Translate

கிபியோனியருக்காக நியாயம் செய்த கர்த்தர்..!

    தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான். கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார். (2சாமு 21:1) *யார் இந்த கிபியோனியர்? இவர்களை கொன்றுபோட்டதற்காக ஏன் பஞ்சம் வரவேண்டும்?*  அதுவும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட இஸ்ரவேலின்மீது.!!!

    இஸ்ரவேல் ஜனங்கள் அணியணியாக எகிப்திலிருந்து புறப்பட்டு கானானை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, கர்த்தர் அவர்களிடம் கனான் மற்றும் அதற்கு அருகாமையிலுள்ள மக்களிடம் எவ்வித உடன்படிக்கையும் செய்யவேண்டாம் என்று எச்சரித்திருந்தார். கானானுக்கு அருகாமையில் உள்ள கிபியோனின் குடிகள் இதை கேள்விப்பட்டபோது அவர்கள் பயப்பட்டதினால்  தங்களை வெகு தொலைவில் வசிக்கும் ஜனங்களாகக் காண்பித்து இஸ்ரவேலர்களிடம் உடன்படிக்கை செய்யும்படி சென்றனர். இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரிடம்  ஆலோசனை கேட்காமல் அவர்களோடு உடன்படிக்கை செய்தனர் (யோசு 9:4)     இந்த சம்பவங்கள் நடந்து வெகுகாலத்திற்குபின்பு பிறந்து வளர்ந்த சவுல் ராஜாவானபோது அந்த உடன்படிக்கைக்கு மாறாக அவர்களில் சிலரை கொன்றுபோட்டான்.
 
    அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு மாறாக, வலிமையற்ற; செல்வாக்கற்ற; எளிய ஜனங்களின் இரத்தம் அவர்கள் தேசத்தில் சிந்தப்பட்டது. மிகப்பொரிய தீர்க்கதரிசியான பிலேயாமால் கூட சபிக்கமுடியாத இஸ்ரவேல் ஜனங்களின்மீது அற்பமான சிறுபான்மையினராக வசித்துவந்த சிலரிடம் செய்த உடன்படிக்கையை மீறிய காரணத்தினால் தேவன் பஞ்சத்தை வருவித்தார். தவீதின்காலத்தில் அவன் அந்த கிபியோனியரை சந்தித்து அவர்கள் குறையை நீக்கிய பின்புதான் தேவன் தேசத்திற்காக செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டு மழையைப் பொழிந்தருளினார்.

    சகோதரனே.! சகோதரியே.! கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதி ஒடுக்கப்படுபவர்களின் இனத்தையோ மொழியையோ மதத்தையோ அவர் பார்ப்பதில்லை. யாரோ சில ஏழைமக்களுக்காக தன்னுடைய சுதந்திரம் என்று உரிமைபாராட்டிய இஸ்ரவேலர்களிடமே நியாயம்கேட்ட கர்த்தர். தன் குமாரனுடைய இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்ட உனக்காகவும் எனக்காகவும் நியாயம் செய்வது அதிக நிச்சயமல்லவா?  வேதம் சொல்லுகிறது அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.(சங் 91:14)

சிந்தனைக்கு:-
  •     ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (சங் 12:5) 
  • ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார். (நீதி 22:22-23)
  •     துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான். (எசே 33:19)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக