Translate

மாவீரன் அலெக்சாண்டர் - தீர்க்கதரிசன நிறைவேறுதல்கள்


பரிசுத்த வேதாகமத்தில் மேசியாவின் இரண்டாம் வருகை வரையிலான பெரிய அரசுகளைப் பற்றியும் அவைகளின் எழுச்சி செயல்பாடுகள் வீழ்ச்சியை பற்றியும் விளக்கமாக கூறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மாவீரன் அலெக்சாண்டரின் கிரேக்க சாம்ராஜ்யமும் அடங்கும். இது அலெக்சாண்டர் ஆட்சிக்கு வருவதற்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு  முன்னமே,  அதாவது கி.மு. 534- ல் தானியேல் தீர்க்கதரிசியால் கூறப்பட்டதாகும். பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அந்த தீர்க்கதரிசன வார்த்தை பின்வருமாறு.

(தானி 11:2-4) …… இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான். ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.  அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.

அலெக்சாண்டர்: சுருக்கமான வரலாறு

அலெக்சாண்டர் கிமு 356 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் நாள் மாசிடோனிய அரசர்  பிலிப்புக்கும் ஒலிம்பியாசுக்கும் மகனாக பிறந்தார். அலெக்சாண்டரின் தந்தை அவருக்கு கல்வி போதிக்க மிகச்சிறந்த அறிஞரான அரிஸ்டாட்டிலை  நியமித்தார். அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கு கல்வி போதித்து அவரை  வல்லுனராக மாற்றினார்.. தன்னுடன் அரியணைக்கு போட்டியிட்ட அனைவரையும் வென்று கி.மு 336- ல் தன் 20 ஆம் வயதில் அரியணை ஏறினார்.


கி.மு.334 ல் தோராயமாக 48,100 காலாட்படை வீரர்களுடனும், 6,100 குதிரைப்படை வீரர்களுடனும் 120 கப்பல்களில் 38,000 கப்பற்படை வீரர்களுடனும் மாசிடோனியாவில் இருந்து பல்வேறு கிரேக்க மாநிலங்களின் வழியாக  புறப்பட்ட அலெக்ஸாண்டரின் படையானது தற்காலத்து துருக்கி, சீரியா, இஸ்ரேல், லெபனான், எகிப்து, லிபியா, இராக், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட வடஇந்தியாவின் சில பகுதிகளையும் வென்றது. இவ்வாறு சென்றவிடமெங்கும் வெற்றியை மட்டுமே ருசித்த அலெக்சாண்டர், மேலும் முன்னேறி செல்ல படைவீரர்கள் விரும்பாததால் தமது நாட்டுக்கு திரும்பினார். திரும்பும் வழியில் . கி.மு.323-ல் ஜூன் 10 ஆம் நாளில் தனது 32 ஆவது வயதில் பாபிலோனிலுள்ள இரண்டாம் நேபுகாத்நேசர் மாளிகையில் உயிர்நீத்தார். அவரது இறப்புக்கு பிறகு அவரது அரசு அவரது படைத்தலைவர்களால் நான்காக பிரிக்கப்பட்டது.


அலெக்சாண்டரின் போர் பயணம்

தீர்க்கதரிசன நிறைவேறுதல்கள்

* பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.  * 

கோரேஸ்,காம்பீஸஸ், கிஸ்டாஸ்பஸ் என்ற மூன்று பெர்சிய அரசர்களுக்கு அடுத்தபடியாக அரசை ஆண்ட நாலாவது அரசனான செர்சஸ் கிரேக்க அரசின்மீது படையெடுத்தான். ஆனால் சாலாமிஸ் என்ற இடத்தில் கி.மு 480-ல் தோற்கடிக்கப்பட்டார். அந்த நிகழ்வுக்கு பின்னர் கிரேக்கத்தில் தோன்றிய அலெக்சாண்டரால் அதன் புகழ் கொடிகட்டிப் பறக்கத்துவங்கியது. வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் அலெக்சாண்டர் தான் அந்த பராக்கிரமமுள்ள ஒரு ராஜா என அறியலாம்.


*அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்*

அலெக்சாண்டரின் இறப்புக்கு பிறகு அவரது அரசு அவரது படைத்        தலைவர்களால் நான்காக பிரிக்கப்பட்டது.

1.தாலமி – எகிப்து, யூதேயா, சீரியாவின் சில பகுதிகள்.

2.டிசலூக்கஸ் நிக்கொதார்- சீரியாவின் சில பகுதிகள், பாபிலோனியா       முதல் இந்தியா வரை.

3.லைசிமாக்கஸ்-ஆசியா மைனர்.

4.காசாண்டர்- கிரேக்கம், மக்கதோனியா.


* ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.*

(தாலமி, டிசலூக்கஸ் நிக்கொதார், லைசிமாக்கஸ் ,காசாண்டர்) இவர்கள் யாரும் அலெக்சாண்டரின் வழித்தோன்றல்களோ சந்ததியினரோ அல்ல. இவர்களில் ஒருவரும் முறைப்படியான அரசுரிமைக்கு உரிமையுள்ளவர்கள் அல்ல.



 *     *     *     *     *     *     * 

தேவன் சொல்லுகிறார்...
 நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது… (எசே 12:25)

கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்கதரிசனஞ் சொல்லுவார்கள். (அப் 2:17-18) 
 *     *     *     *     *     *     * 

3 கருத்துகள்: