Translate

உன் அதிசயமான எதிர்காலம் கர்த்தரின் கரத்தில்..!

பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீஸின் மகனாகிய சவுல், தன் தகப்பனுடைய காணாமல் போன கழுதைகளைத் தேடி புறப்பட்டான்; அவனுடைய தகப்பன் காணாமல்போன கழுதைகள் மீதிருந்த கவலையை விட்டு தன் மகனைக் குறித்துக் கவலைப்படும் அளவுக்கு அவனுடைய தேடுதல் நீடித்தது. தேடி தேடி அலுத்துப் போன சவுல் தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் அருகில் காணாமல் போன கழுதைகளை பற்றி விசாரிக்கும்படி வந்தான்.

சவுல் ஒரு பொறுப்புள்ள மகனாக தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் துவங்கி இருந்தான். ஆனால் தேவன் அதற்கு முன்பாகவே அவனுக்காக பெரிய திட்டத்தையும் தீட்டி பொறுப்புகளையும் ஆயத்தப்படுத்தி இருந்தார். அவன் எந்த தீர்க்கதரிசியைத் தேடிச் சென்றானோ அந்த தீர்க்கதரிசி தேவனுடைய உத்தரவின்படி அவனுக்காக காத்துக்கொண்டிருந்தார். கழுதையை தேடி வீட்டை விட்டு புறப்பட்ட சவுல் இஸ்ரவேலின் ராஜாவாக வீட்டுக்குத் திரும்பி வந்தான்.

சகோதரனே.! சகோதரியே.! நீயும் ஒருவேளை பல்வேறு லட்சியங்களோடு; எதிர்காலத்தை குறித்த பயத்தோடு; அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இந்த உலகத்தில் அலைந்து கொண்டிருப்பது போல உனக்கு தோன்றலாம், ஆனால் உன்னை உருவாக்கிய தேவன் உனக்காக பெரிய திட்டங்களை வைத்துள்ளார்.  சூழ்நிலைகள் எதுவாயிருந்தாலும் நீ தேவனை நோக்கிப் பார். நீயோ.! உன் பெற்றோரோ.! உறவினர்களோ.! சுற்றுப்புறத்தாரோ யாரும் உன்னைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாத எதிர்காலத்தை அவர் உனக்காக ஆயத்தப்படுத்தி இருக்கிறார்.

சிந்தனைக்கு:- தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. (ஏசாயா 64:4 )