Translate

உங்கள் வெற்றியைத் தடுப்பது எது...? Part-I


வெல்வதற்காகவே பிறந்த நமக்கு ஏன் தோல்விகள்?

எகிப்திலிருந்து கானானை நோக்கி மோசேயின் தலைமையில் பயணப்பட்ட இஸ்ரவேலர்கள்,  மோசேயின் மறைவுக்குப் பின் அவரது உத்தமச் சீடர் யோசுவாவின் தலைமையில் பயணத்தை தொடர்ந்தனர். அவர்கள் செல்லும் வழியில் எரிகோ என்ற பட்டணம் எதிர்ப்பட்டது. அந்த பட்டணத்தை இஸ்ரவேலர்கள் கையில் ஒப்புக்கொடுக்க தேவன் சித்தம் கொண்டார்.

எரிகோ  பட்டணம் மிக வலிமையான கோட்டைச்சுவர்கள் உள்ள பட்டணம், கதவுகள் கூட இஸ்ரவேலர்களின் வருகையையொட்டி கனகச்சிதமாக அடைக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திராத அந்தகாலகட்டத்தில் கோட்டைச்சுவரை உடைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. போதாக்குறைக்கு படைவீரர்கள் கோட்டைச் சுவரின் மீது நின்றுகொண்டு, நெருங்கிவருபவர்கள் மீது அம்பு எய்தல் பெரிய பெரிய கற்களைப் போடுதல் என எண்ணற்ற அபாயங்கள் வேறு...!  

கர்த்தர் ஒரு புதுமையான முறையை யோசுவாவுக்கு கூறினார், அதன்படி ஆசாரியர்கள் தலைமையில் இஸ்ரவேலர்கள் தினமும் ஒருமுறை வீதம் ஆறுநாட்களும் ஏழாவது நாள் ஏழுமுறையும் எரிகோ பட்டணத்ததை சுற்றிவந்தனர். ஏழாவது நாள், ஆசாரியர்கள் பூரிகைகளை ஊத; ஜனங்கள் அனைவரும் ஆர்ப்பரிக்க; பலமாத உழைப்பினால் கூட உடைக்க இயலாத வலிமை உடைய கோட்டைச்சுவர் கணப்பொழுதில் இடிந்துவிழுந்தது. சர்வவல்லமை உடைய தேவனால் கூடாதகாரியம் எதுவும் இல்லை. அவர்  நமக்காக செயல்படும்படி நம்மிடம் எதிர்பார்ப்பது விசுவாசம் என்ற ஒன்றை மட்டுமே.

இஸ்ரவேலர்கள் சற்றும் எதிர்பாராத அமோக வெற்றியை பெற்றனர்.  இறைவனை புகழ்ந்தபடி ஆயி என்ற பட்டணத்தை நோக்கி வீறுநடை போட்டனர். ஆயி ஒன்றும் பெரிய பட்டணம் அல்ல எனினும் போர் அவர்களுக்கு சாதகமாக முடியவில்லை. கர்த்தரை நோக்கி கதறியழுதனர்..! நம்முடைய இக்கட்டான சூழ்நிலையில் இறைவனையன்றி யார் உதவக்கூடும்...? காதைப் படைத்தவர் கேட்காமல் இருப்பாரா? கண்ணைப் படைத்தவர் காணாமல் இருப்பாரா? நிச்சயமாக இல்லை. கதறலுக்கு உடனடியாக பதில் வந்தது. எரிகோ பட்டணத்து பொருட்கள் சாபத்தீடானவைகள் எனவே அவற்றை எடுக்கவேண்டாம் என தேவன் தாம் கூறியதை நினைவுபடுத்தினார். 

(யோசு 6:17-19) ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; ......சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக் கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப் பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள். சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும்....

சீட்டு போடப்பட்டது..! யூதா கோத்திரத்தை சார்ந்த  ஆகான் மீது சீட்டுவிழுந்தது. அவர், கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கைலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் எடுத்து தமது கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்து வைத்திருந்தார்சாபத்தீடான பொருட்களும் ஆகான் மற்றும் குடும்பத்தினரும் அகற்றப்பட்டபின் மீண்டும்  இஸ்ரவேலர்கள், இறைவன் கொடுத்த மேலும் பல வெற்றிகளைக் கண்டனர்.

உங்கள் வாழ்க்கையில் கூட நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காமல் போகிறதா? நடக்கவேண்டிய காரியங்கள் தாமதம் ஆகிறதா?  தோல்விகள் தான் உங்கள் உற்ற தோழனாக விளங்குகிறதா? இதன்பின்னணியில் தேவஜனங்களிடம் இருக்கக்கூடாத பாபிலோனிய சால்வையை போன்ற எண்ணங்கள், செயல்கள் உங்கள் இருதயத்திலோ உங்கள் குடும்பத்தினருடைய  இருதயங்களிலோ மறைந்து இருக்கக்கூடும்.

பொதுவாக சால்வை என்பது கவுரவம் அல்லது பெருமையின் அடையாளம்.

  • உங்கள் குடும்பப் பின்னணியைக்  குறித்து நீங்கள் அதிகமாக பெருமை கொள்ளுகிறீர்களா?

  • உங்கள் படிப்பு அல்லது வேலையைக் குறித்து நீங்கள் அதிகமாக பெருமை கொள்ளுகிறீர்களா?

  • உங்கள் மொழியை குறித்து நீங்கள் அதிகமாக பெருமை கொள்ளுகிறீர்களா?

  • உங்கள் ஜாதியைக்  குறித்து நீங்கள் அதிகமாக பெருமை கொள்ளுகிறீர்களா?

  • உங்கள் இனத்தைக் குறித்து நீங்கள் அதிகமாக பெருமை கொள்ளுகிறீர்களா?

  வேதம் சொல்லுகிறது, தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், (யாக் 4:6). தேவனுக்கு எதிராக செயல்பட்டு நீங்கள் வெற்றியடையக்கூடுமா? தேவன் வெறுப்பனவற்றை உங்கள் இருதயத்தில் மறைத்துவைத்துவிட்டு அவரின் உதவியைப் பெற முடியுமா? எப்படி ஒரே ஒரு ஆகானால் இஸ்ரவேலர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனரோ அதுபோல, இன்றும் சிலர் சில பாபிலோனிய சால்வைகளை மனதிலே அணிந்திருப்பதால் தேவனால் தங்களுக்கு வரும் ஆசீர்வாதத்தை மட்டும் தடுப்பவர்களாக அல்லாமல் சபை, கிறிஸ்தவர்கள், என்ற எல்லைகளை தாண்டி ஒட்டுமொத்த நாட்டின் ஆசீர்வாதத்தையும் தடுப்பவர்களாக காணப்படுகின்றனர்.

     எது உங்கள் வெற்றியை தடுக்கும் பாபிலோனிய சால்வை?  தேவன் வெறுப்பவற்றை உங்கள் மனதைவிட்டு அகற்றுங்கள். பாபிலோனிய புறஜாதி மதங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவற்றை தூக்கி எறியுங்கள்.


தேவன் உங்களுக்கு வெற்றியை ஆயத்ப்படுத்தியிருக்க, நீங்கள் ஏன் தோல்வியை சுதந்தரிக்க வேண்டும்…!!!???


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக