Translate

பாவ சிற்றின்பம் , ஒரு எச்சரிக்கை…!


சீல் (Seal) 
வட துருவத்தில் வாழும் எஸ்க்கிமோ என்னும் மக்கள், பனிக்கரடியின் இறைச்சியை உண்பதையும் அதன் தோலை பதப்படுத்தி கதகதப்பான ஆடையாக அணிந்து கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பனிக்கரடியை பிடிப்பதற்கு அந்த மக்கள் ஒரு தந்திரமான முறையை கையாளுகின்றனர். சீல் (Seal) என்னும் கடல் பிராணியை கொன்று அதன் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுள் ஒரு கூர்மையான கத்தியை போட்டு வைத்துவிடுவார்கள். அங்கு பனி சூழ்ந்திருப்பதால் அந்த இரத்தம் மிகச் சீக்கிரத்தில் உறைந்துவிடும். இரத்தத்தின் வாசனையை அறிந்து வரும் கரடி இரத்தத்தினுள் கத்தி புதைந்திருப்பதை அறியாமல் உறைந்த இரத்தத்தை நாவால் சுவைக்க துவங்கிவிடும். இரத்தத்தில் நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாக அதன் நாக்கு மரத்துவிடுவதால் புதைந்திருக்கும் கத்தி அதன் நாக்கை வெட்டுவதையோ தன் நாக்கிலிருந்து வரும் சொந்த இரத்தத்தையே தான் அருந்திக்கொண்டிருப்பதையோ அறியாமல் தொடர்ந்து அருந்திக்கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட அளவுக்குமேல் இரத்தம் வெளியேறியவுடன் கரடி மயக்கமடைந்துவிடும். அதை எஸ்க்கிமோக்கள் கொண்டுசென்று கொன்று தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வர்.

அந்த பனிக்கரடி எப்படி இரத்தவாசனையை மோப்பம்பிடித்து சென்று தனது ஜீவனை இழக்கிறதோ அதுபோல பாவத்துக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமையாகி, அவற்றை தொடர்ந்து செய்து தங்களது ஆத்துமாவை பாவத்துக்கு உட்படுத்தி, தங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்டவர்கள் ஏராளம்…!  ஏராளம்…!. இயேசு சொன்னார் பாவஞ்செய்கிறன் எவனும்  பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான். (யோவா 8:34) மேலும் பாவத்துக்கு அடிமையானவர்களின் மனநிலையை வேதம் இவ்வாறாக விவரிக்கிறது.

என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள் எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன்.(நீதி 23:35)

எந்தவகை பாவமானாலும் அது மனிதனை அடிமைப்படுத்தும் வல்லமையை கொண்டுள்ளது. ஒருமுறை ஒரு பாவத்தை பயந்து பயந்து செய்தவர் மறுமுறை சற்று தைரியமாகவே செய்கிறார். சிலநேரங்களில் குறிப்பிட்ட பாவத்தை செய்யாமல் இருக்கமுடியாது என்னும் அளவுக்கு அந்த பாவம் அவரை அடிமைப்படுத்திவிடுகிறது. (உதாரணம்: கொலை கொள்ளை விபச்சாரம் மதுபானம் வீண்பொழுதுபோக்குகள் கேளிக்கைகள் கீழ்ப்படியாமை…). தண்டனைகளோ மிரட்டல்களோ குறிப்பிட்ட பாவத்திலிருந்து ஒருவரை விடுதலையாக்குவதில்லை என்பது அனுபவசாலிகளின் கருத்து. பாவம் என்றால் என்ன? யார் பாவி? என்ற கேள்விகளுக்கு வேதம் மிக அருமையான விளக்கத்தை தருகிறது.

  • நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். (1யோவா 3:4)
  • இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்(யாக் 1:15)
  • நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1யோவா 1:8)

இந்த சத்திய வசனங்களின் மூலமாக நாம் அனைவரும் பாவிகளே என்பதை அறிகிறோம். அப்படியானால் இதற்க்கு தீர்வுதான் என்ன?
  • நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1யோவா 1:9)
  • இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1யோவா 1:7)

பாவியான நபர் முதலில் வேதவசனங்களின் அடிப்படையில் தம்மை சீர்தூக்கிப்பார்த்து தனது தப்பிதங்களை உணர வேண்டும். பின்பு மனக்கசப்பு உடையவர்களிடம் மனம்பொருந்தி தனது தப்பிதங்களை ஜெபத்தின் மூலமாக இறைவனிடம் கூறி மன்னிப்பை பெறவேண்டும். விசுவாசத்துடன் மனப்பூர்வமாக நீங்கள் வேண்டிக்கொண்டால் விடாமல் பின்தொடரும் அல்லது என்னால் செய்யாமல் இருக்கமுடியவில்லையே..! என்றெல்லாம் நீங்கள் அங்கலாய்க்கும் பாவங்களிலிருந்து கூட விடுதலையை தர தேவன் வல்லவராயிருக்கிறார்.

ஜெபம்:
பரிசுத்தமுள்ள பாரமபிதாவே நான் பாவி என்று உணருகிறேன். குறிப்பிட்ட சில பாவங்கள் என்னை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. என் சுயமுயற்சிகளால் அதை என்னிடமிருந்து நீக்க முடியவில்லை. முற்றிலுமாக உம்மிடம் சரணடைகிறேன். உம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் சகல பாவங்களையும் என்னைவிட்டு நீக்கி, என்னை சுத்தியும். இயேசுவின் பெயரால் ஜெபம் கேளும் நல்ல பிதாவே. ஆமேன்.

நீங்கள் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கான ஒரு எச்சரிக்கை…!
….அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே..
(யோவா 5:14)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக