Translate

குருத்தோலை ஞாயிறு - சிந்தனைகள்


இயேசு கிறிஸ்து தமது ஊழிய வாழ்க்கையை நிறைவு செய்ய வேண்டிய காலம் நெருங்கிய போது சீடர்களுடன் எருசலேமுக்கு பயணமானார். அவர்கள் ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது இயேசு தம் சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள், உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.

            கி.மு 500களில் இஸ்ரேல் தேசத்தில் ஓசியா என்ற தீர்க்கதரிசி இருந்தார். அவர் கலம்காலமாக இஸ்ரேல் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மேசியாவின் வருகையை குறித்து சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். “ (சகரியா-9:9)  என்று  தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். கி.பி-30களில் அவரது தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் எருசலேம் பயணத்தின் மூலம் நிறைவேறியது.

சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்;  வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.  இவ்வாறே அவர்கள் எருசலேம் நகருக்குள் நுழைந்தனர்.

 இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்கு ஊர்வலமாக செல்லுதல்

          இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்கு ஊர்வலமாக சென்ற இந்த நிகழ்வை தான் உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறு என்றபெயரில் கிறிஸ்தவர்களாகிய நாம் நினைவுகூறுகிறோம்.

சிந்தனைக்கு:
(இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்த ஊர்வலமாக அழைத்து சென்ற அதே எருசலேம் ஜனங்கள்தான் பின்பு இயேசுவை சிலுவையில் அறையச்செய்தார்கள் )

            நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை மேலும் வேதனைக்குள்ளாக்கும் பாவம் ஏதேனும் நம்மிடம் உள்ளதா...? என இந்த நேரத்தில் சிந்திப்போம். மேலும் நாம் உலகத்தின் கடைசிகாலத்தில் இருக்கிறோம் என்பதையும் இந்த நேரத்தில் சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

கடைசி காலங்களில் காணப்படும் தேவன் வெறுக்கும் மனிதர்களின் தன்மைகளை வேதம் பின்வரும் வசனங்கள் மூலம் தெளிவாகக் கூறுகிறது . (2தீமோ 3:1-5) “மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.”.

கர்த்தருடைய சிலுவைப்பாடுகளை தியானிக்கும் இந்த நாட்களில் உலக மனிதர்களிடம் மிகச்சாதாரணமாகக் காணப்படும் இத்தகைய  பாவச்செயல்கள் ஏதேனும் நம்மிடம் இருக்குமானால் அதை விட்டுவிட தூய ஆவியானவர் தாமே துணை செய்வாராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக