Translate

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறார்..!

    எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கானானை நோக்கி அணியணியாக பயணம் செய்துகொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் நடுவில் தங்கி அவர்களை வழிநடத்தும்படியாக; ஆசரிப்புக்கூடாரம், உடன்படிக்கைப்பெட்டி என சிலவற்றை உண்டாக்குமாறு கர்த்தர் கட்டளையிட்டார். இவையனைத்தும் சித்தீம் என்னும் மரத்தால் செய்யப்பட்டது.

    கர்த்தர் மோசேயிடம் கூறியதாவது, "சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக. அதை எங்கும் பசும்பொன்தகட்டால் மூடுவாயாக... (யாத் 25:10). பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; (யாத் 25:16) கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.  அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன். (யாத் 25:21-22) கர்த்தர் கூறியபடியே அவர்கள் அனைத்தையும் செய்தனர். கர்த்தரும் வாக்குமாறாதவராய் அவர்கள் நடுவிலே தங்கி அவர்களை அற்புதமாக வழிநடத்தினார்.

    மரத்தின் ஒரு பகுதி பலகையாக மாற்றப்படவேண்டுமானால் அது அந்த மரத்தைவிட்டு பிரிக்கப்படுகிறது. அதன் வெளிப்புறத் தோல் மற்றும் தேவையற்ற பகுதிகள் முற்றிலுமாக அகற்றப்படுகிறது. நாமும்கூட கர்த்தர் விரும்பும்விதத்தில் பிரயோஜனப்பட வேண்டுமானால் இதுவரை நாம் வாழ்ந்துவந்த பாவ வாழ்க்கையை விட்டு விலகி கர்த்தரின் கரத்தில் நம்மை முழுவதுமாக அர்ப்பணிப்பவர்களாக; நம்மில் ஒட்டியிருக்கும் சில பழக்கவழக்கங்கள்; இன, மொழி, ஜாதி வெறிகள் போன்ற தேவனுடைய நாமத்துக்கு மகிமையை கொண்டுவராதவற்றை முற்றிலும் அகற்றுபவர்களாக காணப்படவேண்டும்.

    சித்தீம் மரத்தினால் செய்யப்பட்ட உடன்படிக்கைப்பெட்டி பொன்னால் மூடப்பட்டு அதனுள் கர்த்தரின் கற்பனைகள் அடங்கிய கற்பலகை வைக்கப்பட்டு பெட்டியின்மேல் கிருபாசனம் வைக்கப்பட்டதுபோல நாம் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாக இருதயத்தில் அவருடைய வசனங்கள் எழுதப்பட்டவர்களாக அதன்படி நடப்பவர்களாக எப்பொழுதும் ஜெபத்தால் கர்த்தரோடு இணைந்திருப்பவர்களாக கர்த்தருடைய மகிமையை சுமப்பவர்களாக வாழவேண்டும், வேதம் சொல்லுகிறது, "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? -(1கொரி 3:16)"

சகோதனே.! சகோதரியே.! தேவன் நம்மை சந்திப்பவராக; நாம் தேவனை சந்திப்பவர்களாக; தேவன் நம்மோடு வசிப்பவராக காணப்படுவோமானால்  நாம் ஒருபோதும்
    வழி தேடுபவர்கள் அல்ல வழிகாட்டுபவர்கள்
    ஒளி தேடுபவர்கள் அல்ல ஒளியானவர்கள்
    பயந்து ஓடுபவர்கள் அல்ல சாத்தானை துரத்துபவர்கள்
    அங்கலாய்பவர்கள் அல்ல ஆர்ப்பரிப்பவர்கள்
    கலங்கி நிற்பவர்கள் அல்ல கட்டளையிடுபவர்கள்

சிந்தனைக்கு:-
உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.- (யாத் 34:10)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக