Translate

கர்த்தரின் பார்வையில் திறமைகள் &தகுதிகள்



அன்றைய எகிப்து;  வலிமை மிக்க பேரரசு;  நானூறு ஆண்டுகளாக அடிமைகளாக இருக்கும் மக்கள்; ஆறு லட்சம் பேர். இவர்களை விடுவித்து அவர்கள் முன்னோரான ஆபிரகாமுக்கு தேவன் வாக்கு கொடுத்த இடமாகிய கானான் என்ற நாட்டுக்கு அழைத்து செல்ல தேவன் ஒரு மனிதனை தெரிந்துகொண்டார். அவர்தான் பின்நாட்களில் இஸ்ரேலிய மக்களின் மாபெரும் தலைவராக சிறந்துவிளங்கிய மோசே; அடிமைகளாக இருந்த அந்த ஜனங்கள்தான் இஸ்ரவேலர்கள்

ஆறு லட்சம்பேரை ஒருங்கிணைப்பது என்பது மிகுந்த திறமை வாய்ந்த ஒருவருக்குகூட எளிமையான விஷயம் அல்ல. மிகமுக்கியமாக தெளிவான தகவல் தொடர்புக்கு கணீர்குரல் மற்றும் பேச்சுத்திறமை மிகவும் அவசியம். ஆனால் தேவன் தேர்வுசெய்த மோசேயின் நிலை என்ன? அவரே கர்த்தரிடம் சொல்லுகிறார். ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன்- (யாத் 4:10) ஒலிப்பெருக்கி வசதிகூட இல்லாத அந்தகாலத்தைய மோசேயின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்..!

சகோதரனே! சகோதரியே..!
உங்கள் திறமைகள் தகுதிகளின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கை அல்லது தாழ்வுமனப்பான்மையை தூர எறியுங்கள். கர்த்தருடைய பலத்தினால் அல்லாது  வேறு எந்தவிதத்திலும் நாம் அசாதாரணமான காரியங்களை செய்துவிட முடியாது.  நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்  நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.”- (யோவா 15:5)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக