Translate

சகோ. மோகன் சி லாசரஸ் அவர்களைப் பற்றி...

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலுமாவடி என்னும்  சிற்றூரை தலைமையிடமாக கொண்டு இயேசுவிடுவிக்கிறார் ஊழியங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் ஸ்தாபகர் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்களைப் பற்றி சில வார்த்தைகள்...

சகோ. மோகன் சி லாசரஸ்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலுமாவடி என்னும் கிராமத்தில் பக்தி வைராக்கியமுள்ள இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவர்கள். சிறுவயதில் தான் சார்ந்திருந்த மதத்தின் மீது கொண்ட அளவற்ற பக்திவைராக்கியத்தால். இயேசுவைக் குறித்து அறிவித்தபொழுது அவர்  சாதாரணமான மனிதர் தான்  தெய்வமல்ல என்று வாதாடியதோடு மாத்திரமல்ல அவரைக் குறித்து எவ்வளவு கேவலமாக பேசமுடியுமோ அவ்வளவு கேவலமாக பேசினார்.  1968ம் ஆண்டு சகோதரருடைய 14வது வயதில் ஒரு கொடிய வியாதி அவருடைய வலது காலைத் தாக்கிற்று. எத்தனையோ சிறப்பு மருத்துவர்களிடம் கொண்டு சென்று காண்பித்த பொழுதும் என்னவியாதியென்றே கண்டு பிடிக்க முடியவில்லை. வலது கால் முற்றிலும் செயலிழந்துவிட்டது. இருதயமும் வீங்கியது, எலும்பும் தோலுமாய் மரணப் படுக்கைக்குள்ளானார்கள்.

மருத்துவர்கள் கைவிட்டார்கள். வேண்டிய தெய்வங்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நேரத்தில்தான் இயேசு தேடி வந்தார். குடும்ப நண்பராகிய ஒரு கர்த்தருடைய பிள்ளை சகோதரரை பார்க்க வந்தபொழுது அவரிடம் சகோரதரின் தாயார் என் மகனை எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள். நீ என் மகனுக்காக இயேசுவிடம் வேண்டுதல் செய்வாயா. . . . என்று கேட்டார். உடனே அவர் சகோதரரின் படுக்கை அருகில் முழங்கால்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்த அந்த நேரத்தில்தானே அதிசயம் நிகழ்ந்தது திடீரென்று ஒரு தேவ வல்லமை சகோதரரின் சரீரத்தில் இறங்கியது. கால்களை அசைக்க முடியாதபடி படுத்திருந்த சகோதரன் நொடிப்பொழுதில் குணமாகி படுக்கையில் எழுந்து அமர்ந்துவிட்டார். அப்பொழுதுதான் இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவன் என்பதை அறிந்து கொண்டார்.

இயேசு தன்னை சுகமாக்கிவிட்டார் என்ற மகிழ்ச்சியில் ஆலய ஆராதனைக்கு சென்றாலும், வேதம் வாசித்து பக்தியோடிருந்தாலும் வாழ்க்கை மாறவில்லை. 1972 ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி இரவில் இயேசு என்னோடு பேசவேண்டும் என் பாவங்களை மன்னிக்க வேண்டும், அதுவரை என் முழங்காலைவிட்டு எழுந்திருப்பதில்லை என்ற தீர்மானத்தோடு ஜெபிக்க ஆரம்பித்தார். இரவு முழுவதும் அதுவரை தான் செய்த பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டு ஜெபித்தார். இரக்கமுள்ள தேவன் மார்ச் 18ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நீ சாகாதபடிக்கு நான் உன் பாவங்களை மன்னித்தேன் என்று பேசினார் இரட்சிப்பின் நிச்சயத்தை கொடுத்தார். வாழ்க்கையில் ஆச்சரியமான மாற்றங்கள் உண்டாயின.

ஒரு நாள் சகோதரர் தன் அறையில் ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது தேவன் தமது வல்லமையால் சகோதரரை அபிஷேகித்தார். ஆவியானவரால் நிரப்பப்பட்ட பிறகு அழிந்து போகிற ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தினால் தேவன் நிரப்பினார். 1975ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் தேவன் முகமுகமாய் தரிசனமாகி சுமார் அரைமணி நேரம் பேசினார். சகோதரன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் கொடுத்தார். முடிவாக என் பெலத்தினால் ஊழியம் செய்ய முடியாது, நான் உம்முடைய கையைப் பிடித்துக் கொண்டு நடந்தால் ஒரு வேளை உலக ஆசைகள், பாடுகளைக் கண்டு உம்மை விட்டுவிடக்கூடும். நீர் என் கையைப் பிடித்துக் கொண்டால் ஊழியத்திற்கு வருகிறேன் என்று கண்ணீரோடு வேண்டிக் கொண்டபொழுது ஏசாயா 41:13 ன்படி உன் தேவனாகிய, கர்த்தராகிய நான் உன் வலதுகையை பிடித்து, பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன் என்று வாக்குபண்ணினார்.

ஆண்டவரின் அழைப்பிற்கு கீழ்ப்படிந்து ஊழியத்திற்கு அர்ப்பணித்து வேதாகம கல்லூரியில் சில வருடங்கள் கல்வி கற்க தேவன் அனுமதித்தார். இயேசுவையே முற்றிலும் சார்ந்து நிற்கும் கிருபையை தேவன் இங்குதான் கற்றுக் கொடுத்தார். தெருப்பிரசங்கங்களில் பயன்படுத்தினார். இந்நிலையில் 1977ம் ஆண்டு சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு மலையிலுள்ள ஆதிவாசி மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க ஒரு குழுவாக சென்ற பொழுது தேவன் இவ்வூழியத்தைக் குறித்த தரிசனத்தைக் கொடுத்தார். ஒரு நாள் அதிகாலைநேரம் மலையுச்சியில் தனித்து தேவ சமூகத்தில் காத்திருந்த பொழுது இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரைக் கர்த்தர் கொடுத்தார். வேதாகமக் கல்லூரிப்படிப்பை முழுவதுமாக படித்து முடிக்க ஆண்டவர் அனுமதிக் கொடுக்கவில்லை.

முழு நேரமாக ஊழியம் செய்ய வேண்டும் என்ற அழைப்பு வந்த உடன் சென்னையை மையமாக வைத்து ஊழியம் செய்ய பெற்றோர்கள் ஆலோசனை கொடுத்தனர் அப்பொழுது உன் சொந்த கிராமத்திற்கு போஅங்கிருந்துதான் என் ஊழியத்தை நீ நிறைவேற்ற வேண்டும் என்று ஆவியானவர் திருவுளம்பற்றினார். ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சொந்த கிராமமாகிய நாலுமாவடியில் இருந்து கொண்டு அழைக்கிற சபைகளில் சென்று ஊழியம் செய்து வந்தார்கள். மீதியான நேரங்களில் வனாந்திர பகுதிக்கு சென்று பலமணி நேரங்கள் தேவசமூகத்தில் காத்திருப்பார்கள். 1978ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி திங்கட்கிழமை இந்த வனாந்திரத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது கர்த்தர் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். ஆண்டவருக்காக செய்து முடிக்க வேண்டிய அநேக ஊழியங்களைக் காண்பித்தார். அன்று காண்பித்த தரிசனங்கள்தான் இதுவரை இவ்வூழியத்தில் காலா காலங்களில் நிறைவேறி வருகிறது.

அழைத்தவர் உண்மையுள்ளவர். இதுவரை நடத்தினார். இனிமேலும் நடத்துவார்... சகோதரர் அவர்களை தேவன் இன்னும் வல்லமையாக திரள்கூட்டமானவர்களுக்கு சுவிஷேசத்தை அறிவிக்கும் பாத்திரமாக பயன்படுத்துவாராக.

  • இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் 1.தெச. 5:13
  • எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்.  (1பேது 2:17)
Thanks to

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக