Translate

ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு...!

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.  (1பேது 5:6,7)

பெரிய நிறுவனமொன்றில் ஒரு பொறுப்பான வேலைக்கு ஆட்களை தேர்வுசெய்ய குறிப்பிட்ட நாளில்  நேர்முகத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த நாளில் அனேகர்  நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் அந்த தேர்வில் கலந்துகொள்ள கடந்துவந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் நிறுவனத்தின் வரவேற்பறையில் அமர வைக்கப்பட்டனர்நேரம் கடந்துகொண்டேயிருந்தது ஆனால் தேர்வு தொடங்குவதற்கான எந்த அறிகுறியும்  அங்கு தென்படவில்லை. 


நேரம் ஆக ஆக நேர்முகத்தேர்வுக்கு வந்தவர்களில் பலரின் பொறுமையும் குறைந்துகொண்டே சென்றது.மேலும் நிறுவன பணியாளர்கள் தேர்வர்களை கண்டுகொள்ளாமல் தங்கள் அலுவல்களில் மூழ்கியிருந்தது வெந்த புண்ணில் வேல் பாச்சுவதாக காணப்பட்டது.  தேர்வர்களில் பலர் அந்த நிறுவனத்தை இனிய மொழிகளில் (…!!!?) அர்ச்சித்துவிட்டு கடந்து சென்றனர். 

சிலரோவெனில் சாவகாசமாக வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு நிறுவனத்தின் செயலைக்குறித்து முறுமுறுப்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். நிறுவன கேண்டீனில் ஒரு கட்டுகட்டிவிட்டு மதியமும் அவர்களது சேவையை தொடர்ந்தனர். மிகச்சிலர் மட்டும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் அந்தநிறுவனத்தின் மனிதவளத் துறையினர் கண்காணிப்பதை அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. சுமார் 3-மணியளவில் நிறுவன பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டினர். முறுமுறுப்பாளர்கள் வெட்கம் கலந்த வேதனையுடன் இடத்தை காலிசெய்தனர். இந்த சம்பவத்தில் ஆழமான ஆவிக்குரிய உண்மை ஒன்று மறைந்திருக்கிறது.

இறைவன் நம் அனைவரையும் ஓர் உயர்ந்த நோக்கத்துடன் படைத்துள்ளார். அந்த குறிப்பிட்ட நோக்கத்தை அடைய வேண்டுமானால் நாம் அதற்க்கு மனதளவில் தகுதியுடையவர்களாக இருப்பதுடன் விசுவாசமுடையவர்களாகவும் பொறுமையுடையவர்களாகவும் காணப்படவேண்டும். நிராகரிப்புகள் சோதனைகள் துன்பங்கள் வேதனைகள் போன்றவை நம்மை மனதளவில் பண்படுத்துவதற்காக கூட நம் வாழ்க்கையில் அனுமதிக்கப்படக்கூடும். அந்த நேரத்திலும் நாம் இறைவன் மீது நம்பிக்கையுடைவர்களாக பொறுமையுடனும் விசுவாசத்துடனும் காணப்படவேண்டியது அவசியம். இதற்க்கு ஆதாரமாக வேதாகமத்தில் பல பரிசுத்தவான்களின் வாழ்க்கையை சுட்டிக்காட்டலாம்.

யோசேப்பு- நிராகரிப்புகள், அநியாயமான தண்டனைகள், சிறைச்சாலை வாசம் ஆகியவை அவரை புடமிட்டது. அந்த நேரத்திலும் அவர் விசுவாசத்துடனும் பொறுமையுடனும் காணப்பட்டார்.

மோசே- 40 ஆண்டுகால வனாந்திர வாழ்க்கை அவரை பண்படுத்தியது, இதனால் அவர் சாந்தகுணமுடையவராக மாறினார். அந்த நேரத்திலும் அவர் விசுவாசத்துடனும் பொறுமையுடனும் காணப்பட்டார்.

தாவீது- சவுலால் துரத்தப்பட்டபோது இஸ்ரவேல் நாடு முழுதும் அவர் கால்படாத இடமில்லை என்னும் அளவுக்கு பிரயாணப்பட்டார். பிற்காலத்தில் வந்த போர்களை சமாளிப்பதற்கான அனுபவ அறிவை பெற்றார். அந்த நேரத்திலும் அவர் விசுவாசத்துடனும் பொறுமையுடனும் காணப்பட்டார். தேவனோடு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தார் என்பதற்க்கு அவர் இயற்றிய சங்கீதங்களே சான்று.


சிந்தனைக்கு:
  • சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.(யாக் 1:12) 
  • மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.(1கொரி 10:13)
  • இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.(ஏசா 48:10)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக