Translate

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்...

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்,  நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்(யோவா 15:7) 

தேவனில் நாமும் தேவ வசனம் நம்மிலும் நிலைத்திருந்தால் நாம்  அடையும் மேன்மையைக் குறித்து இந்த வசனம் விவரிக்கிறது. இந்த வசனத்தின்மூலம் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் என்பதான வாக்குத்தத்தத்தையும் பெறுகிறோம். ஆனால் அந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க இந்த வசனத்தின் முதல்பகுதியில் கூறப்பட்டுள்ள இரு நிபந்தனைகளும் நிறைவுசெய்யப்படுவது அவசியம். அவையாவன
  1.  நாம் தேவனில் நிலைத்திருத்தல்
  2. தேவ வார்த்தைகள் நம்மில் நிலைத்திருத்தல்
 நாம் தேவனில் நிலைத்திருப்பது எப்படி?
தேவன்மீது விசுவாசம் வைத்து அவரையே நமது நம்பிக்கையாக கொண்டு அவரது வார்த்தைகளின்படி வாழ்வதை தேவனில் நிலைத்திருப்பது என்று கூறலாம்.

இயேசு சென்னார்: (யோவா 15:5-6) நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல  அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.
திராட்சச்செடி

இந்த வார்த்தைகளின் மூலம் தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது அல்லது அது எப்படி இருக்க வேண்டும் என்பது அழகாக விளக்கப்படுகிறது. செடியுடன் இணைந்திருந்து சத்துப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் கொடிமட்டுமே வளரமுடியும் மென்மேலும் கனிகொடுக்கமுடியும். அதுபோல அனுதின ஜெபம் திருவசன தியானம் முதலியவற்றால் கிறிஸ்துவுடன் ஜக்கியமாக இருப்பதன் மூலமாக மட்டுமே நாம் ஆவிக்குரிய போஜனத்தை பெற்றுக்கொள்கிறோம். இந்த தொடர்பு துண்டிக்கப்படுமேயானால் ஆவிக்குரிய வாழ்க்கையில் மரித்தவர்களாக மாறுவதுடன் எரிநரகத்துக்குப் பாத்திரராகவும் மாற்றப்படுகிறோம். தேவனில் நிலைத்திருப்பவர்கள்  மட்டுமே தேவன் விரும்பும் தூய வாழ்க்கை வாழ முடியும்.

தேவனில் நிலைத்திருக்கவேண்டியது கிறிஸ்தவ வழ்க்கைக்கு அவசியமான ஒன்று தேவனில் நிலைத்திருப்பவர்கள் கனிகொடுப்பவர்களாகவும் காணப்படவேண்டியது அவசியம். அதாவது திருவசனத்தின்படியான வாழ்க்கை வாழ்ந்து  தான்மூலமாக கிறிஸ்த்துவை மற்றவர்களுக்கு காட்டவேண்டும். மேலும் வேதனையில்/துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிமுகப்படுத்துவதன் மூலமாகவும் வசனத்தின்படியான தூய வாழ்க்கை வாழ்ந்து இயேசுவைப் பிரதிபலிப்பதன் மூலமாகவும் நாம் கனிகொடுக்கும் கொடியாக காணப்படமுடியும்.

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். (யோவா 15:1-2)
தேவனில் நிலைத்திருப்பதாகக்கருதும் மக்களில் பலர் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களைச் செய்வதன்மூலம் அவரைவிட்டு வழுவிப்போகின்றனர். அவர்கள் செய்யும் சில தவறுகள் இங்கு பட்டியலிடப்படுகின்றனதேவனைவிட சூழ்நிலைகள் மனிதர்கள் செல்வம் வெல்வாக்கு தன் திறமைகள் இவற்றை சார்ந்திருத்தல். தேவனை விட்டு அன்னிய தேவர்கள் அசுத்த ஆவியால் குறிசெல்பவர்களை நாடி செல்லுதல். பொருளாசையை சார்ந்துகொள்ளுதல் என்பவையே அவை.

வேதம் சொல்லுகிறது:  மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(எரே 17:5)

தேவ வார்த்தைகள் நம்மில் நிலைத்திருத்தல் என்றால் என்ன?
இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்கு நேரடியாக விளக்கிக்கூறிய உவமை இதை தெளிவாக விளக்குகிறது.

...விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிகமண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார். (மாற் 4:3)


அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். (மாற் 4:10)

விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப் போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள். அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் ... (மாற் 4:14)

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துதாமே அழகாக விளக்கிய உவமையின் மூலம். தேவ வசனம் நம்மில் நிலைகொண்டு வளர நம் மனம் நல்ல நிலமாகவும் திருவசனத்ததை எற்று அதன்படி வாழ்வதற்கு தயாரானதாகவும் காணப்பட வேண்டும் என்பதை அறியலாம். தேவ வசனம் நம்மில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் (பொழுதுபோக்குகள் நண்பர்களுக்கு செலவிடும் நேரம் சமூகவலைதளங்களுக்கு செலவிடும் நேரத்தைவிட) அதிக நேரத்தை வேதவசன தியானத்தில் செலவிடவேண்டும். அதன்மூலம் நாம் உணர்ந்த சத்தியங்களை நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதுடன் (விதை முளைத்துவருதல்) நண்பர்களுக்கும் எடுத்துக்கூறி அவர்களையும் நல்வழிப்படுத்தவேண்டும் (ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிற அனுபவம்) இவ்வாறு காணப்படுவீர்களானால் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

இயேசு சொல்கிறார்மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.(யோவா 14:12-13

இந்த வசனதியானம் உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கும் என கருதுகிறோம்இதை உங்கள் நண்பர்களுக்கும் share செய்யலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக