Translate

மாரா (கசப்பு) சொல்லும் செய்தி...!

    செங்கடலைக் கடந்த இஸ்ரவேலர்கள் வெகு பயணத்துக்கு பின்பு ஒரு தண்ணீர் தடாகத்தை கண்டனர். குதுகலத்துடன் நீரை அருந்தத் துவங்கினர். ஆனால் அவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த தண்ணீர் மிகவும் கசப்பாக இருந்தது. சுவை சற்று குறைவாக இருந்தாலும் பரவாயில்லை அருந்தமுடியாத அளவுக்கு கசப்பாயிருந்தால் என்னசெய்வது!?. ஏமாற்றம்; சோர்வு; தாகம் என பலவிதமான உணர்வுகள் ஒன்றுசேர்ந்து கோபமாக உருவெடுத்தது. அது அவர்களை எகிப்திலிருந்து விடுவித்து அழைத்துக்கொண்டுவந்த மோசேக்கு எதிராக முறுமுறுக்கச் செய்தது. அந்த இடத்துக்கும் கூட மாரா என்று பெயரிட்டு அழைத்தனர். மாரா என்பதற்கு கசப்பு என்று அர்த்தம்.

    தண்ணீரை கண்டவுடன் மோசேயிடத்திலும் ஆலோசனை கேட்கவில்லை கர்த்தரையும் நோக்கி பார்க்கவில்லை. ஆனால் துன்பம் வந்தபோது எதிராக பேச ஆரம்பித்தனர். இவையெல்லாம் நேர்ந்தபோது மோசே முறுமுறுத்தவர்களை சமாதானம் செய்ய செல்லவில்லை; குடிநீருக்கு மாற்றுவழி என்ன என்று ஆராயவில்லை மாறாக அவன் கர்த்தரை நோக்கிப் பார்த்தான். சகோதரனே.! சகோதரியே.! நம்முடைய வாழ்விலும் சில வாய்ப்புகள் வந்து கதவை தட்டும்போது அதை அனுமதிப்பதா வேண்டாமா என்பதை தேவனிடம் கேளுங்கள். சில தவறான முடிவுகளால் பிரச்சினைகளும் துன்பங்களும் வரும்போது பழியை அடுத்தவர் மீது சுமத்தி மற்றவர்களை குறைகூறி ஆறுதல் அடையாமல் கர்த்தரை நேக்கி பாருங்கள். மோசே கர்த்தரை நேக்கி பார்த்தபோது கர்த்தர் அவனுக்கு ஒருமரத்தை காண்பித்தார். அதை வெட்டி தண்ணீரில் போட்டபோது அந்த தண்ணீர் இனிப்பானதாக மாறியது. வேதம் சொல்லுகிறது, "அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை." (சங் 34:5). ஆம்..! கர்த்தரை நோக்கிப்பார்க்கிற ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதேயில்லை. அல்லேலூயா.

சிந்தனைக்கு:-
...உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். -(1கொரி 10:13)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக