Translate

ஐடா.S.ஸ்கட்டர் - கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்

Ida S. Scudder
இன்று அனைத்து   வசதிகளுடனும் நவீன சிறப்புப் பிரிவுகளுடனும்வேலூரின் அடையாளமாகவும் உலகஅளவில் பிரபலமான மற்றும் மிகப் பெரிய  மருத்துவமனையாகவும், செயல் பட்டு அதன்மூலம் இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும் Vellor CMC மருத்துவ மனையின் கட்டிடங்களில் இழையோடியிருக்கும் ஐடா ஸ்கட்டர்  என்ற அமெரிக்க பெண்மணியின் தியாகம் உங்களுக்கு தெரியுமா? 

பிறப்பு மற்றும் கல்வி
       திண்டிவனத்தில் மருத்துவ மிஷனரியாக ஊழியம் செய்து வந்த டாக்டர். ஜான் ஸ்கட்டர் II,  சோபியா ஸ்கட்டர் தம்பதியினரின் ஐந்தாவது குழந்தை தான் “ஐடா ஸ்கட்டர்” . (DOB: 09-12-1870). ஐடா ஸ்கட்டருக்கு ஆறு வயது இருக்கும்பொழுது சரியாக 1877 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொடியபஞ்சம் ஏற்பட்டதுபஞ்சத்தின்கொடுமையை நேரில் கண்ட ஐடா தன் வாழ்நாளில் ஒருபோதும் மிஷனரி ஆகப்போவது இல்லை என தீர்மானித்தார்பள்ளி மற்றும் இறையியல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஐடா- அவர்களின் . பள்ளி வாழ்க்கையும் Missionary பயிற்சியும்,  20 வயதில் நிறைவு பெற்றது.

கிராமத்து வாழ்க்கை
       தந்தை ஜான் ஸ்கட்டரின் மருத்துவப் பணியில் உதவி வந்த தாய் சோபியா ஸ்கட்டருக்கு உடல் நலம் குன்றிய காரணத்தால் ஐடா 1890- ல் இந்தியாவிற்கு வரவேண்டிய கட்டாயம் உருவானது. கடல் மார்க்கமாக சென்னை துறைமுகத்தை அடைந்த ஐடா வையும் அவரது சகோதரன் ஹாரியையும் அழைத்து செல்ல அவரது தந்தை டாக்டர் ஜான் ஸ்கட்டர் துறைமுகம் வந்திருந்தார்.  துறைமுகத்திலிருந்து மாட்டு வண்டியில் பயணம் செய்து திண்டிவனத்தில் உள்ள கூரைவேய்ந்த மிஷன் வீட்டுக்கு வந்தனர். பாமர மக்கள் இவரையும் ஒரு மருத்துவராக எண்ணினர். மருத்துவ சிகிச்சைக்காக மிஷன் விட்டுக்கு வரும் திண்டிவன மக்கள்ஐடா ஸ்கட்டரை   மிஸ்ஸியம்மா”   என்று அழைத்தனர்.

 மனதைத் தொட்ட நிகழ்வுகள்
       1870 ஆம் வருடம்!, நள்ளிரவை நெருங்கும் நேரம் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார் ஐடா, சிம்னி  விளக்கின் ஒளியில் ஒரு இஸ்லாமியர் பதற்றத்துடன் காணப்பட்டார். “மிஸ்ஸியம்மா நீங்கள் தான் என் மகளைக் காப்பாற்ற வேண்டும், தலைப் பிரசவம்! வலியால் துடிக்கிறாள் ” என்று  அவர் மன்றாடினார். ஐடாவோநான் டாக்டர் இல்லை. பிரசவம் பாக்க எனக்கு தெரியாதுஇருங்கள். அப்பாவை (டாக்டர் ஜான் ஸ்கட்டர்) எழுப்புகிறேன். என்றவாறு மாடி அறைக்குச் செல்ல திரும்பினாள். அந்த மனிதனோ, “வேண்டாம் மிஸ்ஸி அவரை எழுப்பவேண்டாம்” என்று கூறி தடுத்தார்.! ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின் வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள் செத்தாலும் பரவாயில்லை. நான் வருகிறேன் தாயே!” கைகள் கூப்பி விடை பெற்று இருளில் மறைந்துபோனார்.

       அதிக நேரம் ஆகவில்லைமீண்டும் கதவு தட்டப்பட்டது. அவர் ஒரு இந்துவணக்கம் கூறிவிட்டு, “மிஸ்ஸியம்மா என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்உடனே என்னோடு வாருங்கள் அம்மா அந்த இரு உயிரையும் காப்பாற்றுங்கள் தாயே!அவரும் கெஞ்சினார்மீண்டும் அதே பதிலைத்தான் ஐடா கூறினார். ஐடா தந்தையை அழைக்கவா என்று கேட்டாள். ஆனால் அந்த மனிதனோ, “வேண்டாம் தாயே! எங்கள் சாஸ்த்திரத்தில் அதற்கு இடமில்லை. என் மனைவி செத்தாலும் சாகலாமே தவிர ஒரு ஆண் அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாது தாயே” அவரும் ஏமாற்றத்துடன் திரும்பினார். மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம்  கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது வேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.  

       மறுநாள் மாலையில் வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார் . அந்த மூவரும் பிரசவ சிக்கலில் இரவில் இறந்துபோன பெண்மணிகள் என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம் வெதும்பினார்.!. ஐடாஇந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்து கொண்டார்.

 மருத்துவக் கல்வி மற்றும் பணி
       1899 ஆம் வருடம் நியூயார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (Cornell University Medical College) சேர்ந்தார்.பெண்கள் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பு அது!. தேர்ச்சியுற்று மருத்துவரான உடனே தமிழ்நாடு திரும்பி மருத்துவப் பணியைகுறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். பலரிடம் தனது திட்டத்தைக் கூறினார்.  மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர் ஷெள் (Schell)  என்பவர் தமிழ் நாட்டு பெண்களின் நலனுக்காக 10,000 அமெரிக்க டாலர்களை அவரின் மனைவியின் நினைவாக ஐடாவிடம் வழங்கினார். அவர் தமிழ் நாடு திரும்பியபோது அவரின் தந்தை வேலூரில் மருத்துவப் பணியில் ஈடு பட்டிருந்தார்.. 1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை ஜான் ஸ்கட்டர் மரணமடையும்வரை அவருடன் இணைந்து மருத்துவப் பணியை திறம்பட செய்து வந்தார்.

ஐடா ஸ்கட்டரின் சாதனைகள்:
       தந்தையின் மரணத்திற்கு பின் மருத்துவப் பணியின் முழுப் பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி 1902 ஆம் வருடம் ஒரு சிறு மருத்துவமனையை வேலூரில் அமைத்து அதற்கு ஷெல் மருத்துவமனை (Schell Hospital) என்று பெயரிட்டார். சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக தரப்பட்டன. (தற்போது இது Mary Tabler Schell Eye Hospital என்று கண் மருத்துவமனையாக பெரிய அளவில் இயங்கி வருகின்றது). அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட ப்ளேக் (plague), காலராதொழுநோய் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடினார்.


       சென்னைப் பல்கலைக்கழக சம்மதத்துடன் இந்தியாவிலேயே   முதல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். இன்றுவரை பெண் கல்விக்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கும் நிலையில்அரசு அனுமதியுடன் சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918  ஆம் வருடத்திலேயே பெண் மருத்துவர்களை உருவாக்க மருத்துவக் கல்லூரி நிறுவி பெண்கல்வியில் புரட்சி செய்தார்.  இதுவே கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் ஆரம்பம். 1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  1952 ஆம் வருடம் உலகின் சிறந்த டாக்டர்களில் ஒருவராக டாக்டர் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர்   தேர்ந்தெடுக்கப் பட்டார் .
Dr. Ida Sophia Scudder 
(December 9, 1870 – May 23, 1960)
பாசத்திற்குரிய ஐடா அத்தை (Aunt Ida)
       டாக்டர் ஐடா ஸ்கட்டர் வேலூர் நகர மக்களாலும்,  வட   ஆற்காடு மக்களாலும் பெரிதும் போற்றப்பட்டார். அவரை பாசத்துடன் ஐடா அத்தை (Aunt Ida) என்றே அழைத்தனர். ஐடா,   தமது 85 வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு தபாலில் டாக்டர் ஐடாஇந்தியா” என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்தது. நாடு தழுவிய அளவில் அவர் அறியப்பட்டிருந்தார்  என்பதற்கு இது ஒரு சான்றாகும். 

விண்ணகப் பிறப்பும் மண்ணகச் சிறப்பும்
        கடைசிவரை  திருமணமே  செய்துகொள்ளாமல்  மக்கள் நலனுக்காகவே  பணியாற்றிவந்த ஐடா அத்தை, 1960 ஆம் வருடம் மே  மாதம் 24 ஆம் நாள் அதிகாலையில் இறைவனடி  சேர்ந்தார்.   அப்போது அவருக்கு வயது 90.     இந்தியப் பெண்களுக்காக அவர் செய்த  மாபெரும்  தியாகத்தையும்  சேவையையும்  பாராட்டும் வகையில் அவருடைய நூற்றாண்டு தினமான  ஆகஸ்ட்  12, 2000  நாளன்று   அவரின்  படமும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியும்,  மருத்துவமனையும்  பொறிக்கப்பட்ட  சிறப்பு  தபால்  தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது இந்திய  அரசு!  இன்று அனைத்து வசதிகளுடனும் நவீன சிறப்புப் பிரிவுகளுடனும், 2000 படுக்கைகள் கொண்டுஆசியாவின் மிகப் பெரிய மருத்துவமனையாகவும்,  உலகின் மிகப் பெரிய மிஷன்   மருத்துவமனையாகவும் விளங்குகிறது!

CMC, Vellor
வேதவசனம்
       (மத் 25:31-40) ..., ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: ... .... .... பசியாயிருந்தேன்,  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன்,எனக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாத வராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 

       அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 


1 கருத்து: