Translate

புனிதப் பயணங்களும் புனிதப் பொருட்களும்- வரலாறு கற்றுத்தரும் பாடம்


கிழக்கு, மேற்கு சபைகள் (Eastern, western church) பெருக ஆரம்பித்த ஆரம்ப காலத்தில், எருசலேமை இஸ்லாமியர்கள் கைப்பற்றியிருந்தனர், அந்த எருசலேமை புனித நகரமாக கருதி இஸ்லாமியரை விரட்ட பல பிஷப்புகள், போப்புகள் போராடினர். போருக்கு பல பிஷப்புகளும் போப்புகளும் தலைமைவகித்து சண்டையிட்டனர், இதைத்தான் சரித்திரத்தில் சிலுவைப்போர் என நாம் அறிகிறோம் (சிலுவைப்போரை சுருக்கமாக கூறியுள்ளேன்). அன்றைக்கு சத்தியம் தெரியாததால் எருசலேமை புனித நகரமாகவும், அங்குள்ள ஆலயங்கள், நதிகளை புனித இடமாகவும், இந்த பாதிரியார்களை பார்க்கவைத்து சாத்தான் சதி செய்தான். அதனால் சிலுவைப்போரில் பலர் மடிந்தனர். இன்றைக்கும் இவர்களின் நம்பிக்கை எருசலேமுக்கு சென்று அங்குள்ள இடத்தில் வழிபட்டால், மண் எடுத்துவந்தால், ஆசீர்வாதம் என்பதில் உறுதியாயிருக்கிறார்கள்.

பின்னாளில் வந்த கர்த்தருடைய பரிசுத்தவான்கள் இதை கண்டித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சில காலம் இந்தபிரச்சனை ஓய்ந்திருந்தது, ஆனால் அந்தோ பரிதாபம் இப்போது ஆவிக்குரிய சபைகள் என்றழைக்கப்படும் சில சபைகளாலும் அவர்களின் போதகர்களாலும் இந்த உபதேசம் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. அதாவது எருசலேம் பயணத்தை சுற்றுலா பயணமாக ஆரம்பித்த இவர்கள் இப்போது இதை புனித பயணமாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். சத்தியத்தை அறிந்தவர்களுக்கும், ஆவிக்குரிய விழிப்புணர்வு அடைந்தவர்களுக்கும் இது புரியாமல் இல்லை. அன்றைக்கு மேற்கத்திய, கிழக்கத்திய சபைகள் சிலுவைப்போரில் பங்கேற்றதை விக்கிரக ஆராதனை என்று பேசும் நாம், மீண்டும் அதையே செய்வதில் என்ன அர்த்தம். எருசலேமுக்கு சுற்றுலா செல்லலாம், அங்குள்ள எதையும் ரசிக்கலாம் ஆனால் இப்போது நடப்பது சுற்றுலா அல்ல புனிதபயணம். அரசாங்கமும் இதை அறிந்துகொண்டு எருசலேமுக்கு புனிதபயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு சலுகை என்று அறிவித்திருக்கிறது.

இப்படி எருசலேமுக்கு அழைத்துச்செல்லும் சில போதகர்கள் அங்குள்ள கல்லரைகளிலும், கல்லுகளிலும் விழுந்து வணங்குவது அடிக்கடி டிவியிலும் காட்டப்படுகிறது, அதுமாத்திரமல்ல யோர்தான் நதியில் ஞானஸ்நானம் வழங்கப்படும் என்று கூறி, மக்களின் மனதில் யோர்தானை ஒரு காசியாகவும், கங்கையாகவும் இவர்கள் மாற்றிவைத்துள்ளனர். எங்கேபோகிறது நம் கிறிஸ்தவம் என கேட்கத்தோன்றுகிறது. இன்னும் சில போதகர்கள் அந்த யோர்தான் தண்ணீரை பாட்டிலில் அடைத்து எடுத்து வந்து வீட்டு வாசல், ஜன்னல்களில் தெளிக்கும்படி விசுவாசிகளை ஊக்குவிப்பது கொடுமையிலும் கொடுமை. 

யோர்தான் நதியில் ஞானஸ்நானம்
என் வீட்டு அருகாமையில் உள்ள சபையில் ஒரு வெள்ளைநிற டப்பாவில் ஜெப எண்ணையை அடைத்து 50 ரூபாய்க்கு விற்கிறார்கள், என் எதிர் வீட்டில் உள்ள பாட்டி என்னிடம் 50 ரூபாய் கொடுத்து அதை வாங்கிவரச் சொன்னபோதுதான் நிலைமையின் வீரியத்தை நான் உணர்ந்தேன், ஜெப எண்ணையை ஜண்டு பாம்போல நினைக்கவைத்துவிட்டோம், ஜெப எண்ணையை விற்க ஆரம்பித்த நாம் இப்போது யோர்தான் தண்ணீரை விற்க ஆரம்பித்துவிட்டோம், இது எப்படிப்பட்ட மூடநம்பிக்கைக்குள் கிறிஸ்தவத்தை அழைத்துச்செல்கிறது சிந்தியுங்கள் நண்பர்களே, இதை ஓருபோதும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் இப்படி இருப்பார்களானால், உடனே வசனத்தின் மூலம் எச்சரியுங்கள், தவறில்லை.....

Originally posted by,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக