முதலை ஒன்று காட்டில்
இருந்த நதிக்கரையில் வாழ்ந்து வந்தது. தினமும் அதன் பசிக்குத் தேவையான ஏதாவது ஓர்
உணவு கிடைத்து வந்தது. இருந்தாலும் அதன் மனதில் ஓர் ஆசை இருந்தது. அந்த நதியை
ஒட்டி ஒரு புல்வெளி இருந்தது. அதில் முயல்கள் கூட்டமாய் வந்து விளையாடும். அதில் ஒரு
முயலையாவது ருசித்துப் பார்க்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. பெரிய பெரிய
யானைகளும், சிங்கங்களும்கூட
தண்ணீர் குடிக்க வந்து முதலைக்கு பலியானதுண்டு. ஆனால் இந்த முயல்கள் மட்டும் ஒரு
முறை கூட நீர் பருக வந்ததே இல்லை. எப்படியாவது ஒரு முயலையாவது விழுங்கிவிடப் பல நாட்களாய்க்
காத்திருந்தது.
ஒருநாள் ஒரு கொழுத்த
முயல் குட்டி வேடிக்கை பார்ப்பதற்காக நதியின் கரையருகே வந்தது. அப்போது அந்தக்
கூட்டத்தில் இருந்த வயதான முயல், ""அடேய், அங்கே கொடிய முதலை ஒன்று இருக்கிறது. நீ போனால் உன்னை
விழுங்கி விடும்'' என்று எச்சரிக்கை
செய்து அதைக் கையோடு இழுத்துச் சென்றது. ஆனால் இந்த எச்சரிக்கை குட்டி முயலின்
ஆவலை மேலும் தூண்டிவிட்டது.
மறுநாள், மற்ற முயல்கள்
கவனிக்காத சமயத்தில் குண்டு முயல் மீண்டும் நதிக்கரைக்கு வந்தது. அங்கே அது கண்ட
காட்சி அதை ஆச்சரியப்பட வைத்தது. முதலை ஆவென்று வாயைப் பிளந்தபடி அமைதியாகப்
படுத்திருந்தது. ஒரு சிறிய பறவை அதன் வாய்க்குள் புகுந்து அதன் பல்லிடுக்கில்
இருந்து எதையோ எடுத்து எடுத்து விழுங்கிக் கொண்டிருந்தது. முயலுக்கு மிகவும்
வியப்பாக இருந்தது. "இத்தனை நல்லவரும், அமைதியானவருமாக இருக்கும் ஒருவரையா இந்தக் கிழட்டு முயல்
கொலைகாரன் என்றது, இதில் ஏதோ
உள்நோக்கம் இருக்கிறது' என்று எண்ணிக்
கொண்டது. சற்று தைரியத்துடன் முதலையின் அருகே சென்றது. முயலின் வாசனை பட்டு முதலை
கண்விழித்துப் பார்த்தது.
"அடடா வா தம்பி. இந்த ஏழையின் வீட்டுக்கு உன்னை
வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும்
தாராளமாகக் கேட்கலாம்'' என்றது.
முயலுக்குக் கண்ணீரே வந்துவிட்டது.
ஆகா..! எத்தனை உயர்வான
மனது!
"ஒன்றுமில்லை அண்ணா. இந்த அழகான இடத்தைப்
பார்க்க எனக்கு நெடுநாள் ஆசை. ஆனால் என் கூட்டம் உங்களைப் பற்றி இல்லாததும்
பொல்லாததும் சொல்லி மிரட்டி வைத்து விட்டது. நீங்கள் பெரிய கொலைகாரர் என்று
சொன்னது'' என்றது.
முதலை சிரிசிரி என்று
சிரித்தது. "சரி, அவங்க சொல்றது
இருக்கட்டும். நீ என்னைப் பத்தி என்ன நினைக்கிறே?'' என்றது.
"எனக்கு உங்களப் பாத்தா நல்லவராதான் தோணுது.
இருந்தாலும் நீங்க பல மிருகங்களை தண்ணிக்குள்ள இழுத்துட்டுப் போனதா
கேள்விப்பட்டிருக்கேனே'' என்றது. முதலை
மீண்டும் சிரித்தது.
"நீ சொன்னது உண்மைதான். நான் மிருகங்களை
இழுத்துச் செல்வதும் உண்மைதான். ஆனால் அந்த மிருகங்கள் அக்கரைக்குப் போக என்னிடம்
உதவி கேட்டதால்தான் அவற்றை சிரமம் பார்க்காமல் அங்கு கொண்டு போய் விட்டுவிட்டு
வருவேன். அதை ஒரு சேவையாதான் செய்துகிட்டு வரேன். ஏன்னா இந்த ஆத்துக்குள்ள பெரிய
சுழல் இருக்குது. எவ்வளவு பெரிய மிருகமா இருந்தாலும் முழுகடிச்சிடும். ஆனா இந்த
இடத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு அது பெரிய விஷயமில்லை. அதனால தான் மிருகங்களை
பத்திரமா கொண்டு சேக்குற வேலையை நானே செய்றேன். நான் கெட்டவனா இருந்திருந்தா இந்த
சின்னப் பறவை என் வாயில் நுழைந்து இரை தேடுமா நான் வாயில் விரலை விட்டால் கூடக்
கடிக்கத் தெரியாத அப்பாவி தம்பி. அக்கரையில் இருக்கும் ருசியான கிழங்குகளை
சாப்பிடத்தான் எல்லா மிருகமும் என்னோட உதவியைக் கேக்குது'' என்றது.
கிழங்கு என்ற வார்த்தையை
கேட்டதும் முயலுக்கு நாவில் நீர் சுரந்தது. "இத்தனை நாளும் தெரியாம போச்சே
அண்ணே, என்னையும் அங்கே
கொண்டு விடமுடியுமா?'' என்றது.
"கொண்டு போய் விடுறது மட்டுமில்ல. மறுபடியும்
பத்திரமா அழைச்சிட்டு வந்தும் விடுறேன். இந்தப் பறவை மாதிரியே நீயும் வந்து
வாய்க்குள்ள பத்திரமா உக்கார்ந்துக்க'' என்றது. முயலும் தயங்காமல் முதலையின் வாயில் நுழைந்தது.
"அண்ணே, நிறைய கிழங்கு
இருக்கும் இடமா பாத்து இறக்கி விடுங்க. ரொம்ப பசிக்குது'' என்றது முயல்.
முதலை சொன்னது, "அட முட்டாளே முதல்ல
என்னோட பசி அடங்கட்டும்''
என்று கூறி, குட்டி முயலை
விழுங்கியது.
பரிசுத்த வேதாகமத்தில்
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள் ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கர்ச்சிக்கிற
சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5:8 என்று
பார்க்கிறோம்.
முதலையும், பறவையும்
நெருக்கமாக இருந்ததைப் பார்த்து ஏமாந்த முயல் முதலைக்கே இரையாகிப் போனது. சில
வேளைகளில் பாவப்பழக்கங்களில் வாழும் சிலர் நம்மைப் பார்த்துக் கேட்கிற கேள்வி சில
நேரங்களில் நம்மைக்கூடத் தடுமாற வைக்கும். "நான் நல்லாதானே இருக்கேன் செத்தா
போயிட்டேன்' என்பார்கள்.
முதலை தனது பல்லை சுத்தம் செய்ய அந்தப் பறவையை விட்டு வைப்பது போலவே பிசாசும்
தனக்கு சாட்சியாக சிலரை நன்றாக வைத்திருப்பான். இதையெல்லாம் நம்பி நாமும் மோசம்
போய் விடக்கூடாது. இந்த உலகத்தில் வாழும் நாம் மிகவும் தெளிந்த
புத்தியுள்ளவர்களாயிருந்து சிறப்புடன் வாழ்வோம்.
- ஒய். டேவிட் ராஜா
originally posted by dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக