Translate

புனிதப் பயணங்களும் புனிதப் பொருட்களும்- வரலாறு கற்றுத்தரும் பாடம்


கிழக்கு, மேற்கு சபைகள் (Eastern, western church) பெருக ஆரம்பித்த ஆரம்ப காலத்தில், எருசலேமை இஸ்லாமியர்கள் கைப்பற்றியிருந்தனர், அந்த எருசலேமை புனித நகரமாக கருதி இஸ்லாமியரை விரட்ட பல பிஷப்புகள், போப்புகள் போராடினர். போருக்கு பல பிஷப்புகளும் போப்புகளும் தலைமைவகித்து சண்டையிட்டனர், இதைத்தான் சரித்திரத்தில் சிலுவைப்போர் என நாம் அறிகிறோம் (சிலுவைப்போரை சுருக்கமாக கூறியுள்ளேன்). அன்றைக்கு சத்தியம் தெரியாததால் எருசலேமை புனித நகரமாகவும், அங்குள்ள ஆலயங்கள், நதிகளை புனித இடமாகவும், இந்த பாதிரியார்களை பார்க்கவைத்து சாத்தான் சதி செய்தான். அதனால் சிலுவைப்போரில் பலர் மடிந்தனர். இன்றைக்கும் இவர்களின் நம்பிக்கை எருசலேமுக்கு சென்று அங்குள்ள இடத்தில் வழிபட்டால், மண் எடுத்துவந்தால், ஆசீர்வாதம் என்பதில் உறுதியாயிருக்கிறார்கள்.

பின்னாளில் வந்த கர்த்தருடைய பரிசுத்தவான்கள் இதை கண்டித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சில காலம் இந்தபிரச்சனை ஓய்ந்திருந்தது, ஆனால் அந்தோ பரிதாபம் இப்போது ஆவிக்குரிய சபைகள் என்றழைக்கப்படும் சில சபைகளாலும் அவர்களின் போதகர்களாலும் இந்த உபதேசம் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. அதாவது எருசலேம் பயணத்தை சுற்றுலா பயணமாக ஆரம்பித்த இவர்கள் இப்போது இதை புனித பயணமாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். சத்தியத்தை அறிந்தவர்களுக்கும், ஆவிக்குரிய விழிப்புணர்வு அடைந்தவர்களுக்கும் இது புரியாமல் இல்லை. அன்றைக்கு மேற்கத்திய, கிழக்கத்திய சபைகள் சிலுவைப்போரில் பங்கேற்றதை விக்கிரக ஆராதனை என்று பேசும் நாம், மீண்டும் அதையே செய்வதில் என்ன அர்த்தம். எருசலேமுக்கு சுற்றுலா செல்லலாம், அங்குள்ள எதையும் ரசிக்கலாம் ஆனால் இப்போது நடப்பது சுற்றுலா அல்ல புனிதபயணம். அரசாங்கமும் இதை அறிந்துகொண்டு எருசலேமுக்கு புனிதபயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு சலுகை என்று அறிவித்திருக்கிறது.

இப்படி எருசலேமுக்கு அழைத்துச்செல்லும் சில போதகர்கள் அங்குள்ள கல்லரைகளிலும், கல்லுகளிலும் விழுந்து வணங்குவது அடிக்கடி டிவியிலும் காட்டப்படுகிறது, அதுமாத்திரமல்ல யோர்தான் நதியில் ஞானஸ்நானம் வழங்கப்படும் என்று கூறி, மக்களின் மனதில் யோர்தானை ஒரு காசியாகவும், கங்கையாகவும் இவர்கள் மாற்றிவைத்துள்ளனர். எங்கேபோகிறது நம் கிறிஸ்தவம் என கேட்கத்தோன்றுகிறது. இன்னும் சில போதகர்கள் அந்த யோர்தான் தண்ணீரை பாட்டிலில் அடைத்து எடுத்து வந்து வீட்டு வாசல், ஜன்னல்களில் தெளிக்கும்படி விசுவாசிகளை ஊக்குவிப்பது கொடுமையிலும் கொடுமை. 

யோர்தான் நதியில் ஞானஸ்நானம்
என் வீட்டு அருகாமையில் உள்ள சபையில் ஒரு வெள்ளைநிற டப்பாவில் ஜெப எண்ணையை அடைத்து 50 ரூபாய்க்கு விற்கிறார்கள், என் எதிர் வீட்டில் உள்ள பாட்டி என்னிடம் 50 ரூபாய் கொடுத்து அதை வாங்கிவரச் சொன்னபோதுதான் நிலைமையின் வீரியத்தை நான் உணர்ந்தேன், ஜெப எண்ணையை ஜண்டு பாம்போல நினைக்கவைத்துவிட்டோம், ஜெப எண்ணையை விற்க ஆரம்பித்த நாம் இப்போது யோர்தான் தண்ணீரை விற்க ஆரம்பித்துவிட்டோம், இது எப்படிப்பட்ட மூடநம்பிக்கைக்குள் கிறிஸ்தவத்தை அழைத்துச்செல்கிறது சிந்தியுங்கள் நண்பர்களே, இதை ஓருபோதும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் இப்படி இருப்பார்களானால், உடனே வசனத்தின் மூலம் எச்சரியுங்கள், தவறில்லை.....

Originally posted by,

சகேயுவின் வாழ்க்கையும் இன்றைய சமுதாயமும் ஓர் அலசல்


உலகமக்கள் அனைவருமே கர்த்தருடைய படைப்புகளே. அதனால் தான்  இயேசு கிறிஸ்து தனது  சிலுவை  மரணத்தின் மூலம்  முழு மனுக்குலத்துக்கும்  மீட்பை  உறுதிசெய்தார்.  பல மனிதர்கள்  ஒருவேளை மீட்பை குறித்ததான விழிப்புணர்வற்று அல்லது  அதைக் குறித்து  அறியாமல் இருக்கலாம். முழு உலகத்திற்கும் மீட்பைக் குறித்த நற்செய்தியை  அறிவிக்கும்   பொறுப்பை   சீடர்களாகிய   அனைவருக்கும்  கொடுத்துள்ளார். (கிறிஸ்துவின் அன்பை  அறிந்து திரு முழுக்கின் மூலம் அவருடன் ஐக்கியமான அனைவரும் அவருடைய சீடர்களே)…!

நமது சமுதாயம் செய்துவரும் பல்வேறு தவறுகளை சகேயுவின்  வாழ்க்கையை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1. பாவியான மனிதர் மனந்திரும்பியதைக் குறித்த முறுமுறுப்பு:-

புதிதாக ஒரு மனிதர் தனது பாவங்களை விட்டு கர்த்தரிடமாக  சேர்ந்தால்  அல்லது  விழுந்துபோன  மனிதர்  தனது  பாவங்களைவிட்டு / தவறான  நடக்கையை விட்டு  கர்த்தரிடமாக  சேர்ந்தால் அதுவரை  அவரைப் பற்றி  கவலையேபடாத  சமுதாயம்  அது முதல்  அவரைக் குறித்து  குறை கூறத் துவங்குகிறது. சகேயுவின்  வாழ்வில்  நடந்த  சம்பவமே இதற்கு   சான்று. (லூக் 19:5-6)    இயேசு அந்த   இடத்தில் வந்தபோது,  அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ  சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே  தங்க வேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய்   இறங்கி,   சந்தோஷத்தோடே அவரை   அழைத்துக் கொண்டு போனான். அதைக் கண்ட  யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று  முறுமுறுத்தார்கள்.

2. தவறுகளை திருத்திக்கொள்ளுதல்:-
இன்று பலரும் இயேசுவை அறிந்திருந்தாலும் இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதபடி  பல்வேறு  காரியங்கள் அவர்களை தடைசெய்கிறது. அவைகளில் ஒன்று தனது தவறுகளை உணராமலிருப்பதே..! வேதம்  சொல்லுகிறது:  தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதி 28:13) இயேசுவைப் பார்த்தமாத்திரத்திலேயே சகேயு சொன்னார்: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்.  (லூக் 19:8) இங்கு  இயேசு  கிறிஸ்து  சகேயுவுக்கு  போதனை  எதுவும்  செய்ததாகக்  கூறப்படவில்லை  ஆனால்  இயேசுவை  கண்டவுடனே  தனது  தவறுகளை  விட்டுவிடுவது மட்டுமல்லாது  தான தருமங்கள்  செய்யவும்  ஆரம்பிக்கின்றார் சகேயு.  இன்று பிரச்சினைகளை முடித்துவைக்கும்போது கேட்க நேரும் பிரபலமான வார்த்தை ஒன்று உண்டு நான் செய்தது தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்என்பதே அது. இந்த வர்த்தையே மேற்படி நபர் தனது தவறை உணரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தனது குற்றங்களை அறியாதவன் எப்படி அவற்றை கர்த்தரிடம் அறிக்கை செய்யமுடியும்.?

3. ஒருமனம் / குடும்ப ஒற்றுமை:-
இயேசு சகேயுவின் வீட்டுக்கு வந்தபோது முழு குடும்பமும் அவரை ஏற்றுக்கொண்டது. அங்கே ஒருமனமும் ஒற்றுமையும் காணப்பட்டது (சச்சரவுகள் ஏதும் ஏற்பட்டதாக குறிப்புகள் இல்லை.) இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்கு சொல்லிய விஷயம் இங்கு  நினைவுகூறத்தக்கது. (மத் 18:19-20) . . . உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக் கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒருமனமும் ஒற்றுமையும் மிகவும் அவசியம்.  



ஒருமனதை அடைவது எப்படி.?

குறைகளை மன்னியுங்கள், தவறுகளை பொறுத்துக் கொள்ளுங்கள், ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள், ஜெபத்திலே தரித்திருங்கள். இயேசு உங்கள் உள்ளக்கவை தட்டுவது உங்கள் காதுகளில் கேட்கட்டும். உங்கள் உள்ளம் மட்டுமல்ல இல்லமும் தேவன் தங்கும் வீடாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சிந்தனைக்கு:-

 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.(யோவா 14:23)


சகேயுவின் தாகம்...


சகேயு என்பவர் இஸ்ரவேல் நாட்டில் உள்ள எரிகோ பட்டணத்தில் வசித்துவந்த பாவியான மனிதர். இவர் ஆயக்காரர்களுக்குத் தலைவர் (Chief Tax Collector). இன்றைய நம்மூர் வருவய்த்துறை அதிகரிபோன்ற அன்றைய பதவி. நேர்மையானவர் அல்ல ஆனால் வசதியானவர் உருவத்தில் சற்று குள்ளமானவர். பாவியாக வாழ்ந்தாலும் அவரது மனதில் ஒரு தீராத தாகம். இயேசுவைக் காணவேண்டும் என்பதே அது. இயேசு அற்புதங்கள் செய்கிறார், அதிசயம் செய்கிறார், நோய்களைப்போக்குகிறார், பேய்கள் அவரைக் கண்டமாத்திரத்தில் ஓடுகின்றன, மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், அதிகாரத்தோடு போதிக்கிறார்  என்றெல்லாம் இயேசுவைக்குறித்து அவர் பலவாறாக கேள்விப்பட்டிருக்கக் கூடும். அவரது நீண்டநாள் ஆர்வம் நிறைவேறக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியது. இயேசு எரிகோவின் வழியாக செல்கிறார் என்ற செய்தியே அது.

அவர் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த நாளும் நேரமும் வந்தது இயேசு எரிகோவின்வழியாக வருகிறார் ஆனால் சகேயுவால் இயேசுவைக் காணமுடியவில்லை. அவரது கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு திரள்கூட்டமான ஜனங்களின் ஊர்வலம் மட்டுமே. இந்த திரள்கூட்டமான ஜனங்கள் யார்? அவர்களில் சிலர்மட்டும்தான் இயேசுவின் சீடர்கள் பெரும்பாலானோர் பல்வேறு நோக்கங்களுக்காக இயேசுவைப் பின்தொடர்பவர்கள். தங்கள் வியாதி நீக்கப்படுவதற்காக பின்தொடர்பவர்கள். இயேசுவின் பிரசங்கத்தை கேட்க செல்லும்கூட்டம் என பலதிறத்தார் காணப்பட்டனர் எது எப்படியாயினும் இயேசுவைப் பின்பற்றுபவர்களால் சகேயுவுக்கு இயேசு மறைக்கப்பட்டார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியவிஷயம் ஒன்று உள்ளது. பல்வேறு தேவைகளுக்காக/பல்வேறு தேவைகளோடு இயேசுவை பின்பற்றும் ஒரு திரள்கூட்டம் அன்று மட்டுமல்ல இன்றும் உண்டு. ஒருநிமிடம் யோசித்துப்பாருங்கள் சகேயுவின் கண்களுக்கு என்ன தெரிந்திருக்கும்..? சப்பாணிகள், பிச்சைக்காரர்கள், குருடர்கள்..etc  என ஒரு பெருங்கூட்டம் அவர் கண்களுக்கு தெரிந்திருக்கும். இயேசுவைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலானோர் இயேசுவை அல்ல தங்கள் சுயத்தையே பிரதிபலிக்கின்றனர். இன்று பெரும்பாலான சகோதரர்கள் இயேசுவின் அருகில் வர இயலாமைக்கு காரணம் நம்மவர்கள் இயேசுவைப் பிரதிபலிக்காமையே…!  சமீபத்தில் ஒருவர் வேடிக்கையாகக் கூறிய ஒன்றைக் கேள்விப்பட நேர்ந்தது. அந்த மனிதர் தமது சுற்றுவட்டாரத்தில் வாழும் சாட்சியற்ற கிறிஸ்தவர்கள் சிலரைச் சுட்டிக்காட்டி இவங்க எல்லாரும் பரலோகத்துக்குத் தான் போவார்கள் என்றால் அந்த பரலோகத்துக்கு நான் வரல்ல பிரதர்…!” என்றாராம்.

காட்டத்தி மரத்தில் சகேயு
இயேசுவைப் பார்க்கமுடியவில்லை என்பதற்காக அவர் மனமடிவாகி சென்றுவிடவில்லை. மாறாக அருகிலிருந்த காட்டத்திமரத்தை நோக்கி ஓடினார். அத்திமரம் சபையைக் குறிக்கிறது, சகேயுவுக்கு சிக்கியது காட்டத்திமரம்தான் என்றாலும் அவரது உள்ளத்தை அறிந்த தேவன் அவன் இருந்த காட்டத்தி மரத்தை நோக்கி வந்தார். இயேசுக்கு சகேயுவை அறிமுகப்படுத்த அல்லது இயேசுவின் அருகில் கொண்டுசெல்ல யாருமே இல்லை. நம்மில் பலரும்கூட இவ்வாறு சிந்திக்கலாம். "நானே தேவைகளோடு இருக்கிறேன். நான் யாருக்கு இயேசுவை அறிமுகப்படுத்துவது…? “ என்பதாக. வேலைகிடைக்கட்டும், திருமணம் நடக்கட்டும், என பல்வேறு காரணங்களைக்காட்டி நிர்விசாரமாகக் காணப்படுவீர்களானால் தாலந்தைப் புதைத்துவைத்தவனைப்போல கணப்படவேண்டியதாகக்கூடும் என வேதனையோடு பதிவுசெய்கிறேன்.

இதை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே நீங்கள்  இயேசுவைத்தான் பின்பற்றுகிறீர்கள்..! நல்லது. உங்கள் சுபாவங்களால் இயேசுவைப் பிரதிபலிக்கிறீர்களா? அல்லது இயேசுவைப் பிறர் அறிந்துகொள்ளமுடியாதபடி மறைக்கிறீர்களா? நீங்கள் பிறரை இயேசுவண்டைக் கொண்டுவருகிறீர்களா? அல்லது இயேசுவை காணவிரும்புகிறவர்களுக்கு இடறலாக இருக்கிறீர்களா? சிந்தித்துப்பாருங்கள்…! இதை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை இயேசுவை அறிந்துகொள்ளவிரும்பினால் நற்செய்திநூல்களை வாசியுங்கள். அதன் அடிப்படையில் கர்த்தரை நோக்குங்கள். ஆவிக்குரிய சபை ஒன்றில் ஜக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். தேவன்தாமே நேர்வழியில் உங்களை நடத்துவாராக.

"சகேயு" - இரண்டாம் பகுதியை வாசிக்க இங்கு கிளிக்கவும்

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்...!


முதலை ஒன்று காட்டில் இருந்த நதிக்கரையில் வாழ்ந்து வந்தது. தினமும் அதன் பசிக்குத் தேவையான ஏதாவது ஓர் உணவு கிடைத்து வந்தது. இருந்தாலும் அதன் மனதில் ஓர் ஆசை இருந்தது. அந்த நதியை ஒட்டி ஒரு புல்வெளி இருந்தது. அதில் முயல்கள் கூட்டமாய் வந்து விளையாடும். அதில் ஒரு முயலையாவது ருசித்துப் பார்க்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. பெரிய பெரிய யானைகளும், சிங்கங்களும்கூட தண்ணீர் குடிக்க வந்து முதலைக்கு பலியானதுண்டு. ஆனால் இந்த முயல்கள் மட்டும் ஒரு முறை கூட நீர் பருக வந்ததே இல்லை. எப்படியாவது ஒரு முயலையாவது விழுங்கிவிடப் பல நாட்களாய்க் காத்திருந்தது.


ஒருநாள் ஒரு கொழுத்த முயல் குட்டி வேடிக்கை பார்ப்பதற்காக நதியின் கரையருகே வந்தது. அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த வயதான முயல், ""அடேய், அங்கே கொடிய முதலை ஒன்று இருக்கிறது. நீ போனால் உன்னை விழுங்கி விடும்'' என்று எச்சரிக்கை செய்து அதைக் கையோடு இழுத்துச் சென்றது. ஆனால் இந்த எச்சரிக்கை குட்டி முயலின் ஆவலை மேலும் தூண்டிவிட்டது.


மறுநாள், மற்ற முயல்கள் கவனிக்காத சமயத்தில் குண்டு முயல் மீண்டும் நதிக்கரைக்கு வந்தது. அங்கே அது கண்ட காட்சி அதை ஆச்சரியப்பட வைத்தது. முதலை ஆவென்று வாயைப் பிளந்தபடி அமைதியாகப் படுத்திருந்தது. ஒரு சிறிய பறவை அதன் வாய்க்குள் புகுந்து அதன் பல்லிடுக்கில் இருந்து எதையோ எடுத்து எடுத்து விழுங்கிக் கொண்டிருந்தது. முயலுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. "இத்தனை நல்லவரும், அமைதியானவருமாக இருக்கும் ஒருவரையா இந்தக் கிழட்டு முயல் கொலைகாரன் என்றது, இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது' என்று எண்ணிக் கொண்டது. சற்று தைரியத்துடன் முதலையின் அருகே சென்றது. முயலின் வாசனை பட்டு முதலை கண்விழித்துப் பார்த்தது.

"அடடா வா தம்பி. இந்த ஏழையின் வீட்டுக்கு உன்னை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தாராளமாகக் கேட்கலாம்'' என்றது. முயலுக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

ஆகா..! எத்தனை உயர்வான மனது!

"ஒன்றுமில்லை அண்ணா. இந்த அழகான இடத்தைப் பார்க்க எனக்கு நெடுநாள் ஆசை. ஆனால் என் கூட்டம் உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி மிரட்டி வைத்து விட்டது. நீங்கள் பெரிய கொலைகாரர் என்று சொன்னது'' என்றது.

முதலை சிரிசிரி என்று சிரித்தது. "சரி, அவங்க சொல்றது இருக்கட்டும். நீ என்னைப் பத்தி என்ன நினைக்கிறே?'' என்றது.

"எனக்கு உங்களப் பாத்தா நல்லவராதான் தோணுது. இருந்தாலும் நீங்க பல மிருகங்களை தண்ணிக்குள்ள இழுத்துட்டுப் போனதா கேள்விப்பட்டிருக்கேனே'' என்றது. முதலை மீண்டும் சிரித்தது.

"நீ சொன்னது உண்மைதான். நான் மிருகங்களை இழுத்துச் செல்வதும் உண்மைதான். ஆனால் அந்த மிருகங்கள் அக்கரைக்குப் போக என்னிடம் உதவி கேட்டதால்தான் அவற்றை சிரமம் பார்க்காமல் அங்கு கொண்டு போய் விட்டுவிட்டு வருவேன். அதை ஒரு சேவையாதான் செய்துகிட்டு வரேன். ஏன்னா இந்த ஆத்துக்குள்ள பெரிய சுழல் இருக்குது. எவ்வளவு பெரிய மிருகமா இருந்தாலும் முழுகடிச்சிடும். ஆனா இந்த இடத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு அது பெரிய விஷயமில்லை. அதனால தான் மிருகங்களை பத்திரமா கொண்டு சேக்குற வேலையை நானே செய்றேன். நான் கெட்டவனா இருந்திருந்தா இந்த சின்னப் பறவை என் வாயில் நுழைந்து இரை தேடுமா நான் வாயில் விரலை விட்டால் கூடக் கடிக்கத் தெரியாத அப்பாவி தம்பி. அக்கரையில் இருக்கும் ருசியான கிழங்குகளை சாப்பிடத்தான் எல்லா மிருகமும் என்னோட உதவியைக் கேக்குது'' என்றது.

கிழங்கு என்ற வார்த்தையை கேட்டதும் முயலுக்கு நாவில் நீர் சுரந்தது. "இத்தனை நாளும் தெரியாம போச்சே அண்ணே, என்னையும் அங்கே கொண்டு விடமுடியுமா?'' என்றது.

"கொண்டு போய் விடுறது மட்டுமில்ல. மறுபடியும் பத்திரமா அழைச்சிட்டு வந்தும் விடுறேன். இந்தப் பறவை மாதிரியே நீயும் வந்து வாய்க்குள்ள பத்திரமா உக்கார்ந்துக்க'' என்றது. முயலும் தயங்காமல் முதலையின் வாயில் நுழைந்தது. "அண்ணே, நிறைய கிழங்கு இருக்கும் இடமா பாத்து இறக்கி விடுங்க. ரொம்ப பசிக்குது'' என்றது முயல்.

முதலை சொன்னது, "அட முட்டாளே முதல்ல என்னோட பசி அடங்கட்டும்'' என்று கூறி, குட்டி முயலை விழுங்கியது.

பரிசுத்த வேதாகமத்தில் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள் ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5:8 என்று பார்க்கிறோம்.

முதலையும், பறவையும் நெருக்கமாக இருந்ததைப் பார்த்து ஏமாந்த முயல் முதலைக்கே இரையாகிப் போனது. சில வேளைகளில் பாவப்பழக்கங்களில் வாழும் சிலர் நம்மைப் பார்த்துக் கேட்கிற கேள்வி சில நேரங்களில் நம்மைக்கூடத் தடுமாற வைக்கும். "நான் நல்லாதானே இருக்கேன் செத்தா போயிட்டேன்' என்பார்கள். முதலை தனது பல்லை சுத்தம் செய்ய அந்தப் பறவையை விட்டு வைப்பது போலவே பிசாசும் தனக்கு சாட்சியாக சிலரை நன்றாக வைத்திருப்பான். இதையெல்லாம் நம்பி நாமும் மோசம் போய் விடக்கூடாது. இந்த உலகத்தில் வாழும் நாம் மிகவும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து சிறப்புடன் வாழ்வோம்.

- ஒய். டேவிட் ராஜா
 originally posted by dinamani

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்...

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்,  நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்(யோவா 15:7) 

தேவனில் நாமும் தேவ வசனம் நம்மிலும் நிலைத்திருந்தால் நாம்  அடையும் மேன்மையைக் குறித்து இந்த வசனம் விவரிக்கிறது. இந்த வசனத்தின்மூலம் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் என்பதான வாக்குத்தத்தத்தையும் பெறுகிறோம். ஆனால் அந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க இந்த வசனத்தின் முதல்பகுதியில் கூறப்பட்டுள்ள இரு நிபந்தனைகளும் நிறைவுசெய்யப்படுவது அவசியம். அவையாவன
  1.  நாம் தேவனில் நிலைத்திருத்தல்
  2. தேவ வார்த்தைகள் நம்மில் நிலைத்திருத்தல்
 நாம் தேவனில் நிலைத்திருப்பது எப்படி?
தேவன்மீது விசுவாசம் வைத்து அவரையே நமது நம்பிக்கையாக கொண்டு அவரது வார்த்தைகளின்படி வாழ்வதை தேவனில் நிலைத்திருப்பது என்று கூறலாம்.

இயேசு சென்னார்: (யோவா 15:5-6) நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல  அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.
திராட்சச்செடி

இந்த வார்த்தைகளின் மூலம் தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது அல்லது அது எப்படி இருக்க வேண்டும் என்பது அழகாக விளக்கப்படுகிறது. செடியுடன் இணைந்திருந்து சத்துப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் கொடிமட்டுமே வளரமுடியும் மென்மேலும் கனிகொடுக்கமுடியும். அதுபோல அனுதின ஜெபம் திருவசன தியானம் முதலியவற்றால் கிறிஸ்துவுடன் ஜக்கியமாக இருப்பதன் மூலமாக மட்டுமே நாம் ஆவிக்குரிய போஜனத்தை பெற்றுக்கொள்கிறோம். இந்த தொடர்பு துண்டிக்கப்படுமேயானால் ஆவிக்குரிய வாழ்க்கையில் மரித்தவர்களாக மாறுவதுடன் எரிநரகத்துக்குப் பாத்திரராகவும் மாற்றப்படுகிறோம். தேவனில் நிலைத்திருப்பவர்கள்  மட்டுமே தேவன் விரும்பும் தூய வாழ்க்கை வாழ முடியும்.

தேவனில் நிலைத்திருக்கவேண்டியது கிறிஸ்தவ வழ்க்கைக்கு அவசியமான ஒன்று தேவனில் நிலைத்திருப்பவர்கள் கனிகொடுப்பவர்களாகவும் காணப்படவேண்டியது அவசியம். அதாவது திருவசனத்தின்படியான வாழ்க்கை வாழ்ந்து  தான்மூலமாக கிறிஸ்த்துவை மற்றவர்களுக்கு காட்டவேண்டும். மேலும் வேதனையில்/துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை அறிமுகப்படுத்துவதன் மூலமாகவும் வசனத்தின்படியான தூய வாழ்க்கை வாழ்ந்து இயேசுவைப் பிரதிபலிப்பதன் மூலமாகவும் நாம் கனிகொடுக்கும் கொடியாக காணப்படமுடியும்.

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.
என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். (யோவா 15:1-2)
தேவனில் நிலைத்திருப்பதாகக்கருதும் மக்களில் பலர் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களைச் செய்வதன்மூலம் அவரைவிட்டு வழுவிப்போகின்றனர். அவர்கள் செய்யும் சில தவறுகள் இங்கு பட்டியலிடப்படுகின்றனதேவனைவிட சூழ்நிலைகள் மனிதர்கள் செல்வம் வெல்வாக்கு தன் திறமைகள் இவற்றை சார்ந்திருத்தல். தேவனை விட்டு அன்னிய தேவர்கள் அசுத்த ஆவியால் குறிசெல்பவர்களை நாடி செல்லுதல். பொருளாசையை சார்ந்துகொள்ளுதல் என்பவையே அவை.

வேதம் சொல்லுகிறது:  மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(எரே 17:5)

தேவ வார்த்தைகள் நம்மில் நிலைத்திருத்தல் என்றால் என்ன?
இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்கு நேரடியாக விளக்கிக்கூறிய உவமை இதை தெளிவாக விளக்குகிறது.

...விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிகமண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார். (மாற் 4:3)


அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். (மாற் 4:10)

விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப் போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள். அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் ... (மாற் 4:14)

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துதாமே அழகாக விளக்கிய உவமையின் மூலம். தேவ வசனம் நம்மில் நிலைகொண்டு வளர நம் மனம் நல்ல நிலமாகவும் திருவசனத்ததை எற்று அதன்படி வாழ்வதற்கு தயாரானதாகவும் காணப்பட வேண்டும் என்பதை அறியலாம். தேவ வசனம் நம்மில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் (பொழுதுபோக்குகள் நண்பர்களுக்கு செலவிடும் நேரம் சமூகவலைதளங்களுக்கு செலவிடும் நேரத்தைவிட) அதிக நேரத்தை வேதவசன தியானத்தில் செலவிடவேண்டும். அதன்மூலம் நாம் உணர்ந்த சத்தியங்களை நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதுடன் (விதை முளைத்துவருதல்) நண்பர்களுக்கும் எடுத்துக்கூறி அவர்களையும் நல்வழிப்படுத்தவேண்டும் (ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிற அனுபவம்) இவ்வாறு காணப்படுவீர்களானால் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

இயேசு சொல்கிறார்மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.(யோவா 14:12-13

இந்த வசனதியானம் உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கும் என கருதுகிறோம்இதை உங்கள் நண்பர்களுக்கும் share செய்யலாமே.