Translate

வாழ்க்கை துணை

               
               சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். - (நீதிமொழிகள் 31:30).

           இரு நண்பர்கள் தொலைகாட்சியிலே திரைப்படம் ஒன்றை பார்த்து கொண்டிருந்தனர். அதில் வந்த நடிகையை பார்த்து ஒருவன் சொன்னான், 'இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள், இவளை நான் திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கையே சொர்க்கம் போலாகிவிடும்' என்றான். 

           பெரும்பாலான வாலிபர்களின் எதிர்கால கனவெல்லாம் மிக அழகான பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்பதே! அவர்களுடைய கணக்குப்படி திருமணம் என்றால் அதில் அழகே பெரும்பான்மையான இடத்தை பெறுகிறது. இந்த நடிகனை போல, நடிகையை போல வாழ்க்கை துணை அமைய வேண்டுமென்று எதிர்ப்பார்க்கின்றனர். அவர்களின் எண்ணம் அழகான துணைவர் கிடைத்து விட்டால் வாழ்வே சொர்க்கமாக மாறிவிடும் என்பதே. ஆனால் நடிகைகளையும், நடிகர்களையும் மணந்தவர்களின் வாழ்க்கை சொர்க்கமாகாமல், நரகமாகி திருமணமான சில மாதங்களிலேயே கோர்ட் வாசலில் விவாகரத்திற்காக வருவதை கேட்டிருப்பீர்கள். அப்படியென்றால் ஒரு அழகியையோ, அழகனையோ திருமணம் செய்து கொண்டால் குடும்ப வாழ்வு சொர்க்கமாகும் என்பது தவறான கருத்து என்பது தெளிவாகிறதல்லவா...!?

                                
                        இருபது வயதில் இருப்பது போலவே யாரும் வாழ்நாளெல்லாம் இருப்பதில்லை. அழகு மாறக்கூடியது.. ஆகவே இந்த வெளிப்புற அழகே உண்மையானது என்றோ, நிம்மதி தரக்கூடியது என்றோ நிரந்தரமானது என்றோ எண்ணி விடாதீர்கள். அழகியான ஒரு பெண் ஒருவனுக்கு வாழ்க்கை துணைவியாகி விட்டால் அவன் வாழ்நாளெல்லாம் சந்தோஷம் என எண்ண வைப்பது சாத்தானின் தந்திரம். அழகினால் மட்டும் ஒரு மனிதனின் குடும்ப வாழ்வு திருப்தியடையாது. வாழ்க்கை துணையை வெளிப்புற அழகிற்காக மட்டுமே திருமணம் செய்தவர்கள் நாளடைவில் அவர்களிடம் உள்ளான அழகு காணப்படாதா என் ஏங்க ஆரம்பிப்பர். நல்ல குணநலன்களும், அன்பும், மன்னிப்பும், விட்டு கொடுக்கும் தன்மைகளுமே ஒரு தம்பதியினரின் வாழ்வை இறுதிவரை இணைக்கும். 

                       நீதிமொழிகள் 31ஆம் அதிகாரத்தில் காணப்படும் குணநலன்களோடு ஒரு பெண் கிடைப்பாள் என்றால் எத்தனை அருமையான ஒரு குடும்பம் அது இருக்கும்! திருமணமாகாத வாலிபரும் சரி, பெண்களும் சரி, கர்த்தரிடம் எனக்கு இந்த தகுதிகளோடு ஒரு பெண் வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். வெளிப்புற அழகையல்ல, ஒரு இரட்சிக்கப்பட்ட மகனையோ, மகளையோ எனக்கு தாரும் ஆண்டவரே என்று ஜெபிக்க வேண்டும்.வாலிபர்கள் நீதிமொழிகள் 31ஆம் அதிகாரத்தில் காணப்படும் குணநலன்களோடு எனக்கு மனைவி அமைய கிருபை தாரும் தகப்பனே என்று ஜெபிக்கலாம். சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள் என்ற வசனத்தின்படி, கர்த்தரை நேசிக்கிற மகளோ, மகனோ கிடைக்கும்போது, அவர்கள் அழகற்றவர்களாக இருந்தாலும், இருதயத்தின் அழகு அவர்களுடைய முகத்தில் தெரியும்.

 
               'குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது' என்ற வசனம் சொல்கிறது. அழகுள்ள ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார் என்று கேட்காமல், குணசாலியான ஸ்திரீயையே முத்துக்களை பார்க்கிலும் விலையுயர்ந்தவள் என்று வேதம் கூறுகிறது. 'புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு' - (நீதிமொழிகள் 19:14) என்றும் வேதம் கூறுகிறது. அப்படிப்பட்டதான மனைவியை எனக்கு தாரும் என்று தேவனிடம் இந்த வசனத்தின் வார்த்தைகளை சொல்லி ஜெபிக்க வேண்டும். அப்போது தேவன் நிச்சயமாக நீங்கள் விரும்பும் அந்த வகையான மனைவியை உங்களுக்கு கட்டளையிடுவார்.

               நல்ல கணவர் வேண்டும் என்று ஜெபிக்கும்போது, வெளிப்புற அழகை எதிர்ப்பார்த்து மயங்கி விடாமல், 'ஆண்டவரே எனக்கு வரப்போகும் கணவர், எந்தவித கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாதவராக, உம்மை நேசிப்பவராக, இரட்சிக்கப்பட்டவராக, குடும்பத்தையும் என்னையும் நேசிப்பவராக இருக்க வேண்டுமே' என்று தினமும் ஜெபிக்க வேண்டும். உங்கள் இருதயத்தின் வாஞ்சையை அறிகிற தேவன் நிச்சயமாக உங்கள் வாஞசையின்படியே உங்கள் கணவரை கொடுப்பார்.

               திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் வாலிபரே, சகோதரிகளே, நீங்கள் கேட்கலாம், அப்படியென்றால் எனக்கு வரும் மனைவியோ, கணவனோ அழகாக இருக்க வேண்டும் என நினைப்பது தவறா? என்று. இல்லை, ஆனால அழகானவள், அல்லது அழகானவன் என்ற ஒரே காரணத்திறகாக மட்டும் திருமணம் செய்ய கூடாது. மிக குறுகிய நாட்களில் அந்த அழகை ஆராதிக்கும் நமது பண்பு மறைந்து போகும். அதன்பின் அழகையல்ல, அன்பையும் அழியாத குண நலன்களையுமே தேடுவோம். ஆகவே வரன் தேடும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்த வேலையை கர்த்தரிடம் கொடுத்து விடுங்கள். அவர் நேர்த்தியாய் நீங்கள் கேட்ட நல்ல குணத்தோடும், கேட்காத அழகோடும் வாழ்க்கை துணையை தருவார்.


Originally Posted by, 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக