Translate

சிந்தனைகள் சீராவதாக.. for Christian youths

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். (1தெச 5:21)

  • கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வேதம் வாசித்தல் ஜெபித்தல் ஆகியவை ஒரு கட்டிடத்தின் அஸ்திபாரத்தை போன்று மிக முக்கியமானது. எந்த அளவுக்கு அஸ்திபாரம் வலிமையாக, ஆழமாக உள்ளதோ அதைப்பொறுத்தே உயரமான பெரிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. அதுபோல எந்த அளவுக்கு வேதம் வாசித்தல் ஜெபித்தல் ஆகியவை காணப்படுகிறதோ அந்த அளவுக்கு வெற்றியுள்ள, வல்லமையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ இயலும்.

  • தேவன் சில முன்னேற்றங்களை () வெற்றிகளை உங்கள் வாழ்க்கையில் தரக்கூடும். அதேநேரம் தேவனுக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்ததை மகிமையை முன்னேற்றங்களுக்கோ () வெற்றிகளுக்கோ, மனிதர்களுக்கோ ஒருபோதும் கொடுத்துவிடக் கூடாது.

  • உங்களுக்கு உங்கள் எதிர்காலத்தைக் குறித்த பல திட்டங்கள் காணப்படலாம்..! ஆனால், தேவனுக்கும் உங்களைக் குறித்த ஒரு திட்டம் உண்டு. என்பதை மறந்துவிடக்கூடாது. அது ஒருவேளை உங்கள் திட்டங்களிலிருந்து மாறுபடலாம்.

  • உங்கள் வாழ்க்கையில் நெருக்கம் வருகிறது என்றால் தேவன் பெருக்கத்தை (வளர்ச்சியை முன்னேற்றத்தை) கட்டளையிடுகிறார் என்று அர்த்தம்.

  • கர்த்தர் உங்களை உருவாக்குகிறவர் எனில் உங்கள் தேவைகளையும் அவர் அறிவார். உங்கள் தேவைகள் விருப்பங்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் சரியானவிதத்தில் சந்திப்பார்.

  • நீங்கள் மிகவும் நம்பியிருந்த () உங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்த நபர்(கள்) உங்களைவிட்டு விலகலாம்..! இது மேற்படி நபர்களின் துணையின்றியே தொடர்ந்து முன்னேற தேவன் நம்மை  பலப்படுத்தி விட்டார் என்பதை காட்டுகிறது.

  • சில நேரங்களில் தேவன்  சில கொடூரமான மனிதர்களை உங்கள் வாழ்க்கையில் அனுமதிப்பது; உங்களை துன்பப்படுத்துவதற்காக அல்ல. மாறாக அவருடைய சித்தத்தின்படியான பாத்திரமாக மாற்றுவதற்காக.

  •  நாம் உடைக்கப்படாவிட்டால் சிலநேரங்களில் தேவன் விரும்பும் விதத்தில் நாம் பயன்படுத்தப்பட இயலாது. ( சிலரை உடைத்துதான் பயன்படுத்த முடியும் என்பது ஒரு சோகமான உண்மை).

  • அனேகருக்கு நான் ஒரு முள்ளாக (உபத்திரவம்) இருக்கிறேனே...! யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறேனே...! என்ற எண்ணம் உங்களுக்கு காணப்படுகிறதா...?  கலங்கவேண்டாம்..!!!  கர்த்தருக்கு கீழ்படிந்து அவரது வார்த்தைகளை மட்டும் கைக்கொண்டு பாருங்கள் அவர் உங்களையும் அதிசயமான விதத்தில் பயன்படுத்துவார். உங்கள் வாழ்க்கையிலும் அற்புதம் செய்வார்.

  • சிலநேரங்களில் தேவனால் நாம் பயன்படுத்தப்படவில்லையோ..!? என யோசிக்கத்தோன்றும். ஆனால் அது தவறான சிந்தனை. தேவன் நம்மை ஒரு உயரிய நோக்கத்திற்க்காகவே கிரயம் செலுத்தி மீட்டுள்ளார்.

  • நம்மில் பெரும்பாலானவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலே பயன்படுத்தப்படவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் தேவனுக்கு ஒவ்வொருவரைக்குறித்தும் தனிப்பட்ட நோக்கமும் திட்டமும் உண்டு. நாம் தேவசித்தத்தின்படி பயன்படுத்தப்பட அற்பணிப்புடன் காணப்பட வேண்டும்.

  • உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைக்குறித்து நீங்கள் அதிகமாகக் கலங்கவேண்டாம். உங்களை படைத்தவர், உங்கள்   திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்பட அனுமதிக்கமாட்டார்.
 ----                ----                ----


 என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
(ஏசா 41:8-10)

யார் இந்த மோசே...?

10 கட்டளைகள் அடங்கிய
கற்பலகைகளுடன் மோசே
 

யார் இந்த மோசே என்ற கேள்விக்கு, இஸ்ரவேல் மக்களின் விடுதலைப்பயணம் () கானான் பயணத்தை முன்னின்று நடத்தியவர் என்பது ஒரு பதிலாக இருக்கலாம். ஆனால் அதுமட்டுமே பதில் இல்லை அல்லவா...!

யார் இந்த மோசே...?

கோத்திரப்பிதாவாகிய இஸ்ரவேலின் ஒரு மகனாகிய யோசேப்பு அடிமையாக எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்பு அவர் எகிப்தின் ஆளுனராக உயர்ந்தார். அவருடைய அழைப்பின்பேரில் இஸ்ரவேல் மற்றும் அவரது குமாரர்கள் எகிப்தில் குடியேறினர். இவர்களது வம்சாவளியினர் இஸ்ரவேலர் அல்லது எபிரேயர் என அழைக்கப்பட்டனர்.

             எகிப்தின் ஆளுனரான யோசேப்பு மற்றும் அந்த தலைமுறை தலைவர்களின் மறைவுக்குப்பின், முற்கால வரலாறை அறியாத மன்னர் ஒருவர் தோன்றினார். இஸ்ரவேலர்களின் வலிமை மற்றும் எண்ணிக்கையை கண்ட அவர்; ஒரு போர் ஏற்பட்டால் இஸ்ரவேலர்கள் எகிப்துக்கு எதிராக செயல்பட்டுவிடுவார்களோ..!?  என அச்சம் கொள்ள ஆரம்பித்தார். இதனால் அவர் இஸ்ரவேலர்களை கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தி ஒடுக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். இவ்வாறாக எகிப்தை கடும் பஞ்சத்திலிருந்து  காப்பாற்றிய யோசேப்பின் குடும்பத்தினர் அடிமைகள் ஆனார்கள். நாட்கள் செல்லச்செல்ல கொடுமையும் அதிகரித்தது ஆனால் மன்னர் நினைத்தது போல் இஸ்ரவேலர்கள் ஒடுங்கிவிடவில்லை.

 தனது இரஜதந்திரங்கள் தோல்வியடைவதை கண்ட பார்வோன் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கினார். எபிரேய ஆண்களால்தானே தனது அரசுக்கு ஆபத்து வரக்கூடும்...! ஆண்கள் ஆனைவரையும் கொன்றுவிட்டால்...!?. நடைமுறைக்கு சாத்தியமில்லாதது மட்டுமன்றி  எகிப்தின் பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிக்கக்கூடிய முடிவு. இலவசமாக வேலை செய்ய ஆட்கள் வேண்டுமே...!

 தீவிர யோசனைக்கு பின் பார்வோன் ஒரு முடிவுக்கு வந்தார். எபிரேய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகளை அழைத்தார் மன்னர். ஆவலும் குழப்பமும் கலந்த மனநிலையுடன் விரைந்தனர் மருத்துவச்சிகள். அவர்களிடம் தனது புதிய திட்டத்தை விளக்கினார் மன்னர். எபிரேய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் அதை கொன்றுவிட வேண்டும் என்பதே அது. அப்போதைக்கு சரி என்று தலையாட்டினாலும் மருத்துவச்சிகள் தங்கள் தொழில் தர்மத்தை மீறிவிடவில்லை. குழப்பமடைந்த பார்வோன்(எகிப்தின் மன்னர்) மறுபடியும் மருத்துவச்சிகளை மீண்டும் அழைத்தார். மருத்துவச்சிகளோ எபிரேய பெண்கள் எகிப்திய பெண்களைவிட வலிமையானவர்கள் நாங்கள் செல்வதற்க்கு முன்பே அவர்கள் பிரசவித்துவிடுகின்றனர் என கையைவிரித்துவிட்டனர். தேவன் இரக்கம் நிறைந்த மருத்துவச்சிகளுக்கு இரக்கம் செய்தார் அவர்கள் குடும்பங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டது.

            அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கினார் பார்வோன்: எபிரேயர்கள் தங்கள் குழந்தைகள் ஆணாக இருக்கும்பட்சத்தில் அதை தாங்களே கொன்றுவிடவேண்டும் அல்லது நைல்நதியில் போட்டுவிடவேண்டும் என்று உத்தரவிட்டார். எபிரேய கர்ப்பிணிகள் அனைவரும் ஒரு வேதனை கலந்த எதிர்பார்புடனே தங்கள் கர்ப்பகாலத்தை எதிர்நோக்கினர். குழந்தை ஆணாக இந்தால் நதியில் போட்டுவிடவேண்டுமல்லவா...!

மோசே, நைல் நதியிலிருந்து எடுக்கப்படுதல்
            இந்தகாலகட்டத்தில் தான் யோசேப்பின் சகோதரரான லேவியின் வம்சாவளியில் மோசே பிறந்தார். மிகவும் அழகான குழந்தை எப்படி கெல்ல மனம்வரும் பெற்றவர்களுக்கு...!? அரசகட்டளையையும் மீறி சிலவாரங்கள் வரை இரகசியமாக வளர்த்தனர். அதன்பிறகு இரகசியமாக வளர்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. நைல்நதியில் எறிந்துவிடுவதை விட நீரில் மிதக்கும் கூடை ஒன்றை செய்து அதில் மோசேயை வைத்து நதியில் விடுவது என முடிவு செய்தனர். பெற்றவர்கள் நதியின் போக்கில் விட்டுவிட்டாலும் நதிக்குத்தான் கொண்டுசெல்ல மனமில்லை போலும்...! மோசேயை சுமந்த கூடை சிறிதுதூரம் சென்று நதிக்கரை நாணற் புற்களில் சிக்கி நின்றுகொண்டிருந்தது. இந்த நேரத்தில் நதியில் நீராட வந்த எகிப்தின் இளவரசியின் பார்வையில் பட்டது அந்த கூடை. கூடையில் இருந்த சின்ன மோசேயின் கொள்ளை அழகு அவளையும் கொள்ளைகொண்டது. சற்றும் தாமதிக்காமல் மோசேயின் தாயாக மாறினாள். இப்போது எகிப்தின் குட்டி இளவரசரானார் மோசே. நாட்டின் அழகிய குட்டி இளவரசரை பரமரித்து வளர்க்க ஒரு எபிரேய பெண்ணை தேடினார் பார்வோனின் மகள். இங்குதான் ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறுகிறது.
  
            மோசேயை கூடையில் வைத்து நதியில் விட்ட பெற்றோர் திரும்பிசென்றனர் ஆனால் மோசேயின் அக்காள் மிரியம் சற்றுதொலைவில் வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். இளவரசியின் தேவையை அறிந்த மிரியம் தனது தாயை வேகமாக சென்று அழைத்துவந்தார். அவரை பார்வோனின் மகள் வளர்ப்பு தாயாக நியமித்தார். தக்கவயது வந்ததும் அவர் பார்வோனின் மகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

            மோசே இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நபர், அவரது சமபருவத்தினர் கொல்லப்பட்டபோது அவர் மட்டும் காக்கப்பட்டது மட்டுமன்றி எகிப்திய இளவரசியின் மகனாகவும் மாறினார். எகிப்திய கல்வி கேள்விகளை கற்று தேறிய மோசே ஒரு மன்னருக்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்ற நபராக மாறியிருந்தார். ஆனால் தேவஜனங்களை கானானுக்கு வழிநடத்தி செல்ல அவருக்கு மேலும் சில தகுதிகள் தேவைப்பட்டது அவை தான் பொறுமையும் சகிப்புத்தன்மையும்.

            பொறுமையும் சகிப்புத்தன்மையும் சற்று குறைவாக இருந்ததால் அவர் எறக்குறைய தமது நாற்பதாவது வயதில் எகிப்தைவிட்டு வெளியேறவேண்டியதாயிற்று. அவர் மீதியானியனான எத்திரோ என்னும் மனிதனிடம் சென்று சேர்ந்து அவரது ஆடுகளை மேய்த்தார். அந்த மனிதர் தனது மகளை மோசேக்கு திருமணம் செய்து கொடுத்தார். மோசேக்கு இரு குமாரர்கள் பிறந்தனர்.

            காலஓட்டம் அவருக்கு பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை அளவுக்கு அதிகமாகவே கொடுத்திருந்தது. அதற்குள் ஒன்றல்ல இரண்டல்ல நாற்பது வருடங்கள் கடந்து சென்றிருந்தது. இப்போது மோசேயின் வயது 80.  அவர் ஓரேப் என்னும் மலையின்மீது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு அதிசயமான காட்சியை கண்டார். ஒரு முட்செடியில் அக்கினி எரிந்துகொண்டிருந்தது ஆனால் முட்செடி வாடாமல் சாதாரணமாகவே காணப்பட்டது. அதை காணும்படி அவர் நெருங்கி செல்கையில் இறைவன் அவரோடு பேசி எகிப்தில் அடிமைகளாக இருக்கும் இஸ்ரவேலர்களை விடுவிக்கவேண்டும் என்று மோசேயிடம் கட்டளையிட்டார்.

            அதன்படி எகிப்துக்கு சென்ற மோசே பார்வோனிடம் பேசினார். இறைவனின் விருப்பத்தை பார்வோன் இகழ்ந்தார். அதனால் வௌ;வேறு விதமான தண்டனைகளால் எகிப்தையும் பார்வோனையும் இறைவன் கலங்கப்பண்ணினார்.இறுதியாக இஸ்ரவேலர் மோசே மற்றும் அவரது சகோதரர் ஆரோன் தலைமையில் எகிப்தைவிட்டு  வெளியேறி கானான் நாட்டை நோக்கி பயணமாயினர். மோசே ஆரோன் ஆகியோர் மரித்தபின் யோசுவாவின் தலைமையில் கானான் தேசத்தை அடைந்தனர்.

மோசேயின் தலைமையில் இஸ்ரவேலர்களின்
கானான் பயணம்

தொடர்புடைய பதிவுகள் :-