர்களுக்கு வேதம் சொல்லும் எச்சரிப்பு '...தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்..' (அப் 5:39)

சிந்தனைக்கு:-
  • தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். சங்-68:5
  • நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபச்சாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதைவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல் 3:5) 
  • விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள். (யாத் 22:22-24)  

மாரா (கசப்பு) சொல்லும் செய்தி...!

    செங்கடலைக் கடந்த இஸ்ரவேலர்கள் வெகு பயணத்துக்கு பின்பு ஒரு தண்ணீர் தடாகத்தை கண்டனர். குதுகலத்துடன் நீரை அருந்தத் துவங்கினர். ஆனால் அவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த தண்ணீர் மிகவும் கசப்பாக இருந்தது. சுவை சற்று குறைவாக இருந்தாலும் பரவாயில்லை அருந்தமுடியாத அளவுக்கு கசப்பாயிருந்தால் என்னசெய்வது!?. ஏமாற்றம்; சோர்வு; தாகம் என பலவிதமான உணர்வுகள் ஒன்றுசேர்ந்து கோபமாக உருவெடுத்தது. அது அவர்களை எகிப்திலிருந்து விடுவித்து அழைத்துக்கொண்டுவந்த மோசேக்கு எதிராக முறுமுறுக்கச் செய்தது. அந்த இடத்துக்கும் கூட மாரா என்று பெயரிட்டு அழைத்தனர். மாரா என்பதற்கு கசப்பு என்று அர்த்தம்.

    தண்ணீரை கண்டவுடன் மோசேயிடத்திலும் ஆலோசனை கேட்கவில்லை கர்த்தரையும் நோக்கி பார்க்கவில்லை. ஆனால் துன்பம் வந்தபோது எதிராக பேச ஆரம்பித்தனர். இவையெல்லாம் நேர்ந்தபோது மோசே முறுமுறுத்தவர்களை சமாதானம் செய்ய செல்லவில்லை; குடிநீருக்கு மாற்றுவழி என்ன என்று ஆராயவில்லை மாறாக அவன் கர்த்தரை நோக்கிப் பார்த்தான். சகோதரனே.! சகோதரியே.! நம்முடைய வாழ்விலும் சில வாய்ப்புகள் வந்து கதவை தட்டும்போது அதை அனுமதிப்பதா வேண்டாமா என்பதை தேவனிடம் கேளுங்கள். சில தவறான முடிவுகளால் பிரச்சினைகளும் துன்பங்களும் வரும்போது பழியை அடுத்தவர் மீது சுமத்தி மற்றவர்களை குறைகூறி ஆறுதல் அடையாமல் கர்த்தரை நேக்கி பாருங்கள். மோசே கர்த்தரை நேக்கி பார்த்தபோது கர்த்தர் அவனுக்கு ஒருமரத்தை காண்பித்தார். அதை வெட்டி தண்ணீரில் போட்டபோது அந்த தண்ணீர் இனிப்பானதாக மாறியது. வேதம் சொல்லுகிறது, "அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை." (சங் 34:5). ஆம்..! கர்த்தரை நோக்கிப்பார்க்கிற ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதேயில்லை. அல்லேலூயா.

சிந்தனைக்கு:-
...உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். -(1கொரி 10:13)

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறார்..!

    எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கானானை நோக்கி அணியணியாக பயணம் செய்துகொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் நடுவில் தங்கி அவர்களை வழிநடத்தும்படியாக; ஆசரிப்புக்கூடாரம், உடன்படிக்கைப்பெட்டி என சிலவற்றை உண்டாக்குமாறு கர்த்தர் கட்டளையிட்டார். இவையனைத்தும் சித்தீம் என்னும் மரத்தால் செய்யப்பட்டது.

    கர்த்தர் மோசேயிடம் கூறியதாவது, "சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக. அதை எங்கும் பசும்பொன்தகட்டால் மூடுவாயாக... (யாத் 25:10). பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; (யாத் 25:16) கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.  அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன். (யாத் 25:21-22) கர்த்தர் கூறியபடியே அவர்கள் அனைத்தையும் செய்தனர். கர்த்தரும் வாக்குமாறாதவராய் அவர்கள் நடுவிலே தங்கி அவர்களை அற்புதமாக வழிநடத்தினார்.

    மரத்தின் ஒரு பகுதி பலகையாக மாற்றப்படவேண்டுமானால் அது அந்த மரத்தைவிட்டு பிரிக்கப்படுகிறது. அதன் வெளிப்புறத் தோல் மற்றும் தேவையற்ற பகுதிகள் முற்றிலுமாக அகற்றப்படுகிறது. நாமும்கூட கர்த்தர் விரும்பும்விதத்தில் பிரயோஜனப்பட வேண்டுமானால் இதுவரை நாம் வாழ்ந்துவந்த பாவ வாழ்க்கையை விட்டு விலகி கர்த்தரின் கரத்தில் நம்மை முழுவதுமாக அர்ப்பணிப்பவர்களாக; நம்மில் ஒட்டியிருக்கும் சில பழக்கவழக்கங்கள்; இன, மொழி, ஜாதி வெறிகள் போன்ற தேவனுடைய நாமத்துக்கு மகிமையை கொண்டுவராதவற்றை முற்றிலும் அகற்றுபவர்களாக காணப்படவேண்டும்.

    சித்தீம் மரத்தினால் செய்யப்பட்ட உடன்படிக்கைப்பெட்டி பொன்னால் மூடப்பட்டு அதனுள் கர்த்தரின் கற்பனைகள் அடங்கிய கற்பலகை வைக்கப்பட்டு பெட்டியின்மேல் கிருபாசனம் வைக்கப்பட்டதுபோல நாம் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாக இருதயத்தில் அவருடைய வசனங்கள் எழுதப்பட்டவர்களாக அதன்படி நடப்பவர்களாக எப்பொழுதும் ஜெபத்தால் கர்த்தரோடு இணைந்திருப்பவர்களாக கர்த்தருடைய மகிமையை சுமப்பவர்களாக வாழவேண்டும், வேதம் சொல்லுகிறது, "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? -(1கொரி 3:16)"

சகோதனே.! சகோதரியே.! தேவன் நம்மை சந்திப்பவராக; நாம் தேவனை சந்திப்பவர்களாக; தேவன் நம்மோடு வசிப்பவராக காணப்படுவோமானால்  நாம் ஒருபோதும்
    வழி தேடுபவர்கள் அல்ல வழிகாட்டுபவர்கள்
    ஒளி தேடுபவர்கள் அல்ல ஒளியானவர்கள்
    பயந்து ஓடுபவர்கள் அல்ல சாத்தானை துரத்துபவர்கள்
    அங்கலாய்பவர்கள் அல்ல ஆர்ப்பரிப்பவர்கள்
    கலங்கி நிற்பவர்கள் அல்ல கட்டளையிடுபவர்கள்

சிந்தனைக்கு:-
உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.- (யாத் 34:10)

விசுவாசிகளின் அதிகாரம்

    ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

    இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.  *இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என உணர்ந்த பேதுரு கர்த்தரிடத்திலிருந்து சில வாக்குத்தத்தங்களையும் அதிகாரங்களையும் பெற்றுக்கொண்டார்.*

    *விசுவாசிகளாகிய சீடர்களாகிய நமக்கு கர்த்தர் பலவிதமான வாக்குத்தத்தங்களையும் அதிகாரங்களையும் தந்துள்ளார்.* உதாரணமாக "என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் "(மாற் 16:17) போன்ற திரளான வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டு. ஆனால் நம்மில் வெகுசிலரின் வாழ்க்கையில் மட்டுமே இவை செயல்படுகிறது.  அதற்கு காரணங்கள் பல இருப்பினும் நம்மில் பலர் இயேசுகிறிஸ்து நமக்கு தந்திருக்கும் அதிகாரங்களை உணராதவர்களாயிருப்பதே பிரதானமாக காணப்படுகிறது.

    சகோதரனே.! சகோதரியே.! கர்த்தரிடமிருந்து நாம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை மட்டுமல்லாது  உலகப்பிரகாரமான பலவிதமான ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கிறோம். அது பிள்ளையின் அப்பம் அது நம்முடைய உரிமை. *உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்காக ஜெபிப்பதைவிட அதிகமாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக கர்த்தர் நமக்கு தந்த அதிகாரங்கள் நம் வாழ்கையில் செயல்பட தடையாக இருப்பவைகளை அகற்றுவதற்காக அந்த அதிகாரங்கள் நம்முடைய வாழ்கையில் செயல்படுவதற்காக ஜெபியுங்கள்.* வாஞ்சையோடு கர்த்தரிடம் கேளுங்கள். கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சிந்தனைக்கு:-
  • அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.(மாற் 16:20) 
  •  அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள். (1கொரி 14:1) 
  • ... சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். (1கொரி 14:39) 
  • நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்; (1கொரி 14:12)

தலையாகிய கிறிஸ்துவுக்குள் சக அவயவங்கள்


    நம்முடைய சரீர அவயவங்கள் அனைத்தும் தலையால் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவை தலையாக கொண்ட சபைகளான நாம் அவருடைய வசனங்களுக்கு கட்டுப்பட்டு '...தலையாகிய கிறிஸ்துவுக்குள்...' (எபே 4:15) வாழ்வதே சரியானது தலையின் கட்டுப்பாட்டுக்கு உடன்படாத அவயவங்களின் செயல்பாடு வியாதியாக கருதப்படும்.

    நம்முடைய சரீர அவயவங்கள் ஒருபோதும் ஒன்றையொன்று தாக்கிக்கொள்வதில்லை மாறாக ஒரு அவயவம் துன்பப்பட்டால் மற்ற அவயவங்கள் அனைத்தும் அதனோடுகூட வேதனைப்படும். ஒரு அவயவத்தின் வேதனையை மாற்ற மற்ற அவயவங்கள் அனைத்தும் ஒத்துழைக்கும். கிறிஸ்துவின் சரீரத்தின் சக அவயவங்களாகிய நம்முடைய சகோதரர்கள் துன்பப்படும்போது அவர்களுடைய துன்பத்தை மாற்ற துணைநிற்பது அவர்களுக்காக ஜெபிப்பது நம்முடைய தார்மீக கடமையாகும். அவர்களில் யாரேனும் விழுந்துபோனாலோ பின்மறிப் போனாலோ நாம் அவர்களை அரவணைத்து கிறிஸ்துவின் அன்பில் நிலைநிறுத்துவதும் கூட நம்முடைய கடமையே..!

சிந்தனைக்கு:-
  • சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். (யாக்கோபு-5:19)

  • அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். (எபே 4:22-24)

காண்டாமிருகமும் விசுவாசிகளும்..

பிலேயாம் என்னும் தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் ராஜாவிடத்தில் பேசும்போது எகிப்திலிருந்து அணியணியாக புறப்பட்டு வந்த இஸ்ரவேல் ஜனங்களை காண்டாமிருகத்துக்கு ஒப்பிடுகிறார்.  (எண்; 23:22)

யோபு புத்தகம் காண்டாமிருகத்தின் பண்புகளை பின்வருமாறு பட்டியலிடுகிறது, "காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலே பூட்டுவாயோ? அது உனக்கு இசைந்து பரம்படிக்குமோ?" (யோபு 39:9-10)  காண்டாமிருகம் ஒருபோதும் மனிதர்களின் விருப்பம் என்ன என்று ஆராய்ந்து அதன்படி செயல்படுவதில்லை. மாறாக தன் தலை என்னசொல்லுகிறதோ அதன்படியே செயல்படுகிறது. மேலும் வேதம் இவ்வாறு சொல்லுகிறது    "கிறிஸ்து சபைக்குத் தலை...." -(எபே 5:23) 

சகோதரனே.! சகோதரியே.! கர்த்தரை தலையாக கொண்ட நாம் அவர் சித்தம் என்னவோ அதை செய்ய கடமைப்பட்டவர்கள். யாரோ சிலர் கோபித்துக்கொள்வார்கள் என்பதற்காகவோ நமக்கு ஏதோ சிலவகையில் இழப்பு ஏற்படும் என்பதற்காகவோ சத்தியத்தை சத்தியமாக போதிக்காவிடில் கிறிஸ்துதான் நமக்கு தலையாக இருக்கிறாரா அல்லது மனிதர்கள் நமக்கு தலையாக இருக்கிறர்களா?

சிந்தனைக்கு:-

  • கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல், மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.(கொலோ 2:18) 
  • இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா  பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.  (கலா 1:10)


பரமகானானும் தடைகளும்

    கர்த்தருடைய தாசனாகிய மோசேக்கும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. மோசே இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து கானான் தேசத்துக்கு நேராக வழிநடத்தினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ நம்மை பாவ அடிமைத்தனங்களிலிருந்து விடுவித்து பரமகானானுக்கு நேராக பரலோக வாழ்வுக்கு நேராக வழிநடத்துகிறார்.

    கானானை நோக்கி பயணம் செய்த இஸ்ரவேலர்களை அவர்களுக்கு முன்னிருந்த செங்கடலோ பின்தொடர்ந்து வந்த பார்வோனும் அவனது படையினருமோ தடுக்க முடியவில்லை. வேற்று நாட்டு மன்னர்கள் கூட அவர்களது வருகையை கேட்டு அஞ்சி நடுங்கினர். ஆனால் அவர்களது அவிசுவாசமும் தேவனுக்கு விரோதமான முறுமுறுப்புகளும் பாவங்களும் எகிப்திலிருந்து புறப்பட்டவர்களில் இருவர்தவிர மற்றவர்கள் அனைவரும் வனாந்தரத்திலே மடிந்துவிடக் காரணமாயிற்று.

    நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து நம் பாவங்களுக்காக பலியாகி நம்மை பாவ அடிமைத்தனங்களிலிருந்து விடுவித்து நமக்காக யுத்தம்செய்கிறவராக; நம்மை தேற்றுகிறவராக; அரவணைக்கிறவராக; பாதுகாக்கிறவராக; நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்திவருகிறார். எந்தவிதமான பிசாசுகளின் போராட்டங்களோ; சாபங்களோ, வியாதிகளோ, பிரச்சினைகளோ, நாம் பரலோகத்திற்கு செல்வதை தடுத்துவிடமுடியாது ஆனால் தேவன் வெறுக்கின்ற அருவருக்கின்ற காரியங்கள் நம்மில் காணப்படுமேயானால் நாம் அழிந்துபோவதற்கு அவைகள் காரணமாகக்கூடும். வேதம் சொல்லுகிறது 'பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்....'- (வெளி 21:8). பாவங்களை எதிர்த்து நிற்க்க பரிசுத்தமாக வாழ நாம் ஆவியில் பலம்வாய்ந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.

    சகோதரனே.! சகோதரியே.!. பாவம் நிறைந்த இந்த உலகத்தில் நான் எப்படி பரிசுத்தமாக வாழ்வது என்று கலங்குகிறாயா.? இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் 'நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன்....' (யோவா 14:18)

சிந்தனைக்கு:-
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்...(அப் 1:8)





உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்



நாற்பது ஆண்டுகள் எகிப்திய இளவரசனாக , ஏறக்குறைய 35 ஆண்டுகள் பார்வோனின் வீட்டில் வளர்ந்த மோசே;  தான்மட்டுமல்லாது தலைமுறை தலைமுறையாக தனது வாரிசுகளும் அரசகுடும்பத்தினராக வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் தனக்கு முன்பாக இருந்தபோதும் அதை தெரிந்துகொள்ளாமல் அடிமைப்பட்டுகிடந்த தனது சகோதரர்களுக்கு உதவமுயன்றார்.  அதன்பயனாக எகிப்தின் சுகபோக வாழ்க்கையை விட்டு வனாந்திரத்துக்கு சென்று ஆடுமேய்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னாட்களில் அவர் தேவனால் சந்திக்கப்பட்டு எகிப்துக்கு திரும்பிவந்து தனது சகோதரர்களை விடுவித்து கானானை நோக்கி வழிநடத்தும்படியாக தேவன் அவரை வல்லமையாக பயன்படுத்தினார்.

மோசேயின் பெற்றோர் இருவருமே இஸ்ரவேலர்கள். தேவனை அறிந்தவர்கள். ஏறக்குறைய 5 ஆண்டுகள் மோசே தனது பெற்றோரால் வளர்க்கபட்டிருக்ககூடும். தான் யார் என்பதை அறிந்துகொண்ட மோசேயை அதற்கு பின் வந்த 35 ஆண்டுகால கல்விமுறையோ சுகபோக வாழ்க்கையோ துளியும் மாற்றிவிடமுடியவில்லை.

சகோதரனே.! சகோதரியே.! நீங்கள் ஒருவேளை 'என் பிள்ளைகள் இந்த பாவம் நிறைந்த உலகில் வாழப்போகிறார்களோ..?' என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கக்கூடும். கலங்கவேண்டாம்..!!!. வேதம் சொல்லுகிறது 'உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.-(ஏசா 54:13)'

சிந்தனைக்கு:-
உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.- (உபா 4:10) 


தேவனே நம்முடைய அடையாளம்..! God is Our Identity



இயேசு கிறிஸ்து தனது ஊழிய பயணத்தின் இறுதியாக எருசலேம் நகருக்குச் செல்லும்போது தனது சீடர்களை அனுப்பி குறிப்பிட்ட கிராமத்திலிருந்து கட்டப்பட்டிருந்த ஓர் கழுதைக்குட்டியை அவிழ்த்துவரச்செய்து அதன்மீது ஏறி எருசலேம் நகருக்குள் பிரவேசித்தார். அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். அவற்றின்மீது நடந்தபடியே ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்ற விண்ணைமுட்டும் கோஷங்களோடு கர்த்தரை சுமந்துகொண்டு அந்த கழுதை எருசலேமுக்குள் பிரவேசித்தது.

இன்றும்கூட அந்த கழுதை சுவிஷேச பிரசங்கங்களில் அதிகமாக நினைவுகூறப்படுகிறது. பல தேவமனிதர்கள் தங்களையே அந்த கழுதையுடன் ஒப்பிட்டு மகிழ்வதைக்கூட காண்கிறோம். அந்த கழுதையின் அடையாளம்(identity) அதன் பிறந்த இடமோ வளர்ந்த இடமோ அதன் தனிப்பட்ட திறமைகளோ அல்ல. மாறாக அதன்மீது பயணம்செய்த இயேசு கிறிஸ்துவே அதன் அடையாளம்(identity).  ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒவ்வொரு தேவமனிதனுக்கும் அவர்களில் வசிக்கும் கிறிஸ்துவின் ஆவியானவரே அவர்கள் அடையாளம்(identity).  

வேதம் சொல்லுகிறது, நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ...... தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது;  நீங்களே அந்த ஆலயம். (1கொரி 3:16-17)  நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்... (1கொரி 3:23) அண்டசராசரங்களையும் படைத்து ஆளுகை செய்யும் சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மில் வசிக்கும்போது நமக்கு சிறப்பைத்தருவது அல்லது நமக்கு அடையாளத்தைத் தருவது நமது இனமா? மொழியா? ஜாதியா? அல்லது தேவனின் அருகாமையா? 
தேவனே நம்முடைய அடையாளம்..! God is Our Identity