Translate

உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்



நாற்பது ஆண்டுகள் எகிப்திய இளவரசனாக , ஏறக்குறைய 35 ஆண்டுகள் பார்வோனின் வீட்டில் வளர்ந்த மோசே;  தான்மட்டுமல்லாது தலைமுறை தலைமுறையாக தனது வாரிசுகளும் அரசகுடும்பத்தினராக வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் தனக்கு முன்பாக இருந்தபோதும் அதை தெரிந்துகொள்ளாமல் அடிமைப்பட்டுகிடந்த தனது சகோதரர்களுக்கு உதவமுயன்றார்.  அதன்பயனாக எகிப்தின் சுகபோக வாழ்க்கையை விட்டு வனாந்திரத்துக்கு சென்று ஆடுமேய்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னாட்களில் அவர் தேவனால் சந்திக்கப்பட்டு எகிப்துக்கு திரும்பிவந்து தனது சகோதரர்களை விடுவித்து கானானை நோக்கி வழிநடத்தும்படியாக தேவன் அவரை வல்லமையாக பயன்படுத்தினார்.

மோசேயின் பெற்றோர் இருவருமே இஸ்ரவேலர்கள். தேவனை அறிந்தவர்கள். ஏறக்குறைய 5 ஆண்டுகள் மோசே தனது பெற்றோரால் வளர்க்கபட்டிருக்ககூடும். தான் யார் என்பதை அறிந்துகொண்ட மோசேயை அதற்கு பின் வந்த 35 ஆண்டுகால கல்விமுறையோ சுகபோக வாழ்க்கையோ துளியும் மாற்றிவிடமுடியவில்லை.

சகோதரனே.! சகோதரியே.! நீங்கள் ஒருவேளை 'என் பிள்ளைகள் இந்த பாவம் நிறைந்த உலகில் வாழப்போகிறார்களோ..?' என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கக்கூடும். கலங்கவேண்டாம்..!!!. வேதம் சொல்லுகிறது 'உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.-(ஏசா 54:13)'

சிந்தனைக்கு:-
உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.- (உபா 4:10) 


தேவனே நம்முடைய அடையாளம்..! God is Our Identity



இயேசு கிறிஸ்து தனது ஊழிய பயணத்தின் இறுதியாக எருசலேம் நகருக்குச் செல்லும்போது தனது சீடர்களை அனுப்பி குறிப்பிட்ட கிராமத்திலிருந்து கட்டப்பட்டிருந்த ஓர் கழுதைக்குட்டியை அவிழ்த்துவரச்செய்து அதன்மீது ஏறி எருசலேம் நகருக்குள் பிரவேசித்தார். அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். அவற்றின்மீது நடந்தபடியே ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்ற விண்ணைமுட்டும் கோஷங்களோடு கர்த்தரை சுமந்துகொண்டு அந்த கழுதை எருசலேமுக்குள் பிரவேசித்தது.

இன்றும்கூட அந்த கழுதை சுவிஷேச பிரசங்கங்களில் அதிகமாக நினைவுகூறப்படுகிறது. பல தேவமனிதர்கள் தங்களையே அந்த கழுதையுடன் ஒப்பிட்டு மகிழ்வதைக்கூட காண்கிறோம். அந்த கழுதையின் அடையாளம்(identity) அதன் பிறந்த இடமோ வளர்ந்த இடமோ அதன் தனிப்பட்ட திறமைகளோ அல்ல. மாறாக அதன்மீது பயணம்செய்த இயேசு கிறிஸ்துவே அதன் அடையாளம்(identity).  ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒவ்வொரு தேவமனிதனுக்கும் அவர்களில் வசிக்கும் கிறிஸ்துவின் ஆவியானவரே அவர்கள் அடையாளம்(identity).  

வேதம் சொல்லுகிறது, நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ...... தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது;  நீங்களே அந்த ஆலயம். (1கொரி 3:16-17)  நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்... (1கொரி 3:23) அண்டசராசரங்களையும் படைத்து ஆளுகை செய்யும் சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மில் வசிக்கும்போது நமக்கு சிறப்பைத்தருவது அல்லது நமக்கு அடையாளத்தைத் தருவது நமது இனமா? மொழியா? ஜாதியா? அல்லது தேவனின் அருகாமையா? 
தேவனே நம்முடைய அடையாளம்..! God is Our Identity


கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ..!



மோசேயின் முற்கால வரலாறு அவரை சாந்த குணம் உடையவராக நமக்கு அறிமுகப்படுத்தவில்லை; மாறாக ஒரே அடியில் ஒருமனிதனை கொலை செய்த ஓர் எகிப்திய இளவரசனாகத்தான் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆனால் 'மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.' என்று எண்ணாகமம் 12:3 சொல்லுகிறது.

எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?. இளவரசராக வாழ்ந்த மோசே கொலையாளியாக எகிப்தைவிட்டு தப்பியோடும்போது அவருக்கு வயது நாற்பது; பிந்ததைய நாற்பது வருடம் அவர் ஒரு குடும்பஸ்தனாகவும் ஆட்டுமேய்ப்பராகவும் வாழ்ந்த எளிய வாழ்க்கை அவருக்கு பொறுமையையும் சாந்தகுணத்தையும் வெகுவாக கற்றுக்கொடுத்திருந்தது. அந்த நல்லகுணங்கள் அவருக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த எந்த மனிதனுக்கும் இல்லாத சிறப்பை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. மோசேயை குறித்து தேவனே சொல்லுகிறதாவது 'என் தாசனாகிய மோசேயோ .... என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்.  நான் அவனுடன் மறைபொருளாக அல்ல முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்;.' (எண்; 12:7-8) 

சகோதரனே.! சகோதரியே..!
நம் வாழ்க்கையில் பலவிதமான சோர்வுகள், தோல்விகள், ஏமற்றங்கள் வரும்போது சோர்ந்துபோகாமல் நம்பிக்கையுடன் கர்த்தருக்கு காத்திருப்போம். சில சூழ்நிலைகள் மூலமாக நாம் நம்முடைய எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தேவையான நற்பண்புகளை வலிமையை தேவன் நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும் ஏற்றகாலத்தில் அவர் நம்மை நிறைவான ஆசீர்வாதங்களுடன் சந்திப்பார்.

வேதம் சொல்லுகிறது ' இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். - (ஏசா 40:30)