(நீதி 14:12) மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
வானில் உயரமாகப் பறந்துகொண்டிருந்தது அந்தப்பட்டம். அது அளவில் பெரியது மட்டுமல்ல அழகானதும்கூட, அதை இயக்கிக்கொண்டிருந்த கயிற்றின் ஒருமுனை அந்த பட்டத்துடனும் மறுமுனை அதைப் பறக்கவிட்ட சிறுவனின் கையிலும் இருந்தது. அவனது கவனம் முழுவதும் அந்தப் பட்டத்தின் மீதே இருந்தது. அது சேதமாகாமலும் சிறப்பாகவும் பறக்கவேண்டும் என்பதே அவனது ஒரே இலட்சியமாக இருந்தது.
சிறிது நேரம் பறந்தபின்பு அந்தப் பட்டத்திற்கு ஒரு எண்ணம் ஏற்ப்பட்டது. தான் கயிற்றால் கட்டப்பட்டுள்ளதால் தன்னால் உயரமாகப் பறக்கமுடியவில்லை என்பதே அது. இப்போது அதனுடைய கோபம் கயிற்றின்மீதும் கயிற்றின் மறுமுனையைப் பிடித்துள்ள சிறுவன்மீதும் திரும்பியது. அவனை அது எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தது. தீவிர யோசனைக்குப்பின் தன் அருகில் பறந்துகொண்டிருந்த மற்றொரு பட்டத்தின் உதவியுடன் தன்னைக் கட்டியிருந்த அந்தக் கயிற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது.
உயர உயரப் பறக்கலாம் என்ற கனவுடன் தன்னை கயிற்றை அறுத்துக்கொண்ட பட்டத்திற்கு அதன் முடிவு அதிர்ச்சியுடன் கூடிய ஏமாற்றமாக இருந்தது. சிறிது நேரத்திலேயே அது காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு குப்பைத்தொட்டிக் காகிதமாக மாறியது.
நமது வாழ்க்கையில் நம்மைக் கட்டுப்படுத்தும் (வேதத்தின்படியான) பல்வேறு அதிகாரங்கள் உள்ளன. பெற்றோர் வயது முதிர்ந்தவர்கள் ஆசிரியர்கள் அதிகாரிகள் சபை போதகர்கள் என இந்த பட்டியல் நீளுகிறது. வேதம் கூறும் கட்டளைகளுக்கு நாம் முழுவதுமாக கீழ்ப்படிய வேண்டும். வேதம் அல்லது அதிகார ஸ்தானத்தில் இருப்பவர்கள் கூறும் ஆலோசனைகள் அல்லது கட்டளைகளை பட்டத்தைக் கட்டும் கயிற்றுக்கு ஒப்பிடலாம்.
வாகன விபத்துக்களில் சிக்கி மரணமடையும் அல்லது தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு உயிர்தப்பும் வாலிபர்களை கணக்கிட்டால் அவர்களில் பெரும்பாலானோர் சலைவிதிகளையும் தங்களது பெற்றோர்களது ஆலோசனைகளையும் தள்ளிவிட்டவர்களாகக் காணப்படுகின்றனர். அதாவது ஆலோசனைகளை தங்களுக்கு எதிரன அடக்குமுறையாக கருதியவர்கள். பள்ளி/கல்லூரி பருவத்தில் காதல் என்ற பெயரால் படிப்பதற்கான நேரத்தையும் ஜெபிப்பதற்கான நேரத்தையும் வீணாகச் செலவிட்டவர்கள். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தேவ வார்த்தைகளையும் பெற்றோரின் அறிவுரைகளையும் தங்களுக்கு எதிரான அடக்குமுறையாகக் கருதுபவர்களாகக் காணப்படுகின்றனர்.
இவர்களில் சிலர் தேவனின் அன்பை உணர்ந்து மனம்திரும்புவர்களாகவும் பெரும்பாலானோர் தேவன் அவர்களுக்கென முன்குறித்த ஆசீர்வாதமான அன்பான குடும்ப வாழ்க்கையை விடுத்து துன்பமான துயரமான வாழ்கையை தாங்களே ஏற்ப்படுத்திக்கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். அவற்றில் பல மணமுறிவிலும் தற்கொலை கொலை போன்றவற்றிலும் முடிகிறது.தம்பி தங்கையே நமக்கென இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை அதை நாம் ஏன் நரகமாக்கிக் கொள்ள வேண்டும். அதிகமாக விவாதிக்கப்படும் இரு காரியங்களை மட்டும் இங்கு விவரித்தாலும் இந்த பட்டியல் மிக நீளமானது.
கீழ்ப்படியாமையால் வரும் விளைவுகளை தவிற்க என்ன செய்வது.? கர்த்தருடைய வேதத்தின்படி வாழ்வதே அதற்க்கான ஒரே வழி.
சிந்தனைக்கு:-
(சங் 119:9) வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.
(நீதி 2:1-5) என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
(நீதி 2:12-17) அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு, தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய். இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, இச்சகமான வார்த்தைகளைப்பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.
(நீதி 2:20)
ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.