Translate

எது பாவம்? நிச்சயம் நான் பரலோகம் செல்வேனா?


பாவத்தை குறித்து தேவன் உங்களை எச்சரிக்கிறார்.

பாவம்... இது கிறிஸ்தவர்கள் பலவாறாக எடுத்துரைக்கும் ஓர் முக்கியமான பதம். தவறு செய்யாமல் யாரும் பிறக்க முடியாது என்பது நமக்கு தெரிந்த ஒன்று. இதை ஓர் சிறு குழந்தையிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். சிறு குழந்தை பேச ஆரம்பித்தவுடன் செய்யும் காரியம் நமக்கு தெரியும். தவறு செய்யும் போது அதட்டினால் அடம் பிடிக்கும்... சிறிது காலத்தில் பெற்றோருக்கு தெரியாமல் அதே காரியத்தை செய்யும், பிறகு பொய் சொல்ல ஆரம்பிக்கும். யாரும் சிறு குழந்தைக்கு இவைகளை கற்று தருவதில்லை. தாய் தன் பிள்ளையை பாவத்தில் கர்ப்பந்தரிக்கிறாள் என்று வேதாகமம் நமக்கு கற்று தருகிறது.

எது பாவம் என்று அடுத்த கேள்வி? இதன் விடையோ எளிது. நம் தெய்வம் மிகவும் பரிசுத்தம் உள்ளவர். அவரிடம் பாவம் இல்லை. உள்ளத்தில் பாவமான சிந்தனைகளை வைத்துகொண்டு அவரை தரிசிக்கவும் முடியாது. பரிசுத்தமான வாழ்க்கை என்பது பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை. "கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னவெல்லாம் அவருக்கு பிடிக்காதோ" அதை செய்யாமல் இருந்தாலே நிச்சயம் பாவம் செய்ய மாட்டோம்.

பரிசுத்த வேதாகமத்தில் பாவத்தை தேவன் கடுமையாக எதிர்க்கிறார். சிறிய பாவம், பெரிய பாவம் என்று கிடையாது. பாவத்திற்கு ஒரே தண்டனை தான். அது "நித்திய மரணம்". உங்களுக்கு தவறான காரியத்தை கொடுத்து விட்டு சோதிப்பவர் தெய்வமாய் இருக்க முடியாது. தீயில் நிற்க வைத்துவிட்டு "சுடுகிறதா?" என்று கேள்வி கேட்டபது எவ்வளவு முட்டாள் தனமான காரியம். நம்மிடம் உள்ள குறைகளை வைத்து அதை வேண்டுமென்றே தேவன் சோதிக்கமாட்டார்.

சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல (யாக்கோபு 1:13). ஆனால் இந்த பாவத்தை குறித்து தேவன் நமக்கு எச்சரிக்கையாய் இருக்க அறிவை கொடுத்திருக்கிறார். "தேவன் காப்பாற்றுவார்" என்று மலையில் மேல் இருந்து குதிக்க முடியுமா? முட்டாள்களை பார்த்து தேவன் வருத்தப்படத்தான் முடியும். மிருகங்களுக்கு இருக்கும் அறிவை விட சற்று அதிகமாக தேவன் மனிதனுக்கு கொடுத்திருக்கிறார். பலரும் இதை பயன்படுத்துவதில்லை.

நம்மை சுற்றிலும் பாவம் பெருகி இருக்கிறது. ஆடை குறைத்து மற்றவர்களை கவர்ந்திழுக்கும் பெண்கள், எவ்வளவு ஆடை அணிந்திருந்தாலும் பெண்களை இச்சையுடன் பார்க்கும் ஆண்கள், இருட்டறைகளில் பாவத்தை பெருக்கி கொண்டிருக்கும் வாலிப உள்ளங்கள், சிந்தனையில் பாவத்தை சாபமாய் மாற்றி கொண்டிருக்கும் இளம் உள்ளங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது தவறில்லை என்று போதிக்கவும் ஓர் மிகபெரிய கூட்டம் உண்டு.

இந்த பாவமான வாழ்க்கையில் இருந்து தப்பிக்க தேவன் ஓர் வழியை யாக்கோபு அதிகாரத்தில் கூறியுள்ளார். பாவம் எப்படி உள்ளே நுழைகிறது என்று புரிந்து கொண்டால் அந்த வாசலை நீங்கள் அடைத்துவிட முடியும்.

"யாக்கோபு 1:14. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்". இந்த வசனத்தில் "அவனவனுக்கு" என்பதின் மூலம் ஒவ்வொருவனுக்கும் வித்தியாசமான இச்சைகள் வாழ்வில் உண்டு என்பதை புரிந்து கொள்ளலாம். உங்களை போலவே உங்கள் பிள்ளைகளும் இச்சிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் பாவ வேர்கள் வேறு விதமாய் முளைத்தேளும்பும்.

யாக்கோபு 1:14 கவனமாய் படியுங்கள். முதலாவது "இச்சையினால்" இழுக்கப்படுகிறான். ரோட்டில் நடந்து கொண்டிருக்கும் போது ஓர் கவர்ச்சியான படத்தை தவறுதலாக பார்க்க நேரிடுகிறது. அது பாவம் அல்ல. உடனே மனம் உடைந்து விடாதீர்கள். ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த படத்தை பார்க்க மனதில் தோன்றி பின் சிந்தனையில் முடிவு செய்து அதன் பிறகு திரும்பி பார்ப்பீர்கள் என்றால் இச்சையானது பிறக்கும். முதலில் பார்த்தது தவறு அல்ல, அது எதிர்பாராமல் நிகழ்ந்தது. ஆனால் இரண்டாம் முறை முடிவு செய்து பார்த்தது பாவத்தின் ஆரம்பம். இப்பொழுது யாக்கோபு 1:15ல் சொல்லப்பட்டது போல "இழுக்கப்படுகிரீர்கள்".

இப்படி பட்ட காட்சிகள் பலரது சிந்தனையை விட்டு நீங்காது. இரவு பொழுதுகளில் வரும் சில சினிமா பாடல்கள் மிகவும் கேவலமாக பெண்களை உடலை காட்டுகின்றனர். பலருக்கு இப்படிப்பட்ட பாடல்கள் பற்றி நன்றாய் தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதை பார்ப்பர். அவ்வாறு பாவத்திர்க்குள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பிக்கின்றனர். அதன் பிறகு தான் நீங்கள் உங்களை நீங்களே சோதனைகுட்படுத்தப்படுகிரீர்கள். பலர் "தேவனே ஏன் என்னை சோதிக்கிறீர்" என்று கடவுளையே கேள்வி கேட்பர். சிலர் "தேவனே, இந்த இருட்டறை சுகத்தை/புகை பழக்கம்/ குடி/ஆன் பெண் காதலை என்னால் விட முடியவில்லை" "எல்லாரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன்" என்று தேவனை சமாதானம் செய்ய முயல்கின்றனர்.

யாக்கோபு 1:15. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

சோதிக்கப்படும் போது நீங்கள் பாவ உணர்வடைந்து மனம் மாறாவிட்டால் அடுத்ததாக நிகழ்வது மிகக் கொடூரமாய் இருக்கும். இச்சையானது கர்ப்பந்தரித்து". கர்ப்பம் தரித்து என்றால்???? ஓர் பெண்ணிற்கு எப்போது கர்ப்பம் தரிக்கும் என்று நமக்கு நன்றாய் தெரியும். ஆண் பெண் இணையும் போது கர்ப்பம் தரிக்கிறாள். தேவன் "கர்ப்பம்" என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்தியமைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிகிறதா? அதவாது, நீங்கள் பாவத்தை அனுபவிக்கும் போது சாத்தானோடு உடல் உறவு வைத்து கொள்வதற்கு சமானம். அப்படி உடல் உறவு கொள்ளும் போது நீங்கள் கர்ப்பம் அடைகிறீர்கள். அதாவது பாவத்தை சுமக்குகிரீர்கள். இந்த சுமை மேலும் மேலும் அதிகரிக்கும்.

இந்த கர்ப்பம் எப்போது களையும் தெரியுமா? நீங்கள் மரணத்தை சந்திக்கும் போது. மரணம் என்றால் சரீர மரணம் அல்ல. உங்கள் ஆத்துமா மரணம். உங்கள் கண்கள் பிடுங்கப்பட்ட நிலைமையில் யார் என்ன சொன்னாலும் "அவர்கள் நமக்கு எதிரானவர்கள்" என்று நினைக்க வைத்து உங்களை பாவ நரகத்தில் சுகத்தை அனுபவிக்க வைத்து கொல்லும். நித்திய நித்தியமாய் மரணத்தை சுவாசிக்க செய்யும்.

அன்பு தம்பி தங்கையே, உன்னுடைய பாவத்தின் வீரியத்தை அறிந்து கொண்டாயா? இது என்னுடைய சொந்த கருத்து அல்ல. வேதாகம வசனத்தை தெளிவாக பார்த்திருக்கிறோம். பாவம் செய்து கொண்டிருக்கிறாயா? வலைத்தளங்களில் ஆபாசம் இழுக்கிராதா? பள்ளி கல்லூரிகளில் ஆபாசம் அசை போட சொல்கிறதா? தொலைகாட்சி நிகழ்ச்சி பாக்கும் போது கவர்ச்சியான இடங்களில் கண்கள் விரிந்து ரிமோட் அங்கேயே நிற்கிறதா? தனிமையான அறையில் உன் கைகள் பாவத்தில் உச்சத்திற்கு செல்ல துடிக்கிறதா? நண்பர்களோடு ஒரு வேஷம், வீட்டில் ஓர் வேஷம், ஆலயத்தில் ஓர் வேஷம் என்று ஓர் நடிகனாய் வாழ்கிறாயா? உன் பிதா யார்? கர்த்தரா? சாத்தானா?
பெண்களே நீங்கள் அழகான ஆடை அணிவதை குறை கூற வரவில்லை. ஆனால் நீங்கள் ஆடை அணியும் போது யாரை மகிமைப்படுத்த அணிகிறீர்கள்?. பல பெண்கள் ஆடை அணியும் போது "பார்க்கும் ஆண்களுக்கு அழகாய் இருக்க வேண்டும்" என்று அணிகிறார்கள், சிலரோ "மயக்க வேண்டும்" என்று அணிகிறார்கள். நீங்கள் எந்த வகை? நீங்கள் ஒருவரை பார்க்க செல்ல உடை அணியும் போது உங்கள் நினைவுகள் என்ன? உங்களுக்கும் தேவனுக்கும் நிச்சயமாய் இது தெரியும். பாவத்தை பணம் கொடுத்து வாங்காதீர்கள்.

ஓர் பெண்ணை இச்சையோடு பார்ப்பது தவறானது. அப்படி பார்க்கிறவன் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று என்று வேதாகமம் கடுமையான எச்சரிப்புகள் கொடுக்கிறது. ஆனால் அதே வேளையில் ஓர் ஆணை பாவம் செய்ய தூண்டும் விதமாக ஆடை அணிவதும் தவறான செயல் ஆகும். சிந்தனையில் எழும் பாவமான காரியங்கள் நம்மை மட்டும் அல்ல. நம்மை சுற்றியுள்ளவர்களையும் சாம்பலாக்கி விடும்.

உங்களுக்கு ஓர் காரியம் மிகவும் பிடித்திருக்கலாம். வேதாகமத்தின் அடிப்படையில் அவை நல்லதா என்று சோதித்தறிந்து அதை செய்யுங்கள். நம்மையும் நம் பரிசுத்த தேவனையும் பிரிக்கும் எந்த ஓர் காரியத்தையும் நம் வாழ்க்கையில் அனுமதிக்காமல் இருப்பது சிறந்தது.

ஏசாயா 59:2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது;

நம் சிந்தனைகள், செயல்கள் நம் கர்த்தருக்கு வெளியரங்கமான தெரியும். நம் பாவமான காரியங்களை அவர் பார்த்துகொண்டிருக்க மாட்டார். நிச்சயம் அதற்குரிய தண்டனை நம்மை தேடி வரும்.

பாவத்தின் தண்டனையில் இருந்து மீட்பதற்க்கா இயேசு வந்தார்? அப்படி என்றால் ஏன் மக்கள் இன்னும் பாவம் செய்து கொண்டிருப்பாருக்கிரார்கள்?. இயேசு அனைத்து மக்களின் பாவங்களையும் மன்னித்து விட்டார் என்றால் மனிதன் பாவம் செய்தாலும் பரலோகம் செல்வானா? என்று பலரும் என்னிடம் கேள்வி கேட்பது உண்டு.

சில உண்மைகளை இங்கே வேத வசனங்களின் அடிப்படையில் ஆராய்வோம்.

1)பாவத்தின் தண்டனையில் இருந்து மீட்பதற்க்கா இயேசு வந்தார்?

விடை: ஆம்.. பாவத்தின் பலன் நரகம். வெளிப்படுத்தல் 21:8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

இங்கே நான்கு விதமான பாவங்களை உங்கள் முன் வைக்கிறேன், பயப்படுகிறவர்கள் (மனிதருக்கு, வாழ்க்கைக்கு, எதிர்காலத்திற்கு பயந்து இன்று மனிதன் பல மறைமுக பாவங்களில் ஈடுப்பட்டு வருகிறான்) அவிசுவாசிகள் (இயேசுவை தெய்வம் என்று நம்பாதவர்கள், மறுமையில் நமிக்கை இல்லாதவர்கள்) விபசாரக்காரர் (சிந்தனையில், செயல்களில், பார்வையில், தனிப்பட்ட விதங்களில் பாவத்தில் ஈடுபடுவோர்) பொய்யர் (பொய் சொல்லும் அனைவரும்) நரகத்தில் தள்ளப்படுவர் என்று வேதம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஆதலால் பாவத்தின் பலன் மரணம்... நித்திய மரணம்... இதில் எந்த ஓர் மனிதனும் தப்ப முடியாது

2) அப்படி என்றால் ஏன் மக்கள் இன்னும் பாவம் செய்து கொண்டிருப்பாருக்கிரார்கள்?

தேவன் சிலுவையின் மரணத்தின் மூலம் நமக்கு பாவ மன்னிப்பின் நிச்சயத்தை வைத்திருக்கிறார். இதை நாம் தேவனின் கிருபை என்கிறோம். கிருபை என்பது கிடைக்க கூடாத ஒருவருக்கு தேவன் கொடுக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். இந்த கிருபை இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதருக்கும் உள்ளது.

தீத்து 2:11. ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது

இதில் தேவனின் கிருபை நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள ஒன்று. அதை பெற்று கொள்ள நாம் முன் வர வேண்டும். பாவமான வாழ்க்கையை விட்டு வரமுடியாதபடி அதின் இன்பத்தில் திளைத்திருக்கும் யாரும் இந்த கிருபையை பெற்று கொள்ள முடியாது. உதாரணமாக தகப்பனின், தாயின் அன்பிருந்தும் பலர் இன்று காதல் என்ற போர்வையில் வீதிகளில் உலா வந்து இருட்டில் சுகம் தேடி அலைகிறார்கள் அல்லவா? அதை போல பாவம் உண்மையான தெய்வ அன்பை மனிதர்களின் கண்களில் இருந்து மறைத்து விட்டது.

3)இயேசு அனைத்து மக்களின் பாவங்களையும் மன்னித்து விட்டார் என்றால் மனிதன் பாவம் செய்தாலும் பரலோகம் செல்வானா?

இல்லை... பாவத்தோடு தேவனிடம் செல்ல முடியாது. பாவ சிந்தனையோடு, வாழ்க்கையோடு நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் வீணாய் போகும். ஆனால் பாவ மன்னிப்பு என்பது நாம் தேவனை விசுவாசிக்கும் போது நமக்கு உடனே கிடைக்கும் ஓர் ஆசீர்வாதம்.. இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் மூடும். ரோமர் 10:13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்

நீங்கள் இயேசு கிறிஸ்து என் பாவத்தை மன்னித்து விட்டார் என்று நிச்சயமாய் நம்பினீர்கள் என்றால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். எபேசியர் 2:8. "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என்கிற வசனம் தான் இதற்க்கு ஆதாரம். கிருபை என்பது நமக்கு வைக்கப்பட்டுள்ள ஒன்று. ஆனால் நாம் அதை விசுவாசிக்காவிட்டால் நமக்குள் அந்த கிருபை முழுமை பெறாது. இந்த பாவ மன்னிப்பு எந்த ஓர் செயலினாலும், உங்கள் கிரியைகளினாலும் வராது. தேவனை தேடி அவரை உங்கள் சொந்த ரட்சகராக ஏற்று கொண்டால் மட்டுமே பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொள்ள முடியும்.

ஆதலால் பாவத்தோடு பரலோகம் போக முடியாது. நீங்கள் சபையில் முக்கிய உறுப்பினராக இருக்கலாம், இசை கருவியை வாசிக்கலாம், பாடும் வரம் பெற்றிருக்கலாம், ஊழியம் செய்யலாம், பணத்தை வாரி கொடுக்கலாம். ஆனால் இது பரலோகம் செல்லும் ஓர் துருப்பு சீட்டு அல்ல. இயேசுவை உண்மையாய் விசுவாசித்து வேதாகமத்தில் தேவன் சொல்லி இருக்கிறபடி வாழ வேண்டும்.

எசேக்கியல் 18:20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.

எனக்கு அன்பானவர்களே... இதனை மனதில் வைத்துதான் பாவத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று வேதம் நமக்கு கற்று கொடுக்கிறது. பாவத்தோடு வாழ்வது சாத்தானோடு திருமண உறவாடுவதற்கு சமம். எச்சரிக்கையாய் இருப்போம்.

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லலாம். ஒரு ஆத்துமா இதன் மூலம் ரட்சிக்கப்பட்டால் தேவனின் நாமம் மகிமைப்படும் அல்லவா.. ???
 
பரிசுத்த வேதாகமம் உங்களை பாவத்தில் இருந்து பிரிக்கும்
அல்லவெனில் 
பாவம் உங்களை பரிசுத்த வேதாகமத்தில் இருந்து பிரிக்கும்

நன்றி:-